Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Wednesday, December 10, 2008

சட்டங்கள் திருத்தப் படலாம்…



அன்று மாலை சென்னை விமான நிலையத்தில் நான் வந்த விமானம் தரையிறங்கி வழக்கமான குடியுரிமைச் சோதனைகள் முடிந்து வெளியே வருகிறேன். அப்பொழுது விமான நிலையத்தின் அடுத்த பகுதியில் வேறொரு விமானத்தில் பயணம் செய்ய வந்திருந்த சமவயதுடைய ஒரு இளைஞரை திடீரென அங்கு வந்த காவலர் சிலர் அவரிடம் ஏதோ சொல்லி விட்டு உடனே அவரை கைது செய்தனர். கையில் விலங்கிட்டு அங்கு வந்திருந்த அனைவரும் பார்த்திருக்க ஏதோ ஒரு மூன்றாம் தர ரவுடியைப் போல இழுத்துச் சென்றனர்.

அந்த இளைஞரைப் பார்த்தால் நன்கு படித்த ஒரு கௌரவமான குடும்பத்தை சேர்ந்தவர் போல் தெரிந்தது. காவலர்கள் அந்த இளைஞரை இழுத்துச் செல்லும் போது அவர் தன் கைகளால் முகத்தை மூடிய படி தலைகுனிந்து அவர்களுடன் காவலர் வண்டியில் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு கூடியிருந்தவர்களும் இது அடிக்கடி நடக்கும் வாடிக்கையான விசயம் தான் என்பது போல ஐந்து நிமிடங்கள் அதைப் பற்றி பேசிவிட்டு பிறகு அவரவர் வந்த வேலையை கவனிக்கத் தொடங்கி விட்டனர். எனக்குள் ஒரு கேள்விக்குறி அந்த இளைஞர் அப்படி என்ன தான் தவறு செய்திருப்பார் ? இதைத் தெரிந்து கொள்ள நினைத்து சற்று தொலைவில் நின்றிருந்த ஒரு காவல்துறை உயர் அதிகாரியிடம் சென்று விசாரித்தேன்.

அவர் சொன்னார் அந்த இளைஞர் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டு வெளிநாடு செல்ல திட்டமிட்டதாக அந்தப் பெண் கொடுத்த புகாரின் பெயரில் அந்த இளைஞரை கைது செய்துள்ளதாகச் சொன்னார். அப்போது “ஏன் சார் அந்த இளைஞர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் என்ன தண்டனை கிடைக்கும் ?” எனறு நான் கேட்டதற்கு “என்ன குறைந்த பட்சம் மூன்று வருடம் சிறை தண்டனை கிடைக்கும்” என்றார். இப்போது நான் “குற்றம் நிரூபிக்கப் படலைன்னா ?”
அதற்கு அவர் “இது என்ன சார் கேள்வி குற்றம் நிரூபிக்கப் படலைன்னா தான் உடனே விடுதலை செஞ்சிருவோமே ” என்றார் கடமை உணர்வோடு.

இப்ப நீங்க சொல்லுங்க அந்த இளைஞர் உண்மையிலேயே தவறு செய்து அதனால் இப்படி அவருக்குத் தண்டனை கிடைத்திருந்தால் அவர் செய்த தவறுக்கு தண்டனை கிடைத்தது சரி என்று சொல்லலாம். ஒருவேளை அவர் நிரபராதியாக இருந்து எந்த ஒரு குற்றமும் செய்யாமல் பணத்திற்காகவோ அல்லது வேறு ஏதோ ஒரு காரணத்திற்காகவோ அவர் மேல் வீண் பழி சுமத்தப் பட்டு பொய்யான புகார் கொடுக்கப் பட்டிருந்தால்.

அவர் பலர் சூழ்ந்திருக்கும் பொதுவான இடத்தில் அவரின் சுயமரியாதை சூறையாடப்பட்டு அவமானத்தால் அலைக்கழிக்கப்பட்டு எத்தனையோ ஆசைகளுடனும் கனவுகளுடனும் புறப்பட்டு வந்த பயணம் தடைபட்டு சரியான நேரத்தில் செல்ல முடியாததால் வெளிநாட்டு வேலை நிராகரிக்கப்பட்டு. இத்தகைய அவமானங்களால் அவரின் மனத் துயரம், அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் இந்தச் சமூகம் கொடுக்கும் அவப் பெயர்கள், அவர் குற்றவாளியாகச் சித்தரிக்கப் பட்டபோது பார்க்கப்பட்ட ஏளனப் பார்வைகள் எத்தனை எத்தனையோ வார்த்தைகளில் சொல்லிட முடியாது.

இப்படிப் பொய்யான புகார்களினாலும் சந்தேகத்தின் அடிப்படையில் செய்யப்படும் திடீர் கைதுகளின் பிறகு அவர் குற்றவாளி அல்ல என்று தெரிய வரும் போது அவர் கைது செய்யப்படும் போதும் இடைப் பட்ட காலத்தில் சிறையில் இருக்கும் போதும் அவரின் மனப் போராட்டங்களுக்கும் கோர்ட்டுக்கும் வீட்டுக்குமான அலைக்கழிப்புகளுக்கும் அவமானங்களுக்கும் துயரங்களும்கும் நம் நாட்டில் இந்த சட்டமும் சமூகமும் என்ன பதில் வைத்திருக்கிறது.............................?



(பி.கு. நம் நாட்டையும் சட்டத்தையும் சமுதாயத்தையும் குறை சொல்லும் எண்ணம் என்னில் அணுவினும் சிறிதளவேணும் கிடையாது...குறைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்பது மட்டுமே இப்பொழுது எனது மனக் குறையாக உள்ளது...மற்றபடி என்னை ஈன்ற பொழுது என் அன்னை சந்தோசப் பட்டதை விட இந்தியத் திருமண்ணில் என்னை ஈன்றதற்காக ஒவ்வொரு இமைப்பொழுதும் பெருமிதப் படுபவன் நான்.........)


Tuesday, December 2, 2008

ஒரு நாளைக்கு 24 நிமிசம்…


எங்கே இருந்து வந்தோம்னு தெரியாது எங்க போகப் போறோம்னும் தெரியாது. இந்த ரெண்டு கேள்விக்கும் நடுவுல ஒரு அழகான வாழ்க்கை நமக்குக் கிடைச்சிருக்கு. இந்த உலகத்துல எவ்வளவோ அழகான விசயங்கள் இருக்கத் தாங்க செய்யுது. என்னிக்காவது ஒரு நாள் ஏதாவது ஒன்ன ரசிச்சிருக்கோமா ? எத்தனையோ முறை பூக்களப் பார்க்குறோம் நிலாவப் பார்க்குறோம் மழை பெய்யும் போதோ இல்ல வெயிலுக்காகவோ மரநிழல்ல ஒதுங்குறோம் என்னிக்காவது அந்த பூக்களையோ நிலாவையோ மழையையோ இல்ல அந்த மரத்தையோ ரசிச்சிருகிறோமான்னா நம்ம நிறையப் பேரோட பதில் இல்லைன்னு தாங்க இருக்கும்.

அதுக்கெல்லாம் நேரமில்லைன்னு தான் சொல்லுவோம். ஏன்னா இந்த போட்டியான இயந்திர வாழ்க்கையின் அதிவேகப் பயணத்துல நாமெல்லாம் நம்மள அறியாமலேயே கட்டாயப் பயணிகளா ஆக்கப்பட்டு இருக்குறோம். இன்றைய உலகத்துல இது தவிர்க்க முடியாத பயணம்ங்க.

ஒரு நாளைக்கு இருபத்து நாலு மணி நேரங் கூட பத்தலைன்னு சொல்லுரவங்க கூட இருக்குறாங்க. நாம வாழ்நாள்ல மூனுல ஒரு பங்க தூக்கத்துக்குன்னு ஒதுக்குவோம். இந்த தூக்கத்தக் கூட குறைச்சுக்கிட்டு எப்பப் பார்த்தாலும் எதாவது ஒரு பிரச்சனைய தலையில தூக்கிக்கிட்டு அலையிரவங்க நம்மள்ல நிறைய பேரு இருக்கிறாங்க.

இந்த உலகத்தையே தன்னோட நடிப்பால சிரிக்க வச்ச சார்லி சாப்லின் சொல்லுவாராம் மழையில நனையிரதுன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும் அப்பத் தான் நான் அழுவுரது யாருக்கும் தெரியாதுன்னு.

வாழ்க்கையில பிரச்சனை இல்லாதா மனிதனே இல்ல. பிரச்சனை இல்லாட்டி அவன் மனுசனே இல்லீங்க. ஒவொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனை இருக்கத் தாங்க செய்யுது. அத மட்டுமே நினைச்சுக்கிட்டு இருந்தா இந்த வாழ்க்கையே பெரிய பிரச்சனையாயிடுங்க.

மாற்றம்ங்கிற ஒன்னத்தவிர எல்லாமே மாறிக்கிட்டுத் தாங்க இருக்கு இந்த உலகத்துல. அதனால நம்ம வாழ்க்கையோட எல்லாக் காயங்களுக்கும் காலத்துக்கிட்ட மருந்து இருக்கு ஏன்னா காலந்தாங்க மதிப்பு இல்லாதது. ஒரு மணி நேரத்துக்கு பத்து டாலர் சம்பாதிக்கிற ஒரு தொழிலாளியும் சரி அதே ஒரு மணி நேரத்துக்கு பத்தாயிரம் டாலர் சம்பாதிக்கிற ஒரு தொழிலதிபரும் சரி, அவங்க அந்தத் தொகைய சம்பாதிக்க எடுத்துக்கிட்டது ஒரு மணி நேரந்தாங்க. அப்ப அந்த ஒரு மணி நேரத்தோட மதிப்பு பத்து டாலரா ? இல்லா பத்தாயிரம் டாலரா ? இதுக்கு விடை சொல்ல முடியாது. ஒவ்வொருத்தருக்கும் காலத்தோட மதிப்பு மாறுபடும்ங்க.

ஒரு சின்னப் பையன் தன்னோட அம்மா கிட்ட போயி கேட்டானாம் அம்மா அம்மா... அப்பாவோட சம்பளம் எவ்வளவுமான்னு அதுக்கு அவங்க அம்மா சொன்னாங்களாம் ஒரு மணி நேரத்துக்கு இருபது டாலர்ன்னு. அந்நில இருந்து அந்தப் பையன் தனக்குக் கிடைகிற பாக்கெட் மணியெல்லாம் ஒரு நாளைக்கு ஒரு டாலர்ன்னு சேர்த்து இருபதாவது நாள் தன்னோட அப்பாக் கிட்ட போயி அவன் சேர்த்து வச்ச இருபது டாலரக் கொடுத்து அப்பா அப்பா இந்தாங்க இருபது டாலர் உங்களோட ஒரு மணி நேர சம்பளம். தயவு செஞ்சி இத வச்சுக்கிட்டு என் கூட ஒரு மணி நேரம் இருங்கப்பா. நீங்க இதுவரை பத்து நிமிசங்கோட என்னோட இருந்ததில்லை உங்க கூட இருக்கணும்னு ஆசையா இருக்குன்னு சொன்னானாம்.

இந்த இயந்திர உலகத்துல நாம இழந்தது என்னானு இப்பவாவது தெரியுதா ?
இப்படியே பணத்துக்காக பாசத்த இழந்துக்கிட்டே இருந்தோம்னா. வருங் காலத்துல சாதாரண இல்லங்கள விட முதியோர் இல்லங்கள் தாங்க அதிகமா இருக்கும்.

நாம பாசத்தக் காட்டாம அவங்க கிட்ட இருந்து மட்டும் எதிர் பார்க்கிறது எந்த விதத்துல நியாயம்னு தெரியலைங்க. இப்ப நாம பாச விதைய விதைச்சாத் தானங்க எதிர்காலத்துல அதனோட நிழல எதிர் பார்க்க முடியும்.

பாசமெல்லாம் இல்லாம இல்ல அவங்க சந்தோசமா இருக்கத்தான நாங்க நேரங்காலம் பார்க்காம உழைச்சிக்கிட்டு இருக்கிறோம் அப்படீன்னு சொல்றீங்களா. நீங்க நேரமில்லன்னு பாசத்த பூட்டி வச்சிருந்தா அவங்களுக்கு எப்படிங்க தெரியும் ? அவங்களுக்காகவும் உங்களுக்காகவும் எனக்குத் தெரிஞ்ச ஒரு சின்ன வழிய சொல்லுறேன் கேளுங்க.

ஒரு நாளைக்கு இருக்கிற இருபத்து நாலு மணி நேரத்துல மணிக்கு ஒரு நிமிசமா சேர்த்து இருபத்து நாலு நிமிசத்த ஒரு நாளைக்கு நாம நமக்கே நமக்குன்னு ஒதுக்கி அதுல இருபது நிமிசத்த நம்ம குடும்பத்தோட மகிழ்ச்சியா மனம் விட்டு பேசுனம்னாவே நாம அந்த நாள் முழுசும் மகிழ்ச்சியா இருந்த சந்தோசம் கிடைக்கும்ங்க. நீங்க வேண்ணா இன்னிக்கே இத முயற்சி செஞ்சி பாருங்க. உங்களுக்கே ஒரு மாற்றம் தெரியும் அது நிச்சயமா மகிழ்ச்சியான மாற்றமாத் தாங்க இருக்கும்.

தூங்குறதுக்கு மட்டுமே மூடுற நம்ம கண்களை முழிச்சுக்கிட்டு இருக்கும் போதே இமைய மட்டும் மூடியபடி மீதியிருக்கிற நாலு நிமிசமும் அமைதியா நம்மளோட சுவாசத்த மட்டும் கவனிச்சுப் பாருங்க. முதல்ல கொஞ்சம் கஷ்டமாத் தாங்க இருக்கும் போகப் போக உங்களுக்கு அந்த நாளோட டென்சனெல்லாம் குறைஞ்சு இந்த இயந்திர வாழ்க்கை இயற்கையாகவே உங்கள் வசப்படும்ங்க............................


(ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்ற என்னுடைய 
ஒரு சிறிய முயற்சி பிழையிருப்பின் பொறுத்தருள்க.)