Monday, February 2, 2009

இன்றும் தொடர்கிறது…


நமக்கான தனிமையின் எல்லைகள்
வரையறுக்கப் பட்டிருக்கவில்லை
என்ற போதிலும்
எனக்கான அவளைப் பற்றியும்
உனக்கான அவனைப் பற்றியும்
இரண்டங்குல இடைவெளியில்
பேசிக் கொண்ட ரகசியங்கள்
நமக்கான உறவில்
எந்த ஒரு மாற்றத்தையும்
ஏற்படுத்தி இருக்கவில்லை
இவன் தான் உனக்கான அவன் என்று
நீ அவனுடைய புகைப்படம் காட்டி
உனக்கு பிடித்திருக்கிறதா...?
என்று கேட்க்கும் வரை
அதன் பிறகு
நமக்கான இடைவெளி அகண்டது
அந்த அகண்ட வெளி முழுதும்
அர்த்த மற்ற எண்ணங்கள்
ஆக்கிரமித்துக் கொண்டன
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
சொல்ல வந்து சிதறுண்டன சொற்கள்
கால தாமதமாக எழுதப் பட்ட காதலால்
இலக்கணப் பிழையோடு
இன்றும் தொடர்கிறது
நமது நட்பு...................