Tuesday, December 30, 2008

வெட்கங்களும் சில முத்தங்களும்...



என் கண்கள் தின்று தீர்ப்பதற்கென்று
வெட்கங்களை வாரி வழங்கும் நீ
என் இதழ்கள் இருப்பதைக்
கண்டு கொள்வதே இல்லையடி
உன் இதழ் சுழித்து நீ செய்யும்
அந்த ஒரே ஒரு சைகைக்காகத் தான்
காத்திருக்கின்றன என் இதழ்கள்
பொறுமையை ரொம்பவும்
சோதிக்காதேடி அவற்றைப் பார்த்தால்
பரிதாபமாகத் தெரியவில்லையா உனக்கு...?


அப்படி என்ன சொல்லிவிட்டேன் என்று
நீ இப்படி வெட்கப் படுகிறாய்...?
உன் இதழில் ஒரு ஓரத்தில்
இன்றிரவு மட்டும்
படுத்துறங்கிப் போகிறேன்
என்றுதானடி சொன்னேன்...



வர வர உன் வெட்கங்களுக்கு
அளவே இல்லாமல் போய் விட்டதடி
முன்பெல்லாம் என்னைப் பார்த்து மட்டும் தான்
வெட்கப் பட்டுக் கொண்டிருந்தாய்
இப்போது என் புகைப்படத்தைப்
பார்த்து கூட வெட்கப்பட ஆரம்பித்து விடுகிறாய்
இப்படியே போய்க்கொண்டிருந்தால்
என் முத்தங்களை எல்லாம்
உன் வெட்கங்கள் எப்படித்தான்
சமாளிக்கப் போகிறதோ...?


தூங்கி எழுந்ததும்
கைகளை உயர்த்தி
கழுத்தை வளைத்து
நீ சோம்பல் முறிக்கும் அழகுக்கு
சொர்க்கத்தையே எழுதி வைக்கலாமடி
கன்னத்தில் முத்தத்தை
வாங்கிக்கொள் முதலில்,
பிறகு
சொர்க்கத்தை விலைபேசிப்
பார்க்கலாம் உன் இதழில்...



குழந்தைகள் கூட
அழகாக சாப்பிடுகின்றன
உனக்கு சாப்பிடத் தெரியவில்லையடி
ஐஸ்கிரீம் இதழ்களில் வடிவதைப்
பற்றியெல்லாம் நீ கவலைப்
படாதே அதைத் துடைக்கும் வேலையை
என் இதழ்கள் பார்த்துக்கொள்ளும்...



நேரில் தான் கூச்சப் படுகிறாய் என்றால்
செல்பேசியில் முத்தமிடுவதற்குக் கூட
என்ன வெட்கம் உனக்கு...?

இதற்குத் தான் அப்போதே சொன்னேன்
என் படத்தை எல்லாம்
உன் செல்பேசியில் சேர்த்து வைக்காதே என்று...



வெட்கம் தொலைத்த நம் விரல்கள்
சத்தமில்லாமல் பேசிக் கொள்ள
ஆரம்பித்த உடன்
உன் வியர்வை படர்ந்த இதழ்களால்
ஏதோ பேசிக் கொள்கிறாயே என்னடி அது...?
விரல்களுக்கு வந்த தைரியம்
உன் உதடுகளுக்கு இன்னும் வரவில்லையா
என்று கேட்பது போல் இருக்கிறது எனக்கு
உண்மை தானா அது...?


காலையில் எழுந்ததும் கையால்
மாவுக் கோலம் போடுகிறாய்
என்னைக் கண்டதும் காலினால்
வெட்கக் கோலம் போடுகிறாய்
எனக்கும் தான் கோலம்
போடத் தெரியும்
என் இதழ்களால்
உன் இதழ்களில்
முத்தக் கோலம்
போட்டுக் காட்டவா...?


வெட்கமாக இருப்பதாக
முகத்தை மூடிக்கொண்டால்
என்னால் முத்தமிட
முடியாது என்றா நினைக்கிறாய்...?
இதழ்களில் மட்டும் தான்
முத்தமிட வேண்டும் என்ற சட்டம்
எந்த நாட்டிலும் இல்லை தெரியுமா...?


இன்றோடு ஒரு முடிவு கட்டியாக வேண்டும்
உன் வெட்கத்திற்கு...
என்ன ஆனாலும் பரவாயில்லை
நீ வெட்கப் பட்டுக் கொண்டேயிரு
நான் முத்தமிட்டுக் கொண்டே இருக்கிறேன்
காலையில் உன் இதழைப் பார்த்துத்
தெரிந்து கொள்ளலாம் முடிவை...


நான் உன்னை அணைப்பதற்குக்
கைகளை கொண்டு வரும் போதெல்லாம்
நீயோ உன் வெட்கத்தை அணைக்காமல்
விளக்கை அணைப்பதிலேயே
கவனமாய் இருக்கிறாய்
அப்படி அந்த விளக்கு
என்ன பாவமடி செய்தது...?
என் கண்கள் செய்தது போல்.....


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்


Friday, December 26, 2008

பட்டாம்பூச்சி விருதும் ஒரு குட்டிக் கதையும்...





அது ஒரு அடர்ந்த காடு அங்கு அந்த நதிக்கரையின் ஓரத்தில் உள்ள மரத்தில் கிளையின் ஒரு இலையில் வெளிர் பச்சை நிறத்திலான கூட்டுப் புழு ஒன்று வசித்து வந்தது. அது தன்னுடைய உருவத்தையும் அவலட்சணத்தையும் பார்த்து பார்க்கின்ற அனைவரும் அருவருப்பாக தன்னை ஒதுக்குவதை நினைத்து வருத்தப் பட்டு அழுகிறது. அழுது அழுது கண்ணீரால் தனக்குள் ஒரு கூட்டைக் கட்டிக் கொண்டு வெளியே வராமல் தன் கூட்டிற்குள்ளேயே வாழ்ந்து வருகிறது.

காலம் தனது காட்சியை மாற்றுகிறது. மழை நேர மாலைப் பொழுது கிழக்கே கீழ் வானத்தின் மேல் பகுதியில் மேகத்தின் நீர்க்குமிழ்களில் சூரிய ஒளி பிரதிபலித்து நிறப்பிரிகையடைந்து வானவில்லாய் ஏழு வண்ணம் காட்டுகிறது. வானவில்லின் அழகைக் கண்ட அந்தக் கூட்டுப் புழு தன் தலையை மட்டும் வெளியே நீட்டி வானவில்லைப் பார்க்கிறது. அப்போது அந்த வானவில் கூட்டுப் புழுவைப் பார்த்து கேட்கிறது...” நீ மட்டும் ஏன் இவ்வளவு சோகமாய் தனிமையில் வாழ்கிறாய்...? ” அதற்கு அந்தக் கூட்டுப் புழுநான் பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்கிறேன்...அதனால் என்னை அனைவரும் வெறுக்கிறார்கள் அதனால் தான் இப்படி இருக்கிறேன்...” என்று சொன்னது. வானவில் கேட்டதுஇதுவரை நீ யாரையாவது விரும்பி இருக்கிறாயா...?” “என்னையே யாருக்கும் பிடிக்காதபோது நான் எப்படி ஒருவரை விரும்ப முடியும்...?” அதற்கு வானவில்நீ சொல்வது தவறு நீ யாரையும் விரும்பாமல் உன்னை அனைவரும் விரும்பவேண்டும் என்று எதிர் பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்...?” “யார் இருக்கிறார்கள் நான் விரும்புவதற்கு...எல்லோருமே என்னை விட்டு விலகியே இருக்கிறார்கள்...” “உனக்கென்று யாருமே இல்லையா...?...பரவாயில்லை முதலில் என்னை விரும்பு. விரும்பும் அனைத்தும் உனக்கு அழகாய்த் தெரியும். பிறகு நடக்கும் அதிசயத்தைப் பார்என்றது அந்த வானவில்.

இப்போது அந்தக் கூட்டுப் புழு வானவில்லை ரசித்து மனதால் விரும்பத் தொடங்கியது...இதுவரை அழுத கண்ணீத்துளியின் குமிழில் அந்த வானவில்லின் ஏழு வண்ணங்கள் பிரதிபலித்து உட்கிரகிக்கப் படுகிறது. கண்ணீர் கூட்டினுள் ஒரு இரசாயன மாற்றம் நடை பெறுகிறது. சிறிது நேரத்தில் அந்தக் கண்ணீர்க் கூட்டின் இமைக்கதவு திறக்கப்படுகிறது. அந்தக் கூட்டுப் புழு உரு மாறி...நிறம் மாறி வானவில்லின் வண்ணத்தில் கைதேர்ந்த ஓவியர் ஒருவர் எண்ணத்தில் காதல் கொண்டு வரைந்த ஓவியம் போல் பார்ப்பவர் பரவசத்தால் வசீகரிக்கப் படும் அழகிய பட்டாம் பூச்சியாய் வெளி வந்து வானில் சிறகடித்துப் பறந்து திரிந்தது.

எப்படி நடந்தது இந்த அதிசயம்...? மனதில் எதையுமே ரசிக்காமல் யாரையுமே விரும்பாமல் வெறுப்போடும் சோகத்தோடும் பிறந்தோம் வாழ்ந்தோம் என்று இல்லாமல், முதலில் நாம் நம்மையும் பிறரையும் இவ்வுலகத்தையும் விரும்ப ஆரம்பித்து விட்டால். மற்றவர்களும் இவ்வுலகமும் நம்மை விரும்பும் நாள் வெகு தூரத்தில் இல்லை...


கதை முடிந்தது விசயத்திற்கு வருகிறேன்...அந்த பட பட என்று பறந்து திரியும் அந்தப் பட்டாம்பூச்சி இப்போது என் கைகளில் விருதாகக் கிடைத்திருக்கிறது.

முதலில் இந்த பட பட பட்டாம்பூச்சி விருது கொடுப்பதற்காக என்னை தேர்வு செய்து என்னை மகிழ்ச்சி சாரலில் நனையவைத்த பூர்ணிமா சரணுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது எழுத்துக்களும் வாசிக்கப் பட்டு நண்பர்களால் நேசிக்கப் படுகிறது என்று நினைக்கும் போது என் மன நூலகத்தில் நான் வாசித்து அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்கள் பெருமிதம் அடைகிறது. இன்னும் நிறைய எழுத வேண்டும் என்ற உற்சாகம் பெறுகிறேன்.

நான் பெற்ற இந்த பட்டாம்பூச்சி விருதை புதிய பிளாக்கர்களை ஊக்கப் படுத்தும் விதமாக பகிர்ந்தளிக்க பணிக்கப் பட்டிருக்கிறேன்.

அதிரை ஜமால்கற்போம் வாருங்கள்...என்று சொல்லி சில மென் பொருட்களை எளிய நடையில் கதை வடிவில் சொல்லி இருக்கிறார். சில நேரங்களில் மறைந்த மருத்துவர் மாத்ரு பூதம் அளவிற்கு இல்லாவிட்டாலும்
சில பல மருத்துவக் குறிப்புகளை அவ்வப்போது சொல்வார். இன்னும் சில நேரங்களில் புலம்பல் என்ற பெயரில் எதையாவது எழுதி அவர் செய்யும் அலம்பல் தாங்க முடியாது. இவரிடம் இருந்து நல்ல பல மென்பொருள் குறிப்புகள் எதிர் பார்க்கப் படுகிறது.

மதுநான் எழுத நினைப்பதெல்லாம்...என்று குறைவாக எழுதினாலும் நிறைவான பதிவுகள் அவருடையது. கவிதை, கதை, நகைச்சுவை என்று என்று எழுத்துப் பணி தொடர்கிறது. நேரம் கிடைக்கும் போது மட்டும் எழுதுகிறார் என்றாலும் நேர்த்தியான எழுத்துக்கள்.

ஹேமாவானம் வெளித்த பின்னும்...இவருடைய வலைப்பூ அறிமுகம் சமீபத்தில் தான் கிடைத்தது. நியூட்டனின் முதல் இயக்க விதியைத் தன்னுடைய தாக்கத்தின் வழியாக குறிப்பிட்டுள்ளார். இவருடைய கவிதைகளில் சில நேரம் காதல் தீவிரவாதம் தெரியும். சமூக அக்கரை சார்ந்த எழுத்துக்களில் வார்த்தைகள் வாள் வீச்சு போல் தெறிக்கும்.

இம்மூவருக்கும் பட பட பட்டாம் பூச்சி விருது கொடுத்தாயிற்று. இவர்கள் மென்மேலும் பல நல்ல படைப்புகளை வலையுலகிற்குத் தருமாறு வலையுலகின் சார்பாக நட்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவர்கள் செய்ய வேண்டியது :

@ இந்த பட்டாம்பூச்சி படத்தை உங்களோட ப்ளாக்ல போட்டுக்க வேண்டும்.
@ உங்களுக்கு பங்கு பிரிச்சுக் கொடுத்த எங்களை நினைக்க மறந்தால் கூட பரவாயில்லை ஆனா மறக்க வேண்டும் என்று மட்டும் நினைத்துவிடக் கூடாது.
@ நீங்களும் இந்த விருதை பாராபட்சம் பார்க்காமல் மற்றவங்களுக்கு பிரிச்சுக் கொடுத்திட வேண்டும். கொடுத்த பின் உங்கள் வலைப்பூவில் அவர்களுடைய இணைப்பை சரிபார்த்துக் கொள்ளவும்...

நன்றி...நன்றி...நன்றி....

விருதைப்
பகிர்ந்தளித்து
விட்ட
பின்னறும்
ஒட்டியே
இருக்கிறது
என்
கைகளில்
அந்த
பட்டாம் பூச்சியின்
சில
வண்ணத் துகள்கள்………

Tuesday, December 23, 2008

இன்றாயினும் எப்படியேனும்...


உன்னையே நினைந்து
உன் நினைவையே வாழ்ந்து
நீ சிரிக்கும் போது சிரித்து
அழும்போது அழுது
நீ பார்க்கும்
கண்ணாடி போல் ஆகிவிட்டேன்
உன் அருகினில் மட்டும்
எனது சுவாசம்
சுருதி மாறுவது கேட்கவில்லையா...??
உன் கண்களில் மட்டும்
என் பார்வை
பலமிழப்பதைப் பார்க்கவில்லையா...??
உன்னிடம் பேசும் போது மட்டும்
என் இதழ்கள் இறக்கை கட்டிப்
பறப்பது தான் தெரியவில்லையா...??
இன்றாயினும் எப்படியேனும்
புரிந்து கொள்ளேனடி...
இன்னும் எவ்வளவு காலம் தான்
உனக்குமாய் சேர்த்து
நானே காதலித்துக் கொண்டிருப்பது........??

Saturday, December 20, 2008

இவையெதுவும் தரவில்லை…


அழகிய நட்சத்திர ஹோட்டல்கள்
அடுக்கு மாடி ரெஸ்ட்டரண்டுகள்
எத்தனையோ பார்த்தாயிற்று
கடமைக்காய் புன்னகைக்கும்
பாசமிகு பணியாளர்கள்
போகுமிடமெல்லாம் பழகியாயிற்று
கலர்க் கலராய்ப் படம் காட்டும்
மெனுக்கார்டு உணவு வகைகள்
நாளுக்கொன்றாய்
முயற்சி செய்வதே வழக்கமாயிற்று
இவையெதுவும் தரவில்லை...??
உன் விரல் தொட்டு
ருசி பார்த்து
நீ
தரும்
அந்த நீர்மோரின் உயிர்ச் சுவை...

Wednesday, December 17, 2008

இது ஒரு ஊர்க் கோலம்…?


நான்கு வருட பட்டப் படிப்பு இரண்டு வருடம் அங்கேயே வேலை ஆக ஆறு வருட வெளி நாட்டு வாழ்க்கைக்குப் பின் என் சொந்த ஊர் வருகிறேன். அது இன்னும் இணையத்தால் இணைக்கப் படாததால். கூகிள் மேப்பில் தேடிக் கண்டறிய முடியாத எந்த ஒரு பிரபலமும் பிறக்காததால் பிரபல மடையாத ஒரு சிறிய ஊர்.

நான் வரும் பேருந்து ஊரின் எல்லைப் பகுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த சில வருடங்களாக தொலைக்காட்சியிலும் திரைப் படங்களிலும் மட்டுமே பார்த்து ரசித்த பசுமை என் பார்வைப் பசியறிந்து பரிமாறப் பட்டுக் கொண்டிருக்கிறது. அடுத்த சில மணித்துளிகளில் நிறுத்தத்தில் குலுங்கி நிற்கிறது பேருந்து. நான் இறங்க வேண்டிய இடம் என்னை வரவேற்க குடும்பத்தினர் காத்திருக்கிறார்கள். அன்பான வரவேற்பு பாசமான விசாரிப்புகளுடன் வீட்டை அடைகிறேன். நான் ஊர் வந்த விசயம் அறிந்த உறவினர்கள் சம்பிரதாய முறைப்படி சந்தித்து நலம் விசாரித்து விட்டு செல்கின்றனர்.

வீட்டிற்குள் வந்த உடன் எனக்குள் ஒரு இனம் புரியாத வெறுமை. என் கண்கள் அனிச்சையாய் யாரையோ தேடுகின்றன. என் எண்ண ஓட்டம் ஆறு வருடங்கள் பின்னோக்கி செல்கின்றது. வீட்டில் அனைவரும் அவளைக் கேலியோடு கேட்க்கின்றனர். “ஏண்டி மாமா...மாமான்னு...அவனையே சுத்தி சுத்தி வர்ரியே. இப்ப உன் மாமந்தான் வெளி நாட்டுக்குப் படிக்கப் போறானே அங்க படிச்சிட்டு அங்கேயே வேலை பார்த்து அங்க உள்ள பொண்ணாப் பார்த்து கட்டிக்கிட்டு அங்கேயே இருந்துட்டானா என்ன செய்வே...??”...பட்டென பதில் வருகிறது அந்த பன்னிரண்டு வயது சிறுமியிடமிருந்து. “என் மாமா என்னத் தவிர வேறு யாரையும் மனசால கூட நினைக்காது. எவ்வளவு வருசமானாலும் நான் என் மாமாக்காக காத்திட்டு இருப்பேன்.”

ஆறு வருடங்களில் முதல் சில வருடங்களில் அதுவும் ஆறேழு முறை மட்டும் தான் அவளுடன் பேசியிருக்கிறேன். அதன் பிறகு அவள் ஆளாகிவிட்டாலாம். பேசுவதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. பிறகு வெளி நாட்டு வாழ்க்கையின் பரபரப்பில் அவளைப் பற்றிய நினைவுகள் என் மூளையின் ஒரு மூலையில் தங்கிவிட்டன. இப்போது இங்கு வந்ததும் அவள் நினைவுகள் தவிர மற்ற அனைத்துமே நினைவிழந்து வருகிறது.

இதோ தேடிய விழிகளுக்கு விடை கிடைத்துவிட்டது. என் கண் எதிரில் பாவாடை தாவணி கட்டிய பாதரசம் போல் எதிலும் ஒட்டாமல் நான் இருந்த அறையின் கதவை ஒட்டி நிற்கிறாள்… அவள் அவளேதான். காலம் ஒரு சிறந்த சிற்பியாகத் தான் இருக்கவேண்டும் இல்லையெனில் ஆறு ஆண்டுகளில் இவ்வளவு அழகாக ஒரு சிற்பத்தை வேறு யாரால் வடித்திருக்க முடியும். என் காதுகள் கனத்துவிடக் கூடாது என்பதாலோ என்னவோ மிக மெல்லிய குரலில்...”நல்லபடியா வந்தீங்களா மாமா...??...என்னைய யாருன்னு தெரியுதா மாமா...??

அவளிடம் சிறிது விளையாட நினைத்து “யாருன்னு சரியாத் தெரியலியே...ஆமா யாரு நீ...?” சட்டென அவள் முகம் முகில் மறைத்த நிலவை போல மங்கிப்போகிறது. இதற்கு மேல் விளையாடினால் அழுதுவிடுவாள் என்று நினைத்து “உன்னை எப்படி மறக்க முடியும்...ஏன் அறைக்கு வெளியே நிற்கிறே உள்ளே வா...” “இல்ல பரவாயில்ல மாமா நான் இங்கேயே இருக்கிறேன்.” “ஏன் மௌனமா இருக்கிறே ஏதாவது பேசு அப்பல்லாம்...அது என்ன மாமா...??...இது எப்படி மாமான்னு…? ? ஏதாவது கேட்டுக்கிட்டே இருப்பியே...இப்ப ஏன் பேசத் தெரியாத பொண்ணு மாதிரி அமைதியா இருக்கிறே...??...எதாவது பேசு...”

“ஏன் மாமா இவ்வளவு நாளா வெளி நாட்டுல இருந்தீங்களே என்னைய எப்பவாவது நினைச்சிருக்கீங்களா...??” “ம்ம்ம்...நினைச்சிருக்கேன்” “அங்க பொண்ணுங்கள்லாம் அழகா இருப்பாங்களாமே...?” “ஆமா இருப்பாங்க அதுக்கென்ன...?” “இல்ல அங்க பொண்ணுங்க ஆம்பளைங்கள தொட்டுப் பேசுவாங்களாமே...??” “இப்ப உனக்கு என்ன தெரியனும் சில நேரங்கள்ல மரியாதைக்காக சில பேர்ட்ட கை குலுக்க வேண்டியிருக்கும் அதுல ஆண் பெண் பாகுபாடெல்லாம் கிடையாது அங்க அது ஒரு நாகரீகத்தின் வெளிப்பாடு அவ்வளவு தான்.”

“சரி அதவிடு உனக்கு என்ன வாங்கி வந்திருக்கேன்னு நீ கேக்கவே இல்லையே...? உனக்குப் பிடிக்குமேன்னு நீ அப்ப கேட்ட பஞ்சுமிட்டாய் கலர்ல தாவணி...ஆனா... இப்ப பார்த்தா நீயே ஒரு தாவணி போட்ட பஞ்சுமிட்டாய் மாதிரித்தான் இருக்கிறே...?” என்று சொன்னதும் வெட்க்கத்தை மொத்த விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறது அவள் முகம்...”சரி...சரி..ஒன்னே ஒன்னு கொடுத்துட்டு உனக்கு வாங்கிட்டு வந்த எல்லாத்தையும் எடுத்துட்டுப்போ...” ”ம்ம்ம்...என்ன...??...என்ன...??...மாமா ஒன்னே ஒன்னு கொடுக்கனும்...?” “ஆமா...உனக்கு எத்தன வயசாகுது...??” “அடுத்த மாசத்தோட பதினெட்டு முடியப்போகுது அத எதுக்கு மாமா இப்ப கேக்குறீங்க...??” “ஏண்டி...ஒரு பதினெட்டு வயசுப்பொண்ணு கிட்ட அவளக் கட்டிக்கப் போறவன்... என்ன கடலை மிட்டாயா கேட்பான்...??

“வேறென்ன மாமா வேணும்...??” “ஒனக்கு உண்மையிலையே புரியலையா..?.?...இல்ல புரியாத மாதிரி நடிக்கிறியா..?.?” “ஒங்களுக்காகத் தான் இத்தன வருசமா நான் காத்திட்டு இருந்தேன்...நான் ஏன் மாமா உங்ககிட்டே நடிக்கப்போறேன்...எனக்கு புரியுற மாதிரி என்ன வேணும்னு கொஞ்சம் சொல்லுகளேன்...?” “ஆங்...இப்ப இப்பத் தான் உனக்குப் புரிய ஆரம்பிச்சு இருக்கு...அந்த கொஞ்சம்ன்னு சொன்னியே அதே தான்...” “நான் சொன்னதுல என்ன மாமா இருக்கு...??” ”எனக்காகத் தான் இவ்வளவு நாள் காத்திட்டு இருக்கிறேன்னு சொன்னியே இதோ நானே வந்துட்டேன் ஒரே ஒரு முத்தம் கொடுத்துட்டு மொத்தமா நீ என்னையே எடுத்துக்கலாம்...” ”ச்ச்ச்சீசீய்ய்ய்... போங்க மாமா வெளி நாட்டுக்குப் போயி நீங்க ரொம்ப கெட்டுப் போய்ட்டீங்க...அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறந்தான்...” அப்போது அங்கு யாரோ வரும் சத்தம் கேட்டு...”மாமா யாரோ வர்ராங்க நான் அப்புறமா வர்றேன்...” என்று சொல்லி விட்டு ஓடி மறைந்து விட்டாள்.......



(பி.கு. நண்பர்களின் உணர்வுகளை உணர்ந்து (என் உணர்வுகளையும் சேர்த்துத்தான்) கதையின் முடிவு மாற்றப் பட்டுள்ளது...எனவே கதையை மீண்டும் ஒரு முறை முதலில் இருந்து படித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்...இது ஒரு கற்பனைக் கதை மட்டுமே...........)


Monday, December 15, 2008

எல்லாம் சரியாகத்தான் நடந்தது…


எந்த இடம் எந்த நேரம் தெரியவில்லை
அது ஒரு ஏகாந்த வேளை
நான்...நீ...நாம் மட்டுமே
எங்கு நோக்கினும் தனிமை
இவ்வுலகம் மிக அமைதியாக
மெல்லிய வேகத்தில்
சுழலத் தொடங்குகிறது
சுழற்சி வேகம் குறைந்ததில்
அந்த இரவு வருடங்களாய் நீண்ண்ண்டு
மெ து வா க நகர்கிறது
நிலவின் வெப்பத்தில்
குளிர்க் காற்று சூடேறி
நம் அணைப்பின் இறுக்கத்தில்
இடைவெளி தொலைத்தக் காற்று
சிரமப் பட்டு நம் சுவாசத்தை நிறைத்த போது
வெட்கம் மறந்த விழிகளுக்குள்
விழித்திருந்த உன் உறக்கத்தில்
சத்தமில்லா முத்தங்கள்
நம் இதழ்களுக்குள் நனைந்தன
அப்போது பரவிய மௌனத்தின் அலரலில்
என் செவிப்பறை தாண்டி ஒலித்த நிசப்தத்தில்
சூரிய ஒளியோடு கரைந்தது
அந்த நீண்ண்ண்ட இரவு
எல்லாம் சரியாகத்தான் நடந்தது
குழந்தை அழும் சத்தம் கேட்டு
காலையில் விழித்தெழும் வரை.......




(பி.கு. இது ஒரு கற்பனை மட்டுமே...அதனால குழந்தை அழுதுச்சா...?
உட்வார்ட்ஸ் கிராப் வாட்டர் கொடுத்தீங்களா...?...அப்படினெல்லாம் யாரும் கேட்கக் கூடாது...)

Friday, December 12, 2008

உன் விழிகளால் மட்டுமே முடியும்...



உன் கையில் வைத்திருந்த
முயலை நீ கொஞ்சும்
அழகைப் பார்த்து
இதுவரை நம்பாத கடவுளை
வேண்டிக்கொண்டேன்
அடுத்த பிறவி என்று
ஒன்று இருந்தால்
என்னவள் கைகளில் தவழும்
முயலாகப் பிறக்க வேண்டுமென்று...



அழகான பெண்களெல்லாம்
உன்னைப் போல் அழகில்லை
என்று
அழகிப் போட்டியின்
நடுவர் போல்
நம் காதல்
உன்னை தேர்ந்தெடுத்துள்ளது...



உன் வியர்வை துடைத்த
கைக்குட்டையை
நீ மடக்கி வைத்த போது தான்
முதன் முதலாய்
கசங்கியது என் மனது...



கத்தியின்றி
இரத்தமின்றி
பார்த்த ஒரே
பார்வையில்
ஒரு இதய மாற்று
அறுவை சிகிச்சை செய்ய
உன் விழிகளால் மட்டுமே முடியும்...




தினமும் மாலையில்
இருள் கவிழும் வேளையில்
உன் விரல்கள்
விளக்கேற்றும் போது
உன் முகம்
வெட்கத்தையும்
சேர்த்தே ஏற்றிவிடுகிறது...




குழந்தையாய் இருந்தபோது
அம்மாவின் கையைபிடித்து
நடந்தது போல்
நம் காதல்
என் உயிர் பிடித்து
நடக்கிறது
உன்னை நோக்கி...


Wednesday, December 10, 2008

சட்டங்கள் திருத்தப் படலாம்…



அன்று மாலை சென்னை விமான நிலையத்தில் நான் வந்த விமானம் தரையிறங்கி வழக்கமான குடியுரிமைச் சோதனைகள் முடிந்து வெளியே வருகிறேன். அப்பொழுது விமான நிலையத்தின் அடுத்த பகுதியில் வேறொரு விமானத்தில் பயணம் செய்ய வந்திருந்த சமவயதுடைய ஒரு இளைஞரை திடீரென அங்கு வந்த காவலர் சிலர் அவரிடம் ஏதோ சொல்லி விட்டு உடனே அவரை கைது செய்தனர். கையில் விலங்கிட்டு அங்கு வந்திருந்த அனைவரும் பார்த்திருக்க ஏதோ ஒரு மூன்றாம் தர ரவுடியைப் போல இழுத்துச் சென்றனர்.

அந்த இளைஞரைப் பார்த்தால் நன்கு படித்த ஒரு கௌரவமான குடும்பத்தை சேர்ந்தவர் போல் தெரிந்தது. காவலர்கள் அந்த இளைஞரை இழுத்துச் செல்லும் போது அவர் தன் கைகளால் முகத்தை மூடிய படி தலைகுனிந்து அவர்களுடன் காவலர் வண்டியில் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு கூடியிருந்தவர்களும் இது அடிக்கடி நடக்கும் வாடிக்கையான விசயம் தான் என்பது போல ஐந்து நிமிடங்கள் அதைப் பற்றி பேசிவிட்டு பிறகு அவரவர் வந்த வேலையை கவனிக்கத் தொடங்கி விட்டனர். எனக்குள் ஒரு கேள்விக்குறி அந்த இளைஞர் அப்படி என்ன தான் தவறு செய்திருப்பார் ? இதைத் தெரிந்து கொள்ள நினைத்து சற்று தொலைவில் நின்றிருந்த ஒரு காவல்துறை உயர் அதிகாரியிடம் சென்று விசாரித்தேன்.

அவர் சொன்னார் அந்த இளைஞர் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டு வெளிநாடு செல்ல திட்டமிட்டதாக அந்தப் பெண் கொடுத்த புகாரின் பெயரில் அந்த இளைஞரை கைது செய்துள்ளதாகச் சொன்னார். அப்போது “ஏன் சார் அந்த இளைஞர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் என்ன தண்டனை கிடைக்கும் ?” எனறு நான் கேட்டதற்கு “என்ன குறைந்த பட்சம் மூன்று வருடம் சிறை தண்டனை கிடைக்கும்” என்றார். இப்போது நான் “குற்றம் நிரூபிக்கப் படலைன்னா ?”
அதற்கு அவர் “இது என்ன சார் கேள்வி குற்றம் நிரூபிக்கப் படலைன்னா தான் உடனே விடுதலை செஞ்சிருவோமே ” என்றார் கடமை உணர்வோடு.

இப்ப நீங்க சொல்லுங்க அந்த இளைஞர் உண்மையிலேயே தவறு செய்து அதனால் இப்படி அவருக்குத் தண்டனை கிடைத்திருந்தால் அவர் செய்த தவறுக்கு தண்டனை கிடைத்தது சரி என்று சொல்லலாம். ஒருவேளை அவர் நிரபராதியாக இருந்து எந்த ஒரு குற்றமும் செய்யாமல் பணத்திற்காகவோ அல்லது வேறு ஏதோ ஒரு காரணத்திற்காகவோ அவர் மேல் வீண் பழி சுமத்தப் பட்டு பொய்யான புகார் கொடுக்கப் பட்டிருந்தால்.

அவர் பலர் சூழ்ந்திருக்கும் பொதுவான இடத்தில் அவரின் சுயமரியாதை சூறையாடப்பட்டு அவமானத்தால் அலைக்கழிக்கப்பட்டு எத்தனையோ ஆசைகளுடனும் கனவுகளுடனும் புறப்பட்டு வந்த பயணம் தடைபட்டு சரியான நேரத்தில் செல்ல முடியாததால் வெளிநாட்டு வேலை நிராகரிக்கப்பட்டு. இத்தகைய அவமானங்களால் அவரின் மனத் துயரம், அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் இந்தச் சமூகம் கொடுக்கும் அவப் பெயர்கள், அவர் குற்றவாளியாகச் சித்தரிக்கப் பட்டபோது பார்க்கப்பட்ட ஏளனப் பார்வைகள் எத்தனை எத்தனையோ வார்த்தைகளில் சொல்லிட முடியாது.

இப்படிப் பொய்யான புகார்களினாலும் சந்தேகத்தின் அடிப்படையில் செய்யப்படும் திடீர் கைதுகளின் பிறகு அவர் குற்றவாளி அல்ல என்று தெரிய வரும் போது அவர் கைது செய்யப்படும் போதும் இடைப் பட்ட காலத்தில் சிறையில் இருக்கும் போதும் அவரின் மனப் போராட்டங்களுக்கும் கோர்ட்டுக்கும் வீட்டுக்குமான அலைக்கழிப்புகளுக்கும் அவமானங்களுக்கும் துயரங்களும்கும் நம் நாட்டில் இந்த சட்டமும் சமூகமும் என்ன பதில் வைத்திருக்கிறது.............................?



(பி.கு. நம் நாட்டையும் சட்டத்தையும் சமுதாயத்தையும் குறை சொல்லும் எண்ணம் என்னில் அணுவினும் சிறிதளவேணும் கிடையாது...குறைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்பது மட்டுமே இப்பொழுது எனது மனக் குறையாக உள்ளது...மற்றபடி என்னை ஈன்ற பொழுது என் அன்னை சந்தோசப் பட்டதை விட இந்தியத் திருமண்ணில் என்னை ஈன்றதற்காக ஒவ்வொரு இமைப்பொழுதும் பெருமிதப் படுபவன் நான்.........)


Monday, December 8, 2008

அழகாக எரித்திடலாம்…


உடல் நடுங்கும் பனி
உதிரம் உறையும் குளிர்
ஊரெல்லாம்
கம்பளிப் போர்வைக்குள்
உறங்குகிறது
தனிமை கொண்ட
தாகத்தில் மனம்
உன் அருகாமை
தேடுகிறது
குட்டிச் சூரியனாய்
பக்கத்தில் நீ இருந்தால்
தேக வெப்பத்தில்
உன் வெட்க
மூச்சுக் கொண்டு
அழகாக எரித்திடலாம்
இந்தக் குளிர்கால இரவை...

Thursday, December 4, 2008

இன்னும் கொஞ்சம் கொஞ்சல்….




ரோஜா மலரின் இதழ்கள்
அழகாய் இருக்கிறது என்றேன்
எங்க இதழ்கள் அழகாயில்லையோ
சிறிதும் தயக்கமின்றி கேட்டு விட்டாய்
ரோஜாவின் இதழ்களில்
முத்தமிடுவது பிடிக்குமென்றேன்
சட்டென ஏதோ சொல்ல வந்தவள்
விழிகளில் வெட்கம் வர
இதழ்களை மூடிய படி
உனக்குள் ஏதோ சொல்லிக்கொள்கிறாய்...



ஒரே ஒரு முத்தம் தானே
கேட்டேன்
அதற்கு ஏனடி
இப்படி முறைக்கிறாய்
பயப்படாதே
உடனே திருப்பிக்
கொடுத்து விடுவேன்...



மென்மையாக அணைப்பது
உனக்குப் பிடித்திருக்கிறதா ?
இல்லை
இறுக்கி அணைப்பது
பிடித்திருக்கிறதா ? என்றால்
நீ கோபமாக இருக்கும் போது
வேண்டுமானால் மென்மையாக
அணைத்துக்கொள் ஆனால்
மகிழ்ச்சியாக இருக்கும் போது
இறுக்கி அணைப்பது தான்
பிடித்திருக்கிறது என்கிறாய்...



உன் முத்தத்தில்
கரைந்துபோன
என் உதடுகளை
உன் முத்தத்தால் தான்
மீண்டும் வளர வைக்க
முடியுமாம்
சீக்கிரம் வா
என் இல்லாத இதழ்கள்
உன் இதழ்களைத் தேடுகிறது...



நீ சிக்கனமானவள் தான்
வீண் செலவு
செய்யமாட்டாய் தெரியும்
முத்தம் கொடுப்பதில் கூட
சிக்கனத்தை கடைபிடித்தால் எப்படி...
வேண்டுமானால்
கட்டியணைக்கும் போது
உன் விருப்பம் போல்
நம் இடைவெளியை
சிக்கனமாக்கிக் கொள் என்றால்
ஏனடி இப்படிக் கிள்ளுகிறாய்....



என் அழுத்த முத்தத்தில்
உன் இதழ்கள்
சிவந்து விட்டதாக
என்னிடம்
குற்றம் சொல்கிறாய்
உன் செல்லச் சிணுங்கலில்
தூக்கம் தொலைத்த
நம் விழிகள்
சிவந்ததற்கு
என்ன பதில் சொல்லுகிறாய்...?




( பி.கு. மேலுள்ள வரிகளில் நான் ரோஜா என்று குறிப்பிட்டுள்ளது நடிகை ரோஜாவை அல்ல...ம்ம்ம்...எப்படியெல்லாம் விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கு...!?)


Tuesday, December 2, 2008

ஒரு நாளைக்கு 24 நிமிசம்…


எங்கே இருந்து வந்தோம்னு தெரியாது எங்க போகப் போறோம்னும் தெரியாது. இந்த ரெண்டு கேள்விக்கும் நடுவுல ஒரு அழகான வாழ்க்கை நமக்குக் கிடைச்சிருக்கு. இந்த உலகத்துல எவ்வளவோ அழகான விசயங்கள் இருக்கத் தாங்க செய்யுது. என்னிக்காவது ஒரு நாள் ஏதாவது ஒன்ன ரசிச்சிருக்கோமா ? எத்தனையோ முறை பூக்களப் பார்க்குறோம் நிலாவப் பார்க்குறோம் மழை பெய்யும் போதோ இல்ல வெயிலுக்காகவோ மரநிழல்ல ஒதுங்குறோம் என்னிக்காவது அந்த பூக்களையோ நிலாவையோ மழையையோ இல்ல அந்த மரத்தையோ ரசிச்சிருகிறோமான்னா நம்ம நிறையப் பேரோட பதில் இல்லைன்னு தாங்க இருக்கும்.

அதுக்கெல்லாம் நேரமில்லைன்னு தான் சொல்லுவோம். ஏன்னா இந்த போட்டியான இயந்திர வாழ்க்கையின் அதிவேகப் பயணத்துல நாமெல்லாம் நம்மள அறியாமலேயே கட்டாயப் பயணிகளா ஆக்கப்பட்டு இருக்குறோம். இன்றைய உலகத்துல இது தவிர்க்க முடியாத பயணம்ங்க.

ஒரு நாளைக்கு இருபத்து நாலு மணி நேரங் கூட பத்தலைன்னு சொல்லுரவங்க கூட இருக்குறாங்க. நாம வாழ்நாள்ல மூனுல ஒரு பங்க தூக்கத்துக்குன்னு ஒதுக்குவோம். இந்த தூக்கத்தக் கூட குறைச்சுக்கிட்டு எப்பப் பார்த்தாலும் எதாவது ஒரு பிரச்சனைய தலையில தூக்கிக்கிட்டு அலையிரவங்க நம்மள்ல நிறைய பேரு இருக்கிறாங்க.

இந்த உலகத்தையே தன்னோட நடிப்பால சிரிக்க வச்ச சார்லி சாப்லின் சொல்லுவாராம் மழையில நனையிரதுன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும் அப்பத் தான் நான் அழுவுரது யாருக்கும் தெரியாதுன்னு.

வாழ்க்கையில பிரச்சனை இல்லாதா மனிதனே இல்ல. பிரச்சனை இல்லாட்டி அவன் மனுசனே இல்லீங்க. ஒவொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனை இருக்கத் தாங்க செய்யுது. அத மட்டுமே நினைச்சுக்கிட்டு இருந்தா இந்த வாழ்க்கையே பெரிய பிரச்சனையாயிடுங்க.

மாற்றம்ங்கிற ஒன்னத்தவிர எல்லாமே மாறிக்கிட்டுத் தாங்க இருக்கு இந்த உலகத்துல. அதனால நம்ம வாழ்க்கையோட எல்லாக் காயங்களுக்கும் காலத்துக்கிட்ட மருந்து இருக்கு ஏன்னா காலந்தாங்க மதிப்பு இல்லாதது. ஒரு மணி நேரத்துக்கு பத்து டாலர் சம்பாதிக்கிற ஒரு தொழிலாளியும் சரி அதே ஒரு மணி நேரத்துக்கு பத்தாயிரம் டாலர் சம்பாதிக்கிற ஒரு தொழிலதிபரும் சரி, அவங்க அந்தத் தொகைய சம்பாதிக்க எடுத்துக்கிட்டது ஒரு மணி நேரந்தாங்க. அப்ப அந்த ஒரு மணி நேரத்தோட மதிப்பு பத்து டாலரா ? இல்லா பத்தாயிரம் டாலரா ? இதுக்கு விடை சொல்ல முடியாது. ஒவ்வொருத்தருக்கும் காலத்தோட மதிப்பு மாறுபடும்ங்க.

ஒரு சின்னப் பையன் தன்னோட அம்மா கிட்ட போயி கேட்டானாம் அம்மா அம்மா... அப்பாவோட சம்பளம் எவ்வளவுமான்னு அதுக்கு அவங்க அம்மா சொன்னாங்களாம் ஒரு மணி நேரத்துக்கு இருபது டாலர்ன்னு. அந்நில இருந்து அந்தப் பையன் தனக்குக் கிடைகிற பாக்கெட் மணியெல்லாம் ஒரு நாளைக்கு ஒரு டாலர்ன்னு சேர்த்து இருபதாவது நாள் தன்னோட அப்பாக் கிட்ட போயி அவன் சேர்த்து வச்ச இருபது டாலரக் கொடுத்து அப்பா அப்பா இந்தாங்க இருபது டாலர் உங்களோட ஒரு மணி நேர சம்பளம். தயவு செஞ்சி இத வச்சுக்கிட்டு என் கூட ஒரு மணி நேரம் இருங்கப்பா. நீங்க இதுவரை பத்து நிமிசங்கோட என்னோட இருந்ததில்லை உங்க கூட இருக்கணும்னு ஆசையா இருக்குன்னு சொன்னானாம்.

இந்த இயந்திர உலகத்துல நாம இழந்தது என்னானு இப்பவாவது தெரியுதா ?
இப்படியே பணத்துக்காக பாசத்த இழந்துக்கிட்டே இருந்தோம்னா. வருங் காலத்துல சாதாரண இல்லங்கள விட முதியோர் இல்லங்கள் தாங்க அதிகமா இருக்கும்.

நாம பாசத்தக் காட்டாம அவங்க கிட்ட இருந்து மட்டும் எதிர் பார்க்கிறது எந்த விதத்துல நியாயம்னு தெரியலைங்க. இப்ப நாம பாச விதைய விதைச்சாத் தானங்க எதிர்காலத்துல அதனோட நிழல எதிர் பார்க்க முடியும்.

பாசமெல்லாம் இல்லாம இல்ல அவங்க சந்தோசமா இருக்கத்தான நாங்க நேரங்காலம் பார்க்காம உழைச்சிக்கிட்டு இருக்கிறோம் அப்படீன்னு சொல்றீங்களா. நீங்க நேரமில்லன்னு பாசத்த பூட்டி வச்சிருந்தா அவங்களுக்கு எப்படிங்க தெரியும் ? அவங்களுக்காகவும் உங்களுக்காகவும் எனக்குத் தெரிஞ்ச ஒரு சின்ன வழிய சொல்லுறேன் கேளுங்க.

ஒரு நாளைக்கு இருக்கிற இருபத்து நாலு மணி நேரத்துல மணிக்கு ஒரு நிமிசமா சேர்த்து இருபத்து நாலு நிமிசத்த ஒரு நாளைக்கு நாம நமக்கே நமக்குன்னு ஒதுக்கி அதுல இருபது நிமிசத்த நம்ம குடும்பத்தோட மகிழ்ச்சியா மனம் விட்டு பேசுனம்னாவே நாம அந்த நாள் முழுசும் மகிழ்ச்சியா இருந்த சந்தோசம் கிடைக்கும்ங்க. நீங்க வேண்ணா இன்னிக்கே இத முயற்சி செஞ்சி பாருங்க. உங்களுக்கே ஒரு மாற்றம் தெரியும் அது நிச்சயமா மகிழ்ச்சியான மாற்றமாத் தாங்க இருக்கும்.

தூங்குறதுக்கு மட்டுமே மூடுற நம்ம கண்களை முழிச்சுக்கிட்டு இருக்கும் போதே இமைய மட்டும் மூடியபடி மீதியிருக்கிற நாலு நிமிசமும் அமைதியா நம்மளோட சுவாசத்த மட்டும் கவனிச்சுப் பாருங்க. முதல்ல கொஞ்சம் கஷ்டமாத் தாங்க இருக்கும் போகப் போக உங்களுக்கு அந்த நாளோட டென்சனெல்லாம் குறைஞ்சு இந்த இயந்திர வாழ்க்கை இயற்கையாகவே உங்கள் வசப்படும்ங்க............................


(ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்ற என்னுடைய 
ஒரு சிறிய முயற்சி பிழையிருப்பின் பொறுத்தருள்க.)