
உன் வெட்கத்தைக் கொஞ்சம்
கடன் வாங்கி மெல்லச் சிவந்தது
அந்தி வானம்
உன் ஒரு துளி வியர்வை பட்டு
அணையத் தொடங்கியது
மாலை சூரியன்
கடற்கரை மணற்பரப்பில்
உனக்காக நெடுநேரம் காத்திருக்கிறேன்
கோடானகோடி ஆண்டுகளாய்
உன் வரவுக்காக
அங்கு கடலும் காத்திருந்தது
முதன் முதலாய்
உன்னைப் பார்த்த மகிழ்ச்சியில்
அன்று கடல் அலையின் வேகம்
சற்று கூடித்தான் போயிருந்தது
அதுவரை கரை தாண்டிடாத கடலலைகள்
உன் பாதத்தையாவது
தொட்டு விட முயன்று கொண்டிருந்தன
நீயும் முயன்று கொண்டிருந்தாய்
என் கண்களுக்குள் சிக்கியிருந்த
உன் அழகைக் காப்பாற்றுவதற்காக
உன் கூந்தலில் சூடிக்கொள்வதற்காக
கிள்ளியெடுக்கப் பட்ட
மெல்லிய பூக்களிலெல்லாம்
அள்ளித் தெளிக்கப் பட்டிருந்தது
என் தொடுதலின் போது
உன் முகத்தில் பூத்திருக்கும்
வெட்கத்தின் வண்ணம்
ஊடலென்பதே கூடாதென்றிருந்தேன்
காதலில் நாம் மட்டும் விதிவிலக்கா என்ன...?
ஒன்றுமில்லாத ஒன்றிற்காக
நமக்குள் ஒரு சிறு ஊடல்
நீ என்னிடம் கோபமாயிருக்கிறாய்
தொட்டாலே பார்வையால் சுட்டுவிடுகிறாய்
என்ன செய்வது...?
அதுவரை முத்தம் கொடுத்த
குழந்தை சட்டென
கன்னத்தைக் கடித்துவிட்டால்
கோபமா வரும்...?
அள்ளியெடுத்துக் கொஞ்சத்தானே தோன்றும்
எனக்கும் அப்படித்தான் தோன்றியது...
முடிவில் யார் தான் வென்றது...?
வென்றது காதல்...
எப்படி...?
மனதில் தோன்றியதை
அப்படியே கடைபிடித்ததில்
ஊடல் தோற்றுவிட்டது.............
இந்த கவிதையை யூத்ஃபுல் விகடனில் படிக்க இங்கு செல்லலாம்...
