Thursday, July 30, 2015

சல்யூட்...டாக்டர். APJ அப்துல் கலாம்




நடவாத கனவல்ல
தாங்கள்
நடவு செய்தது
காலம்
அழிக்க முடியா
கனவுகளை
விதைத்துச் சென்றதால்
கலாம் என்ற பெயரும்
காலத்தால் அழிக்க
இயலாத
கல்வெட்டாயிற்று


தங்களின் வெள்ளை மனம் கண்டு
வெள்ளை மாளிகையும்
தன் கொடி தாழ்த்தி
அஞ்சலி
செலுத்துகிறது


யாதொரு சொத்துக்களையும்
தாம்
சேர்த்து வைக்கவில்லை
என்பதால்
நம் தேசத்தின்
விலைமதிப்பற்ற
சொத்தாயானீர்கள்


தாம் வாழ்ந்த காலத்தில்
நாங்களும்
வாழ்ந்தோம்
என்பதை
எங்கள் சந்ததிகளுக்கு
பெருமையோடு
நினைவூட்டப்போவதை
நினைத்து
சிறிது கர்வம்
கொள்கிறோம்


இணையற்ற
இறைவனின்
இதயத்தில்
இளைப்பாரட்டும்
தங்களின்
இன்னுயிர்...




                                        
                                         சல்யூட்...டாக்டர். APJ அப்துல் கலாம்...


Friday, March 27, 2015

தமிழஞ்சலி...



உழைப்பதற்காக பிறப்பெடுத்தவர் லீ...
இன்று
களைப்பெழவே கண்ணயர்ந்தார்

ஒழுக்கம், உழைப்பு
என்ற இரு உளி கொண்டு
இந்நாட்டை
செதுக்கிய
புதுமை சிற்பி

இங்கே
ஏதொன்றுமில்லை
என்பதை
ஏதொன்றும் இல்லாமலில்லை
என்றாக்கியவர் 

இங்கு 
தமிழன் தமிழ் படிக்க
அவையில் கொடி பிடித்தவர் 
தமிழே 
தமிழனின் 
அடையாளமென 
அரசின் சிரசில் 
தமிழை
அச்சேற்றியவர்

பல இனம் பல மொழி
நாட்டின் பலவீனம் அல்ல 
எங்கள் நாட்டின்
பலமேயென 
பறைசாற்றியவர்...

16 செப்டம்பர் 1923 மனிதராய் பிறந்து 
23 மார்ச் 2015 புனிதராய் ஆனார் 
சிங்கப்பூரின் தந்தை 
திரு. லீ க்வான் யூ

இந்நாட்டின் 
ஆட்சி மொழிகளில்
தமிழும் 
ஒன்று,
என்றாக்கிய
மாமனிதனுக்கு
தமிழை 
தாய் மொழியாகக் கொண்ட 
அனைவரின் சார்பிலும் 
அஞ்சலி செலுத்துகிறேன்...




குறிப்பு:-

திரு. லீ க்வான் யூ 
உயிர் பிரிந்ததற்காக
இங்கு விடுமுறை இல்லை
கடைகள் மூடப்படவில்லை
வாகன இயக்கங்கள் 
நிறுத்தப்பட வில்லை
வாகனங்கள் செல்லும் வழிகள் 
மாற்றி அமைக்கப் படவில்லை
தற்கொலைகள் இல்லை
ஒரு சிறு கலகமும் இல்லை

இருப்பதெல்லாம்
மக்கள் 
மனதிலும்
விழியிலும்
பெரும் 
கலக்கம் மட்டுமே...

ஐந்து வினாடிகள் 
அவர் உடலை 
பார்த்துச் செல்வதற்கு 
ஐந்து மணி நேரமாய் 
நீண்ட...மிக நீண்ட வரிசையில்
காத்திருக்கின்றனர்
நன்றி மறவாத 
இந்நாட்டு
நம்நாட்டு 
மற்றும்
பிற நாட்டு மக்கள்...