Showing posts with label புனைவு. Show all posts
Showing posts with label புனைவு. Show all posts

Wednesday, January 28, 2009

உன் காதலினால்...சில நினைவுகள்...


வேலை நிமித்தமாக ஒரு மாத காலம் வெளியூர் செல்கிறேன். நம் திருமணத்திற்குப் பின் நாம் சந்திக்கும் முதல் பிரிவு அது. நான் புறப்படும் போது கட்டி அணைத்து நீ கொடுத்த முத்தத்தின் ஈரம் பயணக்களைப்பில் முகம் கழுவிய போதும் கலையாமல் இன்னும் அப்படியே இருக்கிறது. இதற்கு முன் எத்தனையோ நாட்கள் தனிமையில் இருந்திருக்கிறேன் உணர்ந்ததில்லை. இப்போது தான் தனிமை என்னைத் தத்தெடுத்துக் கொண்டதாய் ஒரு தவிப்பு. உன் காதலின் கட்டுப்பாட்டில் கடந்து சென்ற அந்த அழகான நாட்களின் நினைவுகள் கண்ணாடியில் தோன்றும் பிம்பங்களாய் என் மனக் கண்ணாடியில் பிரதி பலிக்கின்றன.

மணமான முதல் நாள் நான் உன் விரல் தொட்ட போது ஏற்பட்ட திடீர் ஸ்பரிசத்தில் உன் உடல் நடுங்கிய அந்த அழகிய நிமிடங்கள். முதல் முத்தத்தின் போது விழிகளுக்கும் இதழ்களுக்கும் இடையே நடந்த அந்த வெட்கப் போராட்டம். இப்படி நினைத்து நினைத்து ஆனந்தப்பட ஆயிரம் நினைவுகள் என் மனதில்.

கணினி நுட்ப்பங்களையும் ஜாவா போன்ற கணினி மொழிகளையும் சுலபமாகக் கற்றுத் தெரிந்து கொண்ட எனக்கு நம் மணமான புதிதில் உன் வெட்க மொழி புரியாமல் தடுமாறி இருக்கிறேன் பல முறை. வேண்டுமென்றால் வேண்டுமென்றும் வேண்டாமென்றாலும் வேண்டுமென்றும் அர்த்தமாமே உன் வெட்க மொழியில். எந்த ஒரு அகராதியிலும் படித்ததாய் நினைவில் இல்லை இது போன்ற அழகிய அர்த்தங்களை.

அந்த மழைக்கால மாலைப் பொழுதில் மயில்தோகை நிறத்தில் புடவை அணிந்து நீ நடந்து வந்த அழகைப் பார்த்திருந்தால் மயில்கள் மயங்கித்தான் போயிருக்கும். சூடான தேனீர் கோப்பையுடன் இனிப்பான பலகாரத்தட்டுகளுமாய் என் அருகில் அமர்ந்து ஆசையாய் ஊட்டி விட்டுப் பின் கடைசியாய் நீ கொடுத்த முத்தம் அந்த மழை நேரக் குளிருக்கு சூடான தேனீரை விட சூடாகத்தான் இருந்தது. அதன் பிறகு உன் முத்தத்தின் தித்திப்பில் இனிப்பான பலகாரம் இனிப்பின்றிப் போனது ஒன்றும் ஆச்சர்யமில்லை.

நினைவலைகள் நீண்டு கொண்டே போகின்றன நிலவொளியின் எதிர்த் திசையில் நிழல்கள் நீள்வது போல்.

கைகளில் பட்டுத் தெரிக்கும் மழைத் துளியின் சிதறல்களை ரசிக்கும் குழந்தையைப் போல் உன் கன்னத்தில் பட்டு தெரிக்கும் உன் வெட்கச் சிதறல்களை ரசிப்பதற்காக வேணும்...இது போன்ற இனியொரு பிரிவுப் பயணத்தை தவிர்த்திட வேண்டும். முன்னைக் காட்டிலும் ஆவலாய் இருக்கிறேன் உன்னைப் பார்ப்பதற்கு...எனக்குத் தெரியும் நீ என்னைக் காட்டிலும் ஆவலாய் இருப்பாயென்று............................


Monday, January 5, 2009

இன்று எப்படியாவது தொட்டுவிட வேண்டும்…


அது ஒரு அதிகாலை
அதோ அந்த வெட்ட வெளியில்
கொட்டிக் கிடக்கிறது
கைப்பிடியளவு சாம்பல்
சிறிது நேரத்தில்
அதிலிருந்து உயிர்த்தெழுகிறேன்
பிறகு மேலெழுந்து
பறக்கத் தொடங்குகிறேன்
இதோ இன்னும் கொஞ்சம் தூரம் தான்
என்ற நம்பிக்கையில்
எப்படியேனும் தொட்டுவிட வேண்டும்
இந்தச் சூரியனை...
மேலே செல்லச் செல்ல
உடல் முழுதும் சூடாகிறது
இறகுகள் பற்றி எரியத் தொடங்குகின்றன
பறந்து கொண்டே இருக்கிறேன்
முழுதும் எரிந்ததும் சாம்பலாய் விழுகிறேன்
அந்த வெட்ட வெளியில்...
பகல் பறவை தன் தேடல் முடிந்து
அதன் கூடு திரும்புகிறது
இரவின் சிறகு விரியத் தொடங்கி
அதன் இரவுத் தேடல் ஆரம்பமாகிறது
அந்த இரவின் இருளோடு கைகோர்த்து
என் சாம்பலுக்குள் ஏதோ
ரசவாதம் நடக்கிறது
அடுத்த காலை
இதோ மீண்டும் சூரியன் வெளி வருகிறது
அதன் புறஊதாக் கதிர்கள்
ஓஸோன் மண்டலத்தால் புறம் தள்ளப் பட்டு
கண்ணுக்குத் தெரியாத அகச்சிவப்புக் கதிர்கள்
எட்டு நிமிடத்தில் என்னை எட்டி விடுகின்றன
ஒளி என் மேல் பட்ட உடன்
நானொரு ஃபீனிக்ஸ் பறவையாய்
உயிர்த்தெழுகிறேன்
என் சாம்பலில் இருந்து...
பறக்கத் தொடங்குகிறேன்
சூரியனை இன்று எப்படியாவது
தொட்டுவிட வேண்டுமென்று
இது நெடு நாள் நடக்கும் போராட்டம்
மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறேன்...
?
தீர்மானமாய்
நீ
எனக்குக்
கிடைக்க
மாட்டாய்
என்று தெரிந்த பின்னும்..................



(பி.கு. ஃபீனிக்ஸ் பறவை - ஒரு கற்பனை என்பது எவ்வளவு உண்மையோ அது போல் இந்தக் கவிதை(...?)யும் ஒரு கற்பனை மட்டுமே.......)