
உனக்கு நினைவிருக்கிறதா...?
நம் முதல் சந்திப்பு
அந்த செவ்வரளி மரத்தின் நிழல்
அதுவரை நுகர்ந்திராத
ஏதோ ஒரு மலரின் வாசம்
வாசனைக்கு வசப்பட்ட
வண்டு ஒன்று
அந்த பட்டப் பகலில்
மலர்களை
வட்டமடித்துத் திரிந்தது
அங்கே
நம் பார்வைகள்
பயிரிடப்பட்டதில்
அமோகமாய்
விளைந்திருந்தது காதல்
உன் காதலின் கவன ஈர்ப்புத்
தீர்மானத்தில் கைது செய்யப்பட்டன
என் கனவுகள்
உன் வீட்டிற்குத் தெரியாமல்
எனக்காக நீ மறைத்து
எடுத்து வந்திருந்த
வாழ்த்து அட்டை
காதலர்கள் பரிமாறிக் கொண்ட
முதல் பரிசுப் பொருள்
மலர்களாகத் தான்
இருக்க வேண்டும்
என்ற நம்பிக்கையில்
சற்று தள்ளியதொரு கடையில்
உனக்காக
நான் வாங்கிய
வேற்று தேசத்தில்
பூத்த பூவொன்று
விற்றுக் கொண்டிருந்த
சிவப்பு ரோஜாக்கள்
நான் கவனித்தேன்
காதலர்கள்
தன்னைத்தான் அதிகமாக
பரிமாறிக் கொள்கிறார்கள் என்ற
கர்வத்தில் அந்த ரோஜாவுக்கு
ஒரு முள் முளைத்திருந்தது
எப்படி காதலை சொல்லிக்கொள்வது
என்று தெரியாமல் அங்கு
அடர்ந்திருந்த மௌனங்கள்
அந்த இரண்டு நிமிட மௌனதில்
தொலைந்து போயிருந்தது
என் இரண்டு வருட ஆயுள்...
கடைசியில் எப்படித்தான்
சொல்லிக் கொண்டோம்
நம் காதலை...?
வார்த்தையில் சொல்லியிருந்தால்
எழுதிக்காட்டிவிடலாம்
மௌனத்தை எப்படி எழுத முடியும்...?
முத்தங்கள் என்ற பெயரில்
வெறும் சத்தங்களை மட்டுமே
பரிசளிக்க முடிந்த
சென்ற வருடம் போல்
இந்த வருடமும் முடியவில்லை
காதலர் தினத்தில்
உன்னை சேர்வதற்கு
ஆதலால்,
பதிவுத் தபாலில் பாசம்
பார்சலில் வந்திருக்கிறது
நம் வாழ்த்து அட்டைகளைத் தான்
சொன்னேன்
இப்போதைக்கு எனக்கு இருக்கும்
ஒரே ஆறுதல்
எத்தனை முறை படித்தாலும்
புதிதாகத் தோன்றும்
உன் முதல் கடிதத்தின்
கடைசி வரிகள் தான்
நீ அலைபேசியில் அனுப்பிய
இரண்டு குறுஞ்செய்திகள்
வாசித்துப் பார்த்தேன்
எனக்குத் தெரியும்
அவை காதலினால் வந்த
உன் கவிதையின் முயற்சி
உனது முதல் கவிதை
*“உன் மனதில்
நான் குடியிருக்கிறேன்
என்னைப் பார்க்க
ஆசையாய் இருந்தால்
உன்
இதயத்தில்
கை வைத்துப் பார்
உன் அன்புக்காக
நான் துடிப்பது தெரியும்...”
படித்ததும் நெகிழ்ந்தேன்...
உனது அடுத்த கவிதை
*“முதல் முறையாக
என்னை நினைத்து
நீ
கண்ணீர் விடுவாய்
எழுந்து உன் கண்ணீரைத்
துடைக்க முயற்சி செய்வேன்
நான்
இறந்துவிட்டேன்
என்பதையும் அறியாது...”
படித்ததும் அழுதேன்...
அதுவரை கொட்டிய மழை சட்டென நின்றது...மெல்லத் தெளிந்திருந்தது வானம்...என் மனதும் தான்...
இதோ புறப்பட்டுவிட்டேன் இந்தக் காதலர் தினம் மட்டுமல்ல வரும் எந்தக் காதலர் தினமும் இனி உன்னோடு தான்...நான் காதலிக்கிறேன் என்பதினாலல்ல உன்னால் இந்த அளவு காதலிக்கப் படுகிறேன் என்பதில் தான் பெருமிதம்கொள்கிறது நம் காதல்...
(பி.கு. * குறிப்பிட்ட இரண்டு கவிதைகளும் மேலே சொன்னது போல் எனக்குக் குறுஞ்செய்தியில் வந்தவையே..........)
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்...
