
தலைவியின் கடிதம் :
பொருள் தேடிப் புலம் பெயர்ந்த
என் மன்னவனே
மூன்று திங்கள் முழுதாய் முடிந்துவிட்டது
பாதித் திங்கள் பழுதின்றிப் போய்விட்டது
ஐந்து திங்களானால் அனலாய்ப் போய்விடுவேன்
பகல் பொழுதினில் பாதகமில்லை
இரவு வந்துவிட்டால்
இணைந்திருந்த நினைவெல்லாம்
இன்னல் பல காட்டுகிறது
நாம் சேர்ந்திருந்த சோலையெல்லாம்
என் சேலை பார்த்து சிரிக்கின்றது
மன்னவனே உன் சுவாசமின்றி
இங்கு மலர்களிலும் வாசமில்லை
உடல் மெலிந்தேன்
முகம் பொலிவிழந்தேன்
உறங்கும் உணர்விழந்தேன்
உள்ளத்தின் பிரிவுப் பிணி
உடல் முழுதும் படர்ந்திட்டது
பிணி போக்க மருந்தாக
நீ
வரும்
காலம்
எப்போது............?
தலைவனின் பதில் கடிதம் :
கண் இமைக்குள் வாழ்பவளே
என் இதயத்தை ஆள்பவளே
காலக்கோள் காட்டிய திசையில்
கடல் கடந்து வந்து விட்டேன்
இன்னும் சில காலம்
இருக்கலாமென எண்ணியிருந்தேன்
உன் பிரிவின் பிணி போக்க
வரும் திங்கள் வந்திடுவேன்
பொலிவிழந்த உன் முகத்தில்
முழுமதியைக் காட்டிடுவேன்
நம் பிரிவு சேரும் அப்பொழுதில்
என் வலக்கரம்
உன் வளைக்கரம் பற்றும் போது
உதறிய போர்வைக்குள் இருந்து
சிதறி மறையும் கனவுகளைப் போல
என் சுவாசச் சூட்டின் அலாவலில்
கரைந்து
மறையும்
உன்
பசலை.................
