Thursday, April 30, 2009

எதனை பரிசெனத் தருவது…?


உனக்குப் பிடிக்குமென
கவிதை சமைக்க
வார்த்தைகளைத் தேடி
கடற்கரை சென்றிருந்தேன்
காலையில் நடந்து சென்ற
உன் கால் தடங்களைத்தான்
கவிதைகளென
கடலலைகள்
எடுத்துச் செல்கின்றனவாம்

நேற்றிரவு
உன் வீட்டு மாடியிலிருந்து
நிலாவை
ரசித்துக் கொண்டிருந்தாயாமே
நிலா சொன்னது
அதுவும்
உன்னைத் தான்
ரசித்துக் கொண்டிருந்ததாம்

இன்று உன் வீட்டு வழி
கடந்து செல்ல நேரிட்டது
அங்கே
உன் கொலுசொலி வாங்கி
சங்கீதம் பயின்றன குயில்கள்
உன் முடிந்த கூந்தல்
அவிழக் கண்டு
மழைமேகம் கண்டதாய்
தோகை விரித்தன மயில்கள்
உன் அழகு நடை கண்டு
நடை பழக வந்தன மான்கள்

நானும் வந்தேன்
உன்னிடதில் காதல் பழக
மற்றவையெல்லாம் நிமிடத்தில்
கற்றுக் கொடுக்கும் நீ
காதலை கற்பிக்க மட்டும்
ஏனோ...?
காலம் கடத்துகிறாய்

நீண்ட நெடியதொரு
பார்வை பரிமாற்றத்திற்குப் பின்
ஒரு சுபயோக சுபதினத்தில்
சுவாசங்கள் பேசிக்கொள்ளும்
தூரத்தில்
உன் வெட்கத்தை சாட்சியாக வைத்து
நம் இதழ்களின் முத்தத்தால்
மாலை மாற்றிக் கொள்கிறது
நம் காதல்

பூக்கள் பறித்து பரிசளிக்க
பூந்தோட்டம் போயிருந்தேன்
உன் கூந்தல் சூடி
உதிர்ந்த பூக்களைத் தான்
பூஜைப் பூக்களென
பூத் தூவி
பூஜிக்கின்றன
அந்த
பூந்தோட்டப் பூக்களெல்லாம்

இங்கே தான்
வேறெதுவும் கிடைக்கவில்லையென
காற்றில்லாத நிலவில்
காதல் பரிசு தேடினேன்
இங்கிருந்து அங்கு சென்ற
ஒன்றிரண்டு
தேசத்துக் கொடிகள் தவிர
வேறொன்றும் அங்குமில்லை

காதல் சொன்ன உனக்கு
நான்
எதனை பரிசெனத் தருவது...?
எதை வேண்டுமானாலும் கேள்
தருகிறேன்,
என்னில் இருக்கும்
உன்னைத் தவிர..………………



(அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்...)


Thursday, April 23, 2009

பெய்யெனப் பெய்யும் காதல் மழை…


ஆகாயம் ஆனந்தமாய் பொழிந்த
அடைமழை நாளொன்றில்
கொஞ்சம் நனைந்து நீயும்
கொஞ்சம் நனையாமல் நானும்
ஒரே குடையில் நாமிருவரும்
குடைக்குள் மொத்தமாய்
நனைந்திருந்தது நம் காதல்...

ஐந்து வயது சிறுவனின்
ஐந்து வருட தவத்திற்குக்
கிடைத்த வரம் நீ...?
ஆம்,
நான் பிறந்து
ஐந்து வருடத்திற்குப்
பிறகு தானே நீ பிறந்தாய்....

ஐந்து நிமிடம் காத்திருந்ததற்காக
என் மேல் கோபப்படுகிறாய்
நான் கூடத்தான்
பிறந்து ஐந்து வருடங்களாக
உன் பிறப்பிற்காகக் காத்திருந்தேன்
அதற்காக
ஏன் இவ்வளவு தாமதமாகப்
பிறந்தாயென்று
உன் மேல் கோபப்படவா முடியும்...?

ஏழு வண்ணத்திலும்
வெட்கப்படும் வானவில் நீ
என் கைகளின் அணைப்பிற்குள்
இருக்கும் போது மட்டும்
எட்டாவது வண்ணத்திலும்
வெட்கப் படுகிறாய்...

எத்தனை முறை சொன்னாலும்
கேட்பதே இல்லை
உன் விரலையாவது
தொட்டுவிட்டுத்தான் போவேன்
என்று அடம்பிடிக்கிறது
இந்த மழைத்துளி
அதற்கும் என்னை போல்
பிடிவாதம் கொஞ்சம் அதிகம் தான்...

மழையில் நனைந்தபடி
யாருமற்ற புல்வெளியில்
என் கைப்பிடித்து நடந்தாயே
அன்று போல்
என்றும் உணர்ந்ததில்லை
நிறைவான நம் காதலை...

துளி மழை
தூரல் மழை
சாரல் மழை
அடை மழை
ஆலங்கட்டி மழை
ஏன்
அமில மழை கூடப்
பார்த்திருக்கிறதாம்...
உன் பாதம் பட்டதில் தான்
முதன் முதலாய்
அமிர்த மழை
பார்க்கப் போவதாய்
பெருமை பட்டுக்கொள்கிறது
இந்த பூமி....

சட்டெனப் பொழியும்
முத்த மழையின் போது
உன் மின்னல் வெட்கத்தில்
என் கண்களும் சேர்ந்தே
மூடிக் கொள்கின்றன
இப்போது தான் புரிகிறது
முத்தமிடும் போது ஏன்...?
கண்கள் தாமாகவே
மூடிக்கொள்கின்றனவென்று...

மழை நின்ற பின்னும்
தொடரும் மண்வாசம் போல்
நீ
விலகிச் சென்ற பின்னும்
விலகாமல்
என்னைத் தொடர்கிறது
உன் வாசம்...


Wednesday, April 15, 2009

உன் வெட்கத்தை கொஞ்சம் காவல் வைத்து...


இமை மூடி
இமை திறக்கும் நேரத்தை
ஒரு வினாடி
என்கிறோம் நாம்
உன் இதழ் மூடி
இதழ் திறக்கும்
நேரத்தைத் தான்
தேவவினாடி
என்கின்றனர் கவிஞர்கள்

உன் இமைகள் இமைக்கும்
அழகைப் பார்த்தே
பட்டாம்பூச்சிகள்
பறப்பதற்கு பழகிக்கொள்கின்றன
நீ பிறப்பதற்கு முன்பு வரை
அவை வெறும்
கூட்டுப்புழுக்களாக மட்டுமே
வாழ்ந்து
மடிந்திருக்கக் கூடும்...

தாஜ்மஹாலின்
மாதிரி வடிவம்
ஓவியனின்
கண்ணீர்த் துளிகளால்
வரையப்பட்டதாம்
மும்தாஜின்
மாதிரி வடிவத்தை
உன்னைப் பார்த்து மட்டுமே
வரைய முடியும்
என்கின்றனர் ஓவியர்கள்

உன் விழிகளின்
சிணுங்கலில் தான்
நம் காதல் பிறந்தது
உன் இதழ்களின்
சிணுங்கலில்
சிந்திய சில
துளிகளில் தான்
என் அனேக கவிதைகளும்
பிறக்கின்றன...

உனக்காக
காத்திருக்கும் வேளை
கண்ணாடிக் காகிதத்தில்
மடிக்கப்பட்ட கற்பூரமாய்
கரையாத காலம்
நீ வந்த உடன்
காகிதம் பிரிக்கப் பட்ட
கற்பூரமாய்
காதலில் கரைந்து காற்றாகிறது

காற்றில் கலைந்த
உன் துப்பட்டாவை
நீ
சரி செய்த போது தான்
முதன் முதலாய்
என் மனதும்
கலைந்து போனது
என்பது
உனக்குத் தெரியுமா...?

உன் இதழின் ஈரம்
காற்றில் களவு போகாமலிருக்க
இதழ் சார்ந்த பகுதிகளில்
உன் வெட்கத்தை கொஞ்சம்
காவல் வைத்ததில்
முன்னூறு முத்தங்களை
நம் இதழ்களே களவாடிவிட்டன
இனியொரு முறை
சரியாக எண்ணிப் பார்க்க வேண்டும்
இன்று முதல்
களவு போகும்
முத்தங்களின் எண்ணிக்கை
சற்றே கூடுதலாகக் கூட
இருக்கக் கூடும்......................



Saturday, April 4, 2009

தேவதைகள் கொண்டாடும் தினம்…



மகரந்த மழையில்
நனைந்த வண்டென
மயக்க நிலையில் நான்
உறக்கம் கலைந்தும்
கலையாத கனவு போல்
இன்று
சில நினைவுகள்...

அது...
அன்னப் பறவைகள்
பாலில் இருந்து நீரைப்
பிரித்தெடுப்பது போல்
பகலில் இருந்து இரவைப்
பிரிக்கத் துடிக்கும்
அந்தி நேரம்

முதன் முதலாய் எனக்காக
அன்று நீ
பட்டுப் புடவை அணிந்து வந்த
அழகைப் பார்த்து
உயிர் துறந்தால்
உன் உடல் தொடலாம்
என்ற ஆசையில்
தற்கொலைக்கு தயாராயின
அந்தத் தோட்டத்து
பட்டுப் பூச்சிகள்

வெட்கத்தின் காரணமாய்
அப்போது
சிறிது இடைவெளி விட்டு
அமர்கிறாய்
நம் இருவருக்குமிடையே
வெட்கமில்லாமல் வந்து
அமர்ந்து கொள்கிறது
நம் காதல்

விழிகளில் பேசியே
களைத்துப் போன
நீ
அருகிலிருந்த
மரத்தில் சாய்கிறாய்
உன் ஸ்பரிசத்தில் சிலிர்த்து
பூக்களை உதிர்த்தது
அந்த ஒற்றைப் பூவரசமரம்
இலையுதிர் காலத்தையும்
பூவுதிர் காலமாக
மாற்றி விடுகிறாய்...

எத்தனை முறை வாசித்தாலும்
முடிவதாயும் இல்லை
திகட்டுவதாயும் இல்லை
சிணுங்கும்
இந்த இருவரிக் கவிதை
முடிவில்லா கவிதைக்கு
முற்றுப் புள்ளியா
அந்த இதழோர மச்சம்...?

உன் வெட்க ஒளியில்
நட்சத்திரங்களாய் பிரகாசிக்கின்றன
நம் முத்தங்கள்
சற்றே கூடுதல் பிரகாசத்துடன்
விடிவெள்ளியாய் மின்னுகிறது
நம் முதல் முத்தம்...
என்ன இருந்தாலும்
நம் முதல் முத்தத்தின் போது
உன் வெட்கத்தின் அளவு
கொஞ்சம் அதிகம் தான்...

வருடத்தில்
ஒரு முறை வரும்
இந்நாளுக்காக
வருடம் முழுதும்
காத்திருக்கிறேன்
ஏனெனில்,
இன்று தேவதைகள்
கொண்டாடும் தினம்

தேவதைகள் மண்ணில்
பிறப்பதில்லை
எனினும்,
என் மனதில்
பிறந்த தேவதைக்கு
உன் காதலாலான இதயத்தின்
இனிய
பிறந்தநாள்
நல்வாழ்த்துக்கள்.....................



(என் வரவை எதிர் பார்த்துக் காத்திருக்கும் உனக்கு என் வாழ்த்துக்களை மட்டுமே வழியனுப்ப முடிகிறது...)