Friday, March 27, 2015

தமிழஞ்சலி...



உழைப்பதற்காக பிறப்பெடுத்தவர் லீ...
இன்று
களைப்பெழவே கண்ணயர்ந்தார்

ஒழுக்கம், உழைப்பு
என்ற இரு உளி கொண்டு
இந்நாட்டை
செதுக்கிய
புதுமை சிற்பி

இங்கே
ஏதொன்றுமில்லை
என்பதை
ஏதொன்றும் இல்லாமலில்லை
என்றாக்கியவர் 

இங்கு 
தமிழன் தமிழ் படிக்க
அவையில் கொடி பிடித்தவர் 
தமிழே 
தமிழனின் 
அடையாளமென 
அரசின் சிரசில் 
தமிழை
அச்சேற்றியவர்

பல இனம் பல மொழி
நாட்டின் பலவீனம் அல்ல 
எங்கள் நாட்டின்
பலமேயென 
பறைசாற்றியவர்...

16 செப்டம்பர் 1923 மனிதராய் பிறந்து 
23 மார்ச் 2015 புனிதராய் ஆனார் 
சிங்கப்பூரின் தந்தை 
திரு. லீ க்வான் யூ

இந்நாட்டின் 
ஆட்சி மொழிகளில்
தமிழும் 
ஒன்று,
என்றாக்கிய
மாமனிதனுக்கு
தமிழை 
தாய் மொழியாகக் கொண்ட 
அனைவரின் சார்பிலும் 
அஞ்சலி செலுத்துகிறேன்...




குறிப்பு:-

திரு. லீ க்வான் யூ 
உயிர் பிரிந்ததற்காக
இங்கு விடுமுறை இல்லை
கடைகள் மூடப்படவில்லை
வாகன இயக்கங்கள் 
நிறுத்தப்பட வில்லை
வாகனங்கள் செல்லும் வழிகள் 
மாற்றி அமைக்கப் படவில்லை
தற்கொலைகள் இல்லை
ஒரு சிறு கலகமும் இல்லை

இருப்பதெல்லாம்
மக்கள் 
மனதிலும்
விழியிலும்
பெரும் 
கலக்கம் மட்டுமே...

ஐந்து வினாடிகள் 
அவர் உடலை 
பார்த்துச் செல்வதற்கு 
ஐந்து மணி நேரமாய் 
நீண்ட...மிக நீண்ட வரிசையில்
காத்திருக்கின்றனர்
நன்றி மறவாத 
இந்நாட்டு
நம்நாட்டு 
மற்றும்
பிற நாட்டு மக்கள்...