Friday, January 9, 2009

காதலாய்…என் டைரியின் சில பக்கங்கள்...



அவள் பெயர் மீரா. இதுவரை எந்தக் கண்ணனுக்காகவும் காத்திருந்ததாய் அவளில்லை. சில பெண்களைப் பார்த்தால் மீண்டும் ஒரு முறை பார்க்கத் தோன்றும் வேறு சில பெண்களிடம் பார்த்த உடனே பேசத் தோன்றும் வெகு சில பெண்களை மட்டுமே பக்கத்தில் பார்த்தாலும் எதுவுமே தோன்றாது, ஆனால் நம்மை விட்டு விலகிச் செல்லும் போது இதயம் துடிப்பது போல் இமைகளும் படபடக்கும். இதில் மீரா மூன்றாம் வகையைச் சார்ந்தவள். அவள் வயதென்ன...?...பெண்களிடம் கேட்கக் கூடாத கேள்வி அதானால் வேண்டாம். அவள் எப்படி இருப்பாள்...?...தாஜ்மஹாலுக்கு சுடிதார் போட்டு யாராவது பார்த்திருக்கிறீர்களா...?...அவள் சுடிதார் அணிந்து வந்தால் அப்படித்தான் இருக்கும்.

எங்கள் தெருவில் இருக்கும் நடனப் பள்ளியின் மாணவியவள். எப்படி இங்கு வந்து சேர்ந்திருப்பாள்...?... ஒரு வேளை யாராவது இங்கு மயில்களுக்கு நடனம் கற்றுக் கொடுப்பதாய் அவளிடம் தவறாகச் சொல்லி இருப்பார்களோ...?. கால்களில் சலங்கை கட்டி கைகளில் முத்திரை காட்டி விரல்களில் அபிநயம் பிடித்து இதழ்களில் ஜதி சொல்லி விழிகளில் விசித்திரம் படைக்கும் அதிசய தேவதையவள். முதன் முதலாய் அவளைப் பார்த்தது இன்னும் நினைவில் இருக்கிறது. அப்போது நினைத்துக் கொண்டேன் இவளைப் படைப்பதற்கு மட்டும் இறைவன் சற்றுக் கூடுதலாக நேரம் எடுத்துக் கொண்டிருப்பான் போலும்.

சலங்கை ஒலியோடு சிரிப்பொலியும் சேர்ந்து ஸ்வரங்கள் தாண்டிய ஒரு இசை அவள் நடந்து செல்லும் போதெல்லாம் ரசிக்கத் தவறியதில்லை. அன்று தான் அதுவரை வெற்றுக் காகிதங்களாய் இருந்த என் டைரியின் பக்கத்தில் முதல் முத்திரையாக அவள் பெயரை பதித்தது என் பேனா.

பின் வரும் நாட்களில் எங்களுக்குள் பார்வைகள் பேச்சுக்களாயின நட்பு நடை பயின்றது. எனக்கு இன்னது பிடிக்கும் உனக்கு என்ன பிடிக்கும் என்று பிடித்தவை பிடிக்காதவை என்று தொடங்கி அரசியலில் ஆரம்பித்து ஆன்மீகம் வரை பேசினோம். காதல் பற்றியும் பேசினோம்...ஆமாம், எங்கள் காதல் தவிர மற்ற அனைவருடைய காதல்களைப் பற்றியும் பேசினோம். நாட்களில் தொடந்த நட்பு மாதங்களைக் கடந்து ஆண்டுகளை அடைந்து கொண்டிருந்தது.

அன்று காலை மீராவிடம் இருந்து போன் வந்தது அரசுத்துறையில் பணிபுரியும் தன் அப்பாவிற்கு பதவி உயர்வோடு இடமாற்றமும் கிடைத்திருப்பதாகவும் அவர்கள் நாளைக்கே வடநாட்டுப் பக்கம் உள்ள ஒரு நகரத்திற்கு செல்ல விருப்பதாகவும். மாலையில் என்னை கட்டாயம் சந்திக்க வேண்டுமென்று என்னை அவள் வீட்டுற்கு வரச் சொல்லியிருந்தால். நானும் இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது இன்று எப்படியாவது என் காதலை மீராவிடம் சொல்லிவிட வேண்டும் என்று நினைத்து.  இவ்வளவு நாள் மனதிற்குள் மறைத்ததை இன்று கடிதத்தில் எழுதி என் கைகளுக்குள் மறைத்து வைத்துக் கொண்டு மாலையில் அவள் வீட்டிற்கு செல்கிறேன்.

என்னைக் கண்டதும் வாசலுக்கு ஓடி வந்து...”உனக்காகத்தாம்பா காத்துக்கிட்டு இருக்கிறேன். அப்பாவும் அம்மாவும் இப்பத்தான் வெளியில போறாங்க நாளைக்குக் காலையில அப்பாக்கு வேளை மாற்றலான ஊருக்குப் போகப் போறோம்ல...அதான் தெரிஞ்சவங்க கிட்ட சொல்லிட்டு வரப் போயிருக்காங்க.. நானும் எல்லார் கிட்டயும் போன்லயே சொல்லிட்டேன் ஆனா உன்ன மட்டும் நேர்ல பார்க்கனும் போல இருந்தது அதான் உன்ன வீட்டுக்கு வரச்சொன்னேன்.” என்று பட படவென்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தால்.

அப்போது நான்ஏன் மீரா இந்த ஊரவிட்டு எங்களயெல்லாம் விட்டுட்டுப் போக உனக்கு வருத்தமா இல்லையா...?” அதற்கு அவள் வருத்தமாத்தாம்பா இருக்கு மத்தவங்களவிடு உன்ன விட்டுப் போறோமேன்னுதான் ரொம்ப வருத்தமா இருக்கு என்ன செய்ய ...?...ஆனா,  உன்ன மட்டும் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஏன் தெரியுமா...?...பழகின மூனாவது நாளே லவ் லட்டரோட வந்து நிக்கிற பசங்களுக்கு மத்தியில இவ்வளவு நாள் பழகியும், ஒரு நல்ல நண்பனா தூய்மையான தோழனா என்கிட்ட பழகின விதம் என்னால என்னைக்குமே மறக்க முடியாது...”அப்போது நான் அவளிடம் சொல்ல வந்த வார்த்தைகள் அனைத்தும் என் நாவின் நுனிவரை வந்து உமிழ்நீருக்குள் அமிழ்ந்து போயின.

அதன் பிறகு அவள் சொன்ன வார்தைகள் எதுவும் என் செவிகளில் விழவில்லை. அவளிடம் எப்படி விடை பெற்று வீடு வந்து சேர்ந்தேன் என்று இதுவரை எனக்குத் தெரியவில்லை. காதலில் உருகி உருகி எழுதிய என் விரல்களே முதலும் கடைசியுமான என் காதல் கடிதத்தைக் கிழித்தெறிந்தன இதயத்தில் வலியோடு.

அதுவரை என் டைரியின் பக்கங்களில் மூன்று புள்ளி வைத்து அடுத்த பக்கத்தை அடுத்த நாள் தொடருவதை வழக்கமாக்கியிருந்தேன். இப்போதும் மூன்று புள்ளி வைக்கிறேன் அவள் நினைவுகளையாவது தொடர வேண்டுமென்று ...முடிவில் என்னையும் அறியாமல் ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறது என் கண்ணீர்த் துளி...

என் டைரியின் பக்கங்கள் மீண்டும் வெற்றுக் காகிதங்களாகவே இன்றும்...

இது போல் இன்னும் எத்தனை வீடுகளில் டைரியின் பக்கங்கள் எழுதப் படாமல் வெற்றுக் காகிதங்களாய் இருக்கின்றனவோ...?...ஆசை ஆசையாய் எழுதப்பட்ட எத்தனை காதல் கடிதங்கள் கொடுக்கப் படாமல் இப்படிக் கிழிக்கப் பட்டிருக்கின்றனவோ...?

உடைக்கப் படாத உண்டியலில் ஆசையாய் சேர்த்து வைத்த சில்லரைக் காசுகளைப் போல் ஒவ்வொருவர் மனதிலும் திறக்கப் படாத நினைவுகள் சில மறக்கப் படாமல் இருக்கத்தான் செய்கின்றன. பழைய நினைவுகளில்  மனநீராடி நிகழ்வுலகிற்கு வருகிறேன். இங்கே இப்போது அன்பாய் அழகாய் என் மனைவி.
தத்தித்தாவி என் மடியில் கட்டிப்புரண்டு தன் வெள்ளைச் சிரிப்பில் என்னை சிறை வைக்கும் குட்டி தேவதையாய் என் செல்ல மகள். இப்போது இவர்கள் தான் என்னுலகம்.
இதோ சமையலறையில் இருக்கும் என் மனைவி விளையாடிக் கொண்டிருக்கும் என் மகளை அழைத்து ஏதோ சொல்லுகிறாள்...என்னவென்று கேட்போமா...

”மீரா.............!... அப்பா எழுந்துட்டாங்களான்னு பாரும்மா...எழுந்த உடனே காஃபி கேட்டாங்க...”

இந்த குட்டி மீரா போன்ற குழந்தைகளின் பெயர்களுக்குப் பின்னால் சொல்லப் படாத காதல்கள் எத்தனை எத்தனையோ.................................?



(பி.கு. இது 99.99% கற்பனை மட்டுமே...நமக்கு டைரி எழுதுர பழக்கமெல்லாம் கிடையாது. அப்படியே எழுதினாலும் கவிதைன்ற பேரால எதையாவது கிறுக்கி வைப்போமே தவிர சொந்தக் கதை சோகக் கதையெல்லாம் எழுத மாட்டோம்...பிற்காலத்தில இந்த மாதிரி டைரிங்க தான் டைம் பார்க்காம டைம்-பாமா வெடிக்கும்னு நாங்களும் கேள்விப் பட்டிருக்கிறோம்ல........)