Friday, November 14, 2025

ஒரு துளி காதல்...

எப்படியாவது இன்று
உனக்கு 
ஒரு கவிதை எழுதி விட வேண்டும் 
என்று தவிக்கிறேன்
வார்த்தைகள் ஒன்றும் 
கிடைக்காமலில்லை.
உனக்காக சிந்தித்து சிதறிய வார்த்தைகள் வீடு முழுதும்
குவிந்து கிடக்கின்றன,
மிகவும் கவனமாக நடக்கிறேன் 
நல்ல வார்த்தைகள் 
நொறுங்கி விடக் கூடாதென.

பொம்மை கடைக்குள் நுழைந்த குழந்தை அங்கிருக்கும் 
அனைத்து பொம்மைகளையும் தொட்டுப்பார்த்து 
சில பொம்மைகளை 
தேர்ந்தெடுப்பது போல்.

வார்த்தைகளுக்கு வலிக்காமல் 
சில வார்த்தைகளை 
சேகரித்திருக்கிறேன்.

நம் காதலின் கதகதப்பில் வருடங்கள் கணங்களாக கடந்துவிட்டன,

எனக்கு பேராசை எல்லாம் இல்லை என்னுடைய தேவைகள் மிகவும் குறைவானவையே,

காலையில் சூடான தேநீர்
மதியம் ஒரு பிடி சாதம்
மாலையில் கொஞ்சம் பழங்கள் 
இரவினில் 
உன் சுவாசத்தின் வாசம்,

இப்போது 
உன் 
அருகாமையின் 
அதிர்வு,
 
எப்போதும்
உன்
ஒரு துளி காதல்...

(இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்)

Thursday, September 7, 2017

டாக்டர். அனிதா M.B.B.S



கடந்த ஒரு வார காலமாக பத்திரிக்கைகளிலும், சமூக வலைத்தளங்களிலும், இன்னும் பல ஊடகங்களிலும் அந்தத் தங்கையின் முகத்தை பார்க்கும் போதெல்லாம் சில நொடிகள் விழிகள் விலக மறுக்கிறது, சட்டென கடந்து செல்ல இயலவில்லை இந்த உயிரிழப்பை. 

அதிகார வர்க்கத்தின் சர்வாதிகாரத்தால் இந்த இளம் தளிர் மருத்துவக் கனவுகளோடு கருகிவிட்டது. பொருளாதார வசதியில் பின் தங்கிய நிலையிலிருந்தும் உச்சநீதிமன்றம் வரை சென்று போராடியிருக்கிறாள் என்றால், அவளுடைய இலட்சியத்தின் வீரியத்தை, கனவின் கனத்தை புரிந்து கொள்ள முடிகிறது. 

பன்னிரு வருடம் பாடு பட்டு படித்துப் பெற்ற மதிப்பெண்களுக்கு மதிப்பில்லாமல் போனதை பொறுத்துக் கொள்ள முடியாமல் இந்த முடிவை எடுத்திருக்கிறாள். உயிர் துறக்க முடிவெடுத்த அந்த தருணத்தில் அவளுடைய மனதின் வேதனையை நினைக்கும் போது என் இதயம் வேகமாக துடிப்பதை என்னால் உணர முடிகிறது, அவளுடைய இதயம் எவ்வளவு வேகமாய் துடித்து அடங்கியிருக்கும்.

எல்லாம் வல்ல இறைவன் 
இந்த தூய ஆத்மா 
அமைதி பெற 
அருள் புரி்யட்டும்…

என் மனதின் மத்தியில் ஒர் குற்ற உணர்வு, நம்மால் ஏதும் செய்ய இயலவில்லையே என்ற ஆற்றாமை. தவிர்க்க முடியாத ஒரு வலி வந்து போவதை என்னால் தவிர்க்க முடியவில்லை.


மறதி என்பது இயற்கை மனிதனுக்கு கொடுத்த மிகப் பெரும் மருந்து இல்லையேல் ஒவ்வொரு மரணத்தையும் நினைத்து நினைத்து 
இங்கு பல மரணங்கள் சம்பவித்திருக்கும்.

என் விருப்ப மெல்லாம்
ஒன்றே ஒன்று தான்
வாக்களிக்கும் நாள் வரையிலாவது
இந்தத் தங்கையின் மரணம்
மறக்கப் படாமலிருக்கட்டும்…





Thursday, July 30, 2015

சல்யூட்...டாக்டர். APJ அப்துல் கலாம்




நடவாத கனவல்ல
தாங்கள்
நடவு செய்தது
காலம்
அழிக்க முடியா
கனவுகளை
விதைத்துச் சென்றதால்
கலாம் என்ற பெயரும்
காலத்தால் அழிக்க
இயலாத
கல்வெட்டாயிற்று


தங்களின் வெள்ளை மனம் கண்டு
வெள்ளை மாளிகையும்
தன் கொடி தாழ்த்தி
அஞ்சலி
செலுத்துகிறது


யாதொரு சொத்துக்களையும்
தாம்
சேர்த்து வைக்கவில்லை
என்பதால்
நம் தேசத்தின்
விலைமதிப்பற்ற
சொத்தாயானீர்கள்


தாம் வாழ்ந்த காலத்தில்
நாங்களும்
வாழ்ந்தோம்
என்பதை
எங்கள் சந்ததிகளுக்கு
பெருமையோடு
நினைவூட்டப்போவதை
நினைத்து
சிறிது கர்வம்
கொள்கிறோம்


இணையற்ற
இறைவனின்
இதயத்தில்
இளைப்பாரட்டும்
தங்களின்
இன்னுயிர்...




                                        
                                         சல்யூட்...டாக்டர். APJ அப்துல் கலாம்...


Friday, March 27, 2015

தமிழஞ்சலி...



உழைப்பதற்காக பிறப்பெடுத்தவர் லீ...
இன்று
களைப்பெழவே கண்ணயர்ந்தார்

ஒழுக்கம், உழைப்பு
என்ற இரு உளி கொண்டு
இந்நாட்டை
செதுக்கிய
புதுமை சிற்பி

இங்கே
ஏதொன்றுமில்லை
என்பதை
ஏதொன்றும் இல்லாமலில்லை
என்றாக்கியவர் 

இங்கு 
தமிழன் தமிழ் படிக்க
அவையில் கொடி பிடித்தவர் 
தமிழே 
தமிழனின் 
அடையாளமென 
அரசின் சிரசில் 
தமிழை
அச்சேற்றியவர்

பல இனம் பல மொழி
நாட்டின் பலவீனம் அல்ல 
எங்கள் நாட்டின்
பலமேயென 
பறைசாற்றியவர்...

16 செப்டம்பர் 1923 மனிதராய் பிறந்து 
23 மார்ச் 2015 புனிதராய் ஆனார் 
சிங்கப்பூரின் தந்தை 
திரு. லீ க்வான் யூ

இந்நாட்டின் 
ஆட்சி மொழிகளில்
தமிழும் 
ஒன்று,
என்றாக்கிய
மாமனிதனுக்கு
தமிழை 
தாய் மொழியாகக் கொண்ட 
அனைவரின் சார்பிலும் 
அஞ்சலி செலுத்துகிறேன்...




குறிப்பு:-

திரு. லீ க்வான் யூ 
உயிர் பிரிந்ததற்காக
இங்கு விடுமுறை இல்லை
கடைகள் மூடப்படவில்லை
வாகன இயக்கங்கள் 
நிறுத்தப்பட வில்லை
வாகனங்கள் செல்லும் வழிகள் 
மாற்றி அமைக்கப் படவில்லை
தற்கொலைகள் இல்லை
ஒரு சிறு கலகமும் இல்லை

இருப்பதெல்லாம்
மக்கள் 
மனதிலும்
விழியிலும்
பெரும் 
கலக்கம் மட்டுமே...

ஐந்து வினாடிகள் 
அவர் உடலை 
பார்த்துச் செல்வதற்கு 
ஐந்து மணி நேரமாய் 
நீண்ட...மிக நீண்ட வரிசையில்
காத்திருக்கின்றனர்
நன்றி மறவாத 
இந்நாட்டு
நம்நாட்டு 
மற்றும்
பிற நாட்டு மக்கள்...




Wednesday, January 26, 2011

புதுக் கவிதை...


வார்த்தை
கொண்டல்ல
வாழ்க்கை
கொண்டெழுதிய
கவிதை...


Thursday, June 18, 2009

பதிலைத் தேடிய கேள்விகள்...




ஏழு நண்பர்கள் என்னை இந்த தொடர் பதிவிற்கு அன்போடு அழைத்திருக்கிறார்கள்,
எட்டாவதாக ஒருவர் என்னை அழைக்க விரும்பி இருந்தார், முதலில் இந்த எட்டு
பேருக்கும் எனது நன்றிகள்...


1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது…? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா…?

எங்கள் ஊரில் திருவிழாக்கள் கொண்டாடும் வழக்கமில்லை திருமணம் மற்றும் பெயர்சூட்டு விழா போன்றவற்றைத் தான் ஒவ்வொரு வீட்டிலும் திருவிழாவாக கொண்டாடுகிறார்கள். அப்படியொரு சிறு விழாவில் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் பெரியோர்களால் சூட்டப் பட்டது எனது பெயர். எனவே, என் பெயர் எனக்கு மிகவும் பிடிக்கும்.

எனக்கு பெயர் சூட்டும் போது இரண்டு வயது இருக்கும்...



அப்போது நான் இப்படித்தான் இருந்தேன்...

புதியவன்” என்பது பள்ளி, கல்லூரி நாட்களில் கவிதைகள் எழுதிய போது எனக்கு நானே வைத்துக் கொண்ட புனைப் பெயர். பதிவுலகிற்கு வந்த போது அந்த பெயரிலேயே எழுத ஆரம்பித்து விட்டேன்...இந்தப் பெயரும் எனக்கு மிகவும் பிடிக்கும்...

2. கடைசியாக அழுதது எப்பொழுது…?

நெகிழ்வான நிகழ்வுகள் மனதை நெருடும் போது கண்களில் நீர் துளிர்க்கும்...கடைசியாக எப்பொழுதென்று நினைவில் இல்லை...

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா…?

என்னுடைய கையெழுத்து அழகாக இருக்காது என்றாலும்...பிடிக்கும்...

4. பிடித்த மதிய உணவு என்ன…?

தேனும் திணை மாவும் எனக்குப் பிடிக்கும் என்று சொன்னால் எந்த நூற்றாண்டில் வாழ்கிறீர்கள் என இன்னொரு கேள்வி கேட்க்கப் படலாம், வீட்டை விட்டு வெகு தொலைவில் இருப்பதால் மதிய உணவில் பெரிதாக கவனம் செலுத்துவதில்லை...

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா…?

என் வானத்தில் நட்பு நட்சத்திரங்கள் மிக அதிகம் அவர்களுக்கான
எனது முதலீடு ஒரு சிறு புன்னகை மட்டுமே...
புன்னகைப்பதற்கு நான் அதிக நேரம் எடுத்துக் கொள்வதில்லை...

6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா…?

அருவியில்...

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்…?

விழிகள் பேசுவதை மொழி பெயர்த்தால் மனதில் உள்ளதை
புரிந்து கொள்ள முடியும் என்பதால், முதலில் விழிகள்...

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன…?

பிடித்த விசயம் : பிறர் மனம் புண் படாமல் பேசுவது
பிடிக்காதது : அதீத பொறுமை என்னும் கூட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும் அதீத கோபம்...

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது…?

சரி பாதின்னா...ஓ...கவிதையை பற்றிய கேள்வியா...?

என் கவிதை
கொஞ்சும் போதும்
கெஞ்சும் போதும்
எப்போதும் அழகு
சிணுங்கும் போதோ மிக அழகு
இவையெல்லாம்
எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று
பிடிக்காததென்று எதுவும் இல்லை
பிழையில்லாக் கவிதையில்
குறை காண முயல்வது
முதல் குற்றம்
கவிதையின்றி
கவிஞன்
தனித்து செயல் பட
நினைப்பதும் குற்றமே...

10. யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்…?

தூரங்களெல்லாம் வெறும் இடைவெளிகள் மட்டுமே அவற்றையும் அவர்களின் நினைவுகள் கொண்டே நிரப்பி வைத்திருக்கிறேன்...
எல்லோரும் எப்போதும் என் மனதின் பக்கத்தில் இருப்பதால் வருந்துவதில்லை...

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்…?

கிரீம் கலர் பேண்ட் கருப்பு நிற ஷர்ட்...

12. என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க…?

சுதா ரகுநாதனின் மயக்கும் குரலில் ”அனல் மேலே பனித்துளி”...

13. வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை…?

என்னவள் விழியின் வண்ணம்...அட...கருப்பு தாங்க...

14. பிடித்த மணம்…?

மண் வாசனையும்
மழலை வாசனையும் பிடிக்கும்
அவள் கூந்தலில் இருக்கும் போது மட்டும்
மல்லிகை வாசனை பிடிக்கும்,
அவள் வாசனை
பிடிக்காது என்று சொன்னால்
காதல் கவிதை எழுதுவதற்கு
நான்
தகுதியற்றவனாகிவிடுவேன்...

15. நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார்…? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன…?

எனக்குத் தெரிந்த அனைவரும் எழுதி விட்டதால் யாரை அழைப்பதென்று தெரியவில்லை...

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு…?

1. இரவீ
2. வழிப்போக்கன்
3. ஜீவன் அண்ணா
4. ரோஸ்
5. மயில்
6. குடந்தை அன்புமணி
7. ஸ்ரீமதி
8. தமிழரசி

தனித்தனியே பிரித்து சொல்ல முடியவில்லை, எனவே இவர்களின் அனைத்து பதிவுகளும் பிடிக்கும் என்று சொல்லலாம்...

17. பிடித்த விளையாட்டு…?

பள்ளியில் படிக்கும் போது கிரிக்கெட்
கல்லூரியில் டென்னிஸ்
எப்போதும் செஸ்
இப்போதும் அதுவே...

18. கண்ணாடி அணிபவரா…?

இந்த பதிவு எழுதும் போது கண்ணாடி அணிந்திருக்கவில்லை...

19. எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்…?

மென்மையான காதல் சொல்லும் படங்கள் மற்றும்
வன்முறையில்லாத நகைச்சுவை படங்கள்...

20. கடைசியாகப் பார்த்த படம்…?

Angels and Demons...

21. பிடித்த பருவ காலம் எது…?

இலையில் வழியும்
ஒரு துளியில்
விரல் நனைக்க
மனம் நனையும்
பனி படர்ந்த
அந்த அழகிய
மார்கழி மாதம்...

நான் பிறந்ததும் அந்த மாதத்தில் தான்...

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்…?

மாலனின் ”வழி தவறிய வண்ணத்துப் பூச்சிகள்”...

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்…?

மாற்றுவதில்லை...

24. உங்களுக்கு பிடித்த சத்தம்…? பிடிக்காத சத்தம்…?

மூங்கில் துளைத்து வெளி வரும் சுவரங்கள் அனைத்தும் பிடிக்கும்

அபசுவரங்கள் பிடிக்காது...

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு…?

எங்க வீட்டில் இருந்து ஏறக்குறைய 3,145,000 மீட்டர்...
(சிங்கப்பூர்)

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா..?

இந்த கேள்விகளுக்கு பதில் எழுதுவதற்கே பெரிய திறமை
வேண்டும் போலிருக்கே...

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்…?

நம்பிக்கை துரோகம்...

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்…?

சாத்தான்களெல்லாம் காதல் கற்றுக் கொண்டதில் சமத்தா ஆகிடுச்சுங்க...

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்…?

இயற்கை எழில் கொஞ்சும் எந்த தலமும் எனக்குப் பிடிக்கும்...

30. எப்படி இருக்கணும்னு ஆசை…?

தீயோர்க்கும் நல்லவனாக...

31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்…?
(இதையே நான் இப்படி எடுத்துக் கொள்கிறேனே...)
கவிதை இல்லாம செய்ய விரும்பும் காரியம்…?

கேள்வி (9) திற்கான பதிலில் கடைசி நான்கு வரிகளை மட்டும் படித்துக் கொள்ளுங்கள்...

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

இறைவன் எழுதிய கவிதை
மனிதன் வாழும் வாழ்க்கை,
வாழ்வின் இலக்கணங்களை மட்டுமே
அவன் எழுதியனுப்புகிறான்
இலக்குகளை
நாம் தான்
தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம்

நாம் தேர்ந்தெடுக்கும் இலக்கு
இனிப்பு சுவை சொட்டும்
தேனாக இருக்கட்டும்
வலிக்கக் கொட்டித்
துடிக்கச் செய்யும்
தேளாக இருக்க வேண்டாமே...



ஒரு அறிவிப்பு நண்பர்களே...


நெடுநாட்களாக
நான்
நேசித்து எழுதிய
காதலொன்று
நான் வாசிப்பதற்காக
காத்திருக்கிறது...


எனவே,

விடுமுறையில் ஊர் செல்கிறேன் நண்பர்களே, இதுவரை என் எழுத்துக்களை வாசித்து கருத்தூட்டமிட்டு உற்சாகமளித்த அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள்...இறைவன் நாடினால் வலையின் வழியே சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சந்திப்போம் என்று கூறி உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்...


நிகரில்லா நட்புடன்,

- புதியவன்.




Thursday, June 4, 2009

காதல் கடிதங்களென...


பகலின் மேலுதட்டில்
இரவு முத்தமிட
கீழ்வானம்
வெட்கத்தில் சிவந்தது

அந்தியில்
நீ
சந்திக்க வருவதாய்
சொன்னதிலிருந்து
சிந்திக்க ஏதுமின்றி
நேரத்தை
நிந்திக்கத் தொடங்கினேன்

கையில்
நீ
அனுப்பிய
கடிதத்துடன்
உன் வருகைக்காக
காத்திருக்கும்
எல்லா நேரங்களிலும்
எப்படியாவது வந்து
ஒட்டிக் கொள்கிறது
மாலை நேரமும்
ஒரு அழகு நிலாவும்

உன் எச்சில் தொட்டு
ஒட்டியனுப்பாத
கடிதங்களை
காதல் கடிதங்களென
என்னால்
ஏற்றுக்கொள்ள முடியாது
அவை
வெறும் வெற்றுக்
காகிதங்கள் மட்டுமே...

அல்லிக் குளத்தில்
வளர்ந்திருந்த
மல்லிச் செடிகளெல்லாம்
உன் வரவுக்காக
ஒற்றைக் காலில்
தவமிருக்கின்றன

சற்று தாமதமாய்
வந்த நீ
தாமதிக்காமல்
ஒரு புன்னகைப் பூவை
பறித்து வைக்கிறாய்
மலர்களெல்லாம்
மலர்வதற்கு
கற்றுக் கொள்கின்றன...

ஒரு மலரை கொய்து
பரிசளிக்கிறேன்
என் மனதைக்
கொய்து போய்விடுகிறாய்
எனக்குத் தெரியும்
இது மலர்களுக்குள்
தீட்டப் படும்
பழிவாங்கும் திட்டமென...

காதல் சாலையெங்கும்
வெட்கம் விதைத்துச்
செல்கிறாய் நீ
முத்தம் விளைவதற்காய்
காத்திருக்கிறேன் நான்...

என் கை விரல் பட்டு
அறுந்து விழுந்த
உன் கால் கொலுசின்
தெறித்துச் சிதறிய
மணிகளின் ஒலியில்
என்
மனவெளியெங்கும்
சிதறிக் கிடந்தன
சில
கவிதைகள்................



Thursday, May 21, 2009

காதல் வந்த காலமெது…?


பெயர் தெரியாத
பெண் குழந்தைகளையெல்லாம்
நான்
உன் பெயர் சொல்லி
அழைத்த போது
தொடங்கியிருக்க வேண்டும்...

அல்லது...

என் பெயர் சூட்டப் பட்ட
ஆண் குழந்தையை
பெயர் சொல்லியழைக்க
நீ
தயங்கி நின்ற போதேனும்
ஆரம்பித்திருக்கக் கூடும்...

இல்லையெனில்...

எப்போதும்
என் கண்ணைப் பார்த்து
பேசும் நீ
முதன் முதலாய்
மண்ணைப் பார்த்துப்
பேசும் போதாவது
தோன்றியிருக்கலாம்...

அதுவும் இல்லையெனில்...

கொஞ்சம் கொஞ்சமாய்
பேச ஆரம்பித்த
நீ
கொஞ்சிக் கொஞ்சி
பேச ஆரம்பித்த போது கூட
நிகழ்ந்திருக்கலாம்
அந்த மாற்றம்...

இவையெதுவும் இல்லையெனில்...

நம் விழிகளின்
விலகாத பார்வை
சற்றே விலகி
உன் வெட்கத்தில் விழுந்து
முத்தத்தில் நனைந்த வேளையில்
தானும் சேர்ந்தே
நனைந்திருக்கலாம்
நம்முடனான காதல்.....

எத்தனையோ பெண்கள்
இருக்கையில்
என்னை மட்டும்
உனக்குப் பிடித்துப் போனதெப்படி...?
இது
ஆயிரம் முறை நீ
என்னிடம்
கேட்ட கேள்வி...

ஒரு முறையேனும்
உனக்கு சொல்ல நினைத்து
சொல்லாத பதில்...

வேறு யாரைப் பார்க்கும் போதும்
உயிர்க் காற்று
என் உள்சுவாசம் மறுத்ததாய்
இதுவரை
என்
நினைவில் இல்லையடி..................


Thursday, May 7, 2009

காதல்…ஒரு அழகிய முரண்பாடு…


மலர் சூடிச் சென்ற
பெண்களில்
என் மனம் சூடிச்
சென்றவள் நீ
மலர் வாடினால்
தூக்கி எறிகிறாய்
என் மனம் வாடினால்
அணைத்து
மகிழ்விக்கிறாய்
காதலில் மட்டும்
என்ன ஒரு அழகிய
முரண்பாடு...

மயிலிறகை புத்தகத்திற்குள்
வைத்தால் குட்டி போடுமாமே
உன் கூந்தல்
இழையும் கூட
அப்படித்தானோ...?

உனக்காக காத்திருக்கும் பொழுது
வாலறுந்த பட்டமென
தத்தளிக்கும் மனது
நீ
அருகில் வந்த உடன்
நூலறுந்த பட்டமாய்
உன் கூந்தலுக்கிடையில்
சிக்கிக் கொள்கிறது

தட்டுத் தடுமாறி
பேச ஆரம்பித்தாலும்
தெளிவாகப் பேசி விடுகிறாய் நீ
தெளிவாகப்
பேச ஆரம்பித்தாலும்
முடிவில்
தடுமாறி விடுகிறேன் நான்...

இன்று முழுதும்
நீ வீட்டை விட்டு
வெளியே வரவில்லை
உன்னைப் பார்க்காமல்
இனி மலர்வதில்லை என்று
தீர்மானம் நிறைவேற்றி
இருக்கின்றன
நீ
வெட்கம் ஊற்றி வளர்த்த
உன் தோட்டத்து
மலர்களெல்லாம்

உன் புன்னகை திருடிப்
பூத்திருக்கும்
ரோஜாக்களில் மட்டும்
முட்கள் இருப்பதில்லை

நிழல் தேடி
நாம் மரம்
ஒதுங்குவது போல்
உன் மனம் தேடி
என் உயிர் ஒதுங்குமிடம்
நம் காதல்

நிலவின் ஒளியை மட்டுமே
உண்டு வாழப் படைக்கப் பட்ட
சக்கரவாகப் பறவை போல
உன் வெட்கத்தை மட்டுமே
உண்டு வாழ
காதல்
என்னை படைத்திருக்கிறது
உன் வெட்கம் குறையும்
சில நேரங்களில் மட்டும்
உன் முத்தங்களையும்.........



Thursday, April 30, 2009

எதனை பரிசெனத் தருவது…?


உனக்குப் பிடிக்குமென
கவிதை சமைக்க
வார்த்தைகளைத் தேடி
கடற்கரை சென்றிருந்தேன்
காலையில் நடந்து சென்ற
உன் கால் தடங்களைத்தான்
கவிதைகளென
கடலலைகள்
எடுத்துச் செல்கின்றனவாம்

நேற்றிரவு
உன் வீட்டு மாடியிலிருந்து
நிலாவை
ரசித்துக் கொண்டிருந்தாயாமே
நிலா சொன்னது
அதுவும்
உன்னைத் தான்
ரசித்துக் கொண்டிருந்ததாம்

இன்று உன் வீட்டு வழி
கடந்து செல்ல நேரிட்டது
அங்கே
உன் கொலுசொலி வாங்கி
சங்கீதம் பயின்றன குயில்கள்
உன் முடிந்த கூந்தல்
அவிழக் கண்டு
மழைமேகம் கண்டதாய்
தோகை விரித்தன மயில்கள்
உன் அழகு நடை கண்டு
நடை பழக வந்தன மான்கள்

நானும் வந்தேன்
உன்னிடதில் காதல் பழக
மற்றவையெல்லாம் நிமிடத்தில்
கற்றுக் கொடுக்கும் நீ
காதலை கற்பிக்க மட்டும்
ஏனோ...?
காலம் கடத்துகிறாய்

நீண்ட நெடியதொரு
பார்வை பரிமாற்றத்திற்குப் பின்
ஒரு சுபயோக சுபதினத்தில்
சுவாசங்கள் பேசிக்கொள்ளும்
தூரத்தில்
உன் வெட்கத்தை சாட்சியாக வைத்து
நம் இதழ்களின் முத்தத்தால்
மாலை மாற்றிக் கொள்கிறது
நம் காதல்

பூக்கள் பறித்து பரிசளிக்க
பூந்தோட்டம் போயிருந்தேன்
உன் கூந்தல் சூடி
உதிர்ந்த பூக்களைத் தான்
பூஜைப் பூக்களென
பூத் தூவி
பூஜிக்கின்றன
அந்த
பூந்தோட்டப் பூக்களெல்லாம்

இங்கே தான்
வேறெதுவும் கிடைக்கவில்லையென
காற்றில்லாத நிலவில்
காதல் பரிசு தேடினேன்
இங்கிருந்து அங்கு சென்ற
ஒன்றிரண்டு
தேசத்துக் கொடிகள் தவிர
வேறொன்றும் அங்குமில்லை

காதல் சொன்ன உனக்கு
நான்
எதனை பரிசெனத் தருவது...?
எதை வேண்டுமானாலும் கேள்
தருகிறேன்,
என்னில் இருக்கும்
உன்னைத் தவிர..………………



(அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்...)


Thursday, April 23, 2009

பெய்யெனப் பெய்யும் காதல் மழை…


ஆகாயம் ஆனந்தமாய் பொழிந்த
அடைமழை நாளொன்றில்
கொஞ்சம் நனைந்து நீயும்
கொஞ்சம் நனையாமல் நானும்
ஒரே குடையில் நாமிருவரும்
குடைக்குள் மொத்தமாய்
நனைந்திருந்தது நம் காதல்...

ஐந்து வயது சிறுவனின்
ஐந்து வருட தவத்திற்குக்
கிடைத்த வரம் நீ...?
ஆம்,
நான் பிறந்து
ஐந்து வருடத்திற்குப்
பிறகு தானே நீ பிறந்தாய்....

ஐந்து நிமிடம் காத்திருந்ததற்காக
என் மேல் கோபப்படுகிறாய்
நான் கூடத்தான்
பிறந்து ஐந்து வருடங்களாக
உன் பிறப்பிற்காகக் காத்திருந்தேன்
அதற்காக
ஏன் இவ்வளவு தாமதமாகப்
பிறந்தாயென்று
உன் மேல் கோபப்படவா முடியும்...?

ஏழு வண்ணத்திலும்
வெட்கப்படும் வானவில் நீ
என் கைகளின் அணைப்பிற்குள்
இருக்கும் போது மட்டும்
எட்டாவது வண்ணத்திலும்
வெட்கப் படுகிறாய்...

எத்தனை முறை சொன்னாலும்
கேட்பதே இல்லை
உன் விரலையாவது
தொட்டுவிட்டுத்தான் போவேன்
என்று அடம்பிடிக்கிறது
இந்த மழைத்துளி
அதற்கும் என்னை போல்
பிடிவாதம் கொஞ்சம் அதிகம் தான்...

மழையில் நனைந்தபடி
யாருமற்ற புல்வெளியில்
என் கைப்பிடித்து நடந்தாயே
அன்று போல்
என்றும் உணர்ந்ததில்லை
நிறைவான நம் காதலை...

துளி மழை
தூரல் மழை
சாரல் மழை
அடை மழை
ஆலங்கட்டி மழை
ஏன்
அமில மழை கூடப்
பார்த்திருக்கிறதாம்...
உன் பாதம் பட்டதில் தான்
முதன் முதலாய்
அமிர்த மழை
பார்க்கப் போவதாய்
பெருமை பட்டுக்கொள்கிறது
இந்த பூமி....

சட்டெனப் பொழியும்
முத்த மழையின் போது
உன் மின்னல் வெட்கத்தில்
என் கண்களும் சேர்ந்தே
மூடிக் கொள்கின்றன
இப்போது தான் புரிகிறது
முத்தமிடும் போது ஏன்...?
கண்கள் தாமாகவே
மூடிக்கொள்கின்றனவென்று...

மழை நின்ற பின்னும்
தொடரும் மண்வாசம் போல்
நீ
விலகிச் சென்ற பின்னும்
விலகாமல்
என்னைத் தொடர்கிறது
உன் வாசம்...


Wednesday, April 15, 2009

உன் வெட்கத்தை கொஞ்சம் காவல் வைத்து...


இமை மூடி
இமை திறக்கும் நேரத்தை
ஒரு வினாடி
என்கிறோம் நாம்
உன் இதழ் மூடி
இதழ் திறக்கும்
நேரத்தைத் தான்
தேவவினாடி
என்கின்றனர் கவிஞர்கள்

உன் இமைகள் இமைக்கும்
அழகைப் பார்த்தே
பட்டாம்பூச்சிகள்
பறப்பதற்கு பழகிக்கொள்கின்றன
நீ பிறப்பதற்கு முன்பு வரை
அவை வெறும்
கூட்டுப்புழுக்களாக மட்டுமே
வாழ்ந்து
மடிந்திருக்கக் கூடும்...

தாஜ்மஹாலின்
மாதிரி வடிவம்
ஓவியனின்
கண்ணீர்த் துளிகளால்
வரையப்பட்டதாம்
மும்தாஜின்
மாதிரி வடிவத்தை
உன்னைப் பார்த்து மட்டுமே
வரைய முடியும்
என்கின்றனர் ஓவியர்கள்

உன் விழிகளின்
சிணுங்கலில் தான்
நம் காதல் பிறந்தது
உன் இதழ்களின்
சிணுங்கலில்
சிந்திய சில
துளிகளில் தான்
என் அனேக கவிதைகளும்
பிறக்கின்றன...

உனக்காக
காத்திருக்கும் வேளை
கண்ணாடிக் காகிதத்தில்
மடிக்கப்பட்ட கற்பூரமாய்
கரையாத காலம்
நீ வந்த உடன்
காகிதம் பிரிக்கப் பட்ட
கற்பூரமாய்
காதலில் கரைந்து காற்றாகிறது

காற்றில் கலைந்த
உன் துப்பட்டாவை
நீ
சரி செய்த போது தான்
முதன் முதலாய்
என் மனதும்
கலைந்து போனது
என்பது
உனக்குத் தெரியுமா...?

உன் இதழின் ஈரம்
காற்றில் களவு போகாமலிருக்க
இதழ் சார்ந்த பகுதிகளில்
உன் வெட்கத்தை கொஞ்சம்
காவல் வைத்ததில்
முன்னூறு முத்தங்களை
நம் இதழ்களே களவாடிவிட்டன
இனியொரு முறை
சரியாக எண்ணிப் பார்க்க வேண்டும்
இன்று முதல்
களவு போகும்
முத்தங்களின் எண்ணிக்கை
சற்றே கூடுதலாகக் கூட
இருக்கக் கூடும்......................



Saturday, April 4, 2009

தேவதைகள் கொண்டாடும் தினம்…



மகரந்த மழையில்
நனைந்த வண்டென
மயக்க நிலையில் நான்
உறக்கம் கலைந்தும்
கலையாத கனவு போல்
இன்று
சில நினைவுகள்...

அது...
அன்னப் பறவைகள்
பாலில் இருந்து நீரைப்
பிரித்தெடுப்பது போல்
பகலில் இருந்து இரவைப்
பிரிக்கத் துடிக்கும்
அந்தி நேரம்

முதன் முதலாய் எனக்காக
அன்று நீ
பட்டுப் புடவை அணிந்து வந்த
அழகைப் பார்த்து
உயிர் துறந்தால்
உன் உடல் தொடலாம்
என்ற ஆசையில்
தற்கொலைக்கு தயாராயின
அந்தத் தோட்டத்து
பட்டுப் பூச்சிகள்

வெட்கத்தின் காரணமாய்
அப்போது
சிறிது இடைவெளி விட்டு
அமர்கிறாய்
நம் இருவருக்குமிடையே
வெட்கமில்லாமல் வந்து
அமர்ந்து கொள்கிறது
நம் காதல்

விழிகளில் பேசியே
களைத்துப் போன
நீ
அருகிலிருந்த
மரத்தில் சாய்கிறாய்
உன் ஸ்பரிசத்தில் சிலிர்த்து
பூக்களை உதிர்த்தது
அந்த ஒற்றைப் பூவரசமரம்
இலையுதிர் காலத்தையும்
பூவுதிர் காலமாக
மாற்றி விடுகிறாய்...

எத்தனை முறை வாசித்தாலும்
முடிவதாயும் இல்லை
திகட்டுவதாயும் இல்லை
சிணுங்கும்
இந்த இருவரிக் கவிதை
முடிவில்லா கவிதைக்கு
முற்றுப் புள்ளியா
அந்த இதழோர மச்சம்...?

உன் வெட்க ஒளியில்
நட்சத்திரங்களாய் பிரகாசிக்கின்றன
நம் முத்தங்கள்
சற்றே கூடுதல் பிரகாசத்துடன்
விடிவெள்ளியாய் மின்னுகிறது
நம் முதல் முத்தம்...
என்ன இருந்தாலும்
நம் முதல் முத்தத்தின் போது
உன் வெட்கத்தின் அளவு
கொஞ்சம் அதிகம் தான்...

வருடத்தில்
ஒரு முறை வரும்
இந்நாளுக்காக
வருடம் முழுதும்
காத்திருக்கிறேன்
ஏனெனில்,
இன்று தேவதைகள்
கொண்டாடும் தினம்

தேவதைகள் மண்ணில்
பிறப்பதில்லை
எனினும்,
என் மனதில்
பிறந்த தேவதைக்கு
உன் காதலாலான இதயத்தின்
இனிய
பிறந்தநாள்
நல்வாழ்த்துக்கள்.....................



(என் வரவை எதிர் பார்த்துக் காத்திருக்கும் உனக்கு என் வாழ்த்துக்களை மட்டுமே வழியனுப்ப முடிகிறது...)

Friday, March 27, 2009

காதலுக்கு கொள்(கை)ளை அழகு...


தொடு வானம் தொட முடியாத தூரத்தில்
தொட்டுக் கொண்டிருக்கிறது
நீயோ
தொடக் கூடிய தூரத்திலிருந்தும்
இன்னும் தொடாமலே இருக்கிறாய்

துடுப்பில்லாத படகில் ஏறி
வெறும் கைகளினால்
ஒதுக்கித் தள்ளப்பட்ட
மேக அலைகளின் ஊடே
காற்றில்லாத கிரகத்தில் அமர்ந்து
கடும் தவம் இருப்பது சுலபம்
உணர்ந்த காதலை
உணர்த்தியவளிடம் சொல்லி விட்டு
இப்படி அவள் பதிலுக்காக
காத்திருப்பதை விட...

காதலை ஏற்றுக் கொண்ட
நீ
காலம் வரும் வரை
நம் காதலுக்கென்று
சில விதி முறைகளை
விதித்துக் கொள்கிறாய்
தொட்டுக்கொள்வதில்லை
கட்டிக்கொள்வதுமில்லை
’முத்தம்’....ம்ஹூம்...
அந்தப் பேச்சுக்கே இடமில்லை

நம் காதலில்
எனக்கிருந்த சில எதிர் பார்ப்புகளை
எதிர்கால ஆசைகளின்
சேமிப்பு வங்கியில்
பாதுகாத்து வைத்துவிட்டேன்
என்ன செய்வது....?
இதயத்திற்கு எட்டியது
இன்னும்
இதழ்களுக்கு எட்டவில்லையே...

அதுவரை சுடிதார் மட்டுமே
அணிந்து வந்த நீ
இப்போதெல்லாம் வெட்கத்தையும்
சேர்த்தே அணிந்து வருகிறாய்
காதல் என்றதும்
பெண்களின் நிழலுக்கு கூட
வெட்கம் வந்து விடுகிறது

எத்தனையோ முறை
உன் கண்களைப் பார்த்திருக்கிறேன்
அப்போதெல்லாம்
மின்மினிப் பூச்சிகளின்
மெல்லிய வெளிச்சத்தைப்
பார்ப்பது போல் பழகிய உன் விழிகள்
இந்தக் காதல் வந்த உடன்
மின்னலின் வெளிச்சத்தை போல்
சட்டென ஒளி பெற்று விடுகிறதே

காலம் காதலில் கரைந்து
இடைவெளி கொஞ்சமாய் குறைந்து
விதி முறைகள் மெல்லத் தளர்ந்ததில்

இப்போது...
நம் மூச்சுக் காற்றில்
முட்டி மோதிய உயிர்க் காற்று
மீண்டும் மீண்டும் முயன்று
முடியாமல் தோல்வியுற்று
அருகிலிருந்த மரத்தின்
இலைகளில் அமர்ந்து
களைத்துப் போய்
இளைப்பாறத் தொடங்கியது

இங்கே...
இடைவெளி தொலைத்த
இதழ்களின் தழுவலில்
முகவரி தெரியாத
மோட்சத்தின் வழிகளைத் தேடி
முந்திச் செல்கின்றன
நம் முத்தங்கள்...

விதி முறைகள் மீறப் படாமல்
இருப்பது தான் கொள்கைக்கு அழகு
ஆனால்,
கொஞ்சமாவது மீறப் படுவது தானே
காதலுக்கு கொள்ளை அழகு.............


Friday, March 20, 2009

நீ இல்லாத பொழுதுகளில்...



அங்கு உன் இமைகளை நீ மூடுகிறாய்
இங்கு என்னை இருள் சூழ்ந்து கொள்கிறது
இனி எனக்கான வெளிச்சம்
உன் விழிகளிலிருந்து
மட்டுமே பெறக் கூடும்

என்னைக் கவர்வதற்காக
நீ
எந்த ஒரு முயற்சியும்
செய்திருக்கவில்லை
என்பதொன்றே
என்னக் கவர்ந்திருந்தது

அன்று தான்
உறவுகளால் அங்கீகரிக்கப்பட்ட
மனம் சேர்ந்த
நம் காதலின் நிச்சயதார்த்தம்

உன் கூந்தல் சூடியிருந்த
மலர்களின் வாசம்
உன் கைகளில் கரைந்திருந்த
மருதாணி வாசம்
இவையெல்லம் தாண்டி
வீடு முழுதும் வசப்பட்டிருந்தது
உன் செல்லச் சிரிப்பின் வசம்

உறவுகள் சூழ்ந்திருக்க
ஒருவரும் அறியாது
நாம் கைகோர்த்த நிமிடங்கள்
முத்தமிட்டுக் கொண்ட
நம் விரல்களைப்
பார்த்து பொறாமை கொண்டன
நம் இதழ்கள்

நீ அணிந்திருந்த
மிஞ்சியின் சத்தத்தில்
கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்த
நம் கால் விரல்கள்
என் கைகளுக்குள் சிக்காமல்
நீ காப்பாற்றி வைத்த
உன் கண்ணாடி வளையல்

உன் இமைகள் இமைக்கும்
ஓசை கேட்டு
இமைக்க மறந்திருந்த நிமிடங்கள்
என் விரல்கள்
உன் கூந்தல் கலைந்த போதெல்லாம்
உன் விழிகள்
என் மனதைக் கலைந்த
அந்த அழகிய தருணங்கள்

இவையெல்லாம்
நினைவுபடுத்துகின்றன
நீ இல்லாத பொழுதுகளில்
என்னிலும் அதிகமாய்
என்னில்
நீ
நிரப்பி வைத்திருக்கும்
உன் காதலை................


Friday, March 13, 2009

மெல்லிய பூக்களிலெல்லாம்...


உன் வெட்கத்தைக் கொஞ்சம்
கடன் வாங்கி மெல்லச் சிவந்தது
அந்தி வானம்
உன் ஒரு துளி வியர்வை பட்டு
அணையத் தொடங்கியது
மாலை சூரியன்

கடற்கரை மணற்பரப்பில்
உனக்காக நெடுநேரம் காத்திருக்கிறேன்
கோடானகோடி ஆண்டுகளாய்
உன் வரவுக்காக
அங்கு கடலும் காத்திருந்தது

முதன் முதலாய்
உன்னைப் பார்த்த மகிழ்ச்சியில்
அன்று கடல் அலையின் வேகம்
சற்று கூடித்தான் போயிருந்தது

அதுவரை கரை தாண்டிடாத கடலலைகள்
உன் பாதத்தையாவது
தொட்டு விட முயன்று கொண்டிருந்தன
நீயும் முயன்று கொண்டிருந்தாய்
என் கண்களுக்குள் சிக்கியிருந்த
உன் அழகைக் காப்பாற்றுவதற்காக

உன் கூந்தலில் சூடிக்கொள்வதற்காக
கிள்ளியெடுக்கப் பட்ட
மெல்லிய பூக்களிலெல்லாம்
அள்ளித் தெளிக்கப் பட்டிருந்தது
என் தொடுதலின் போது
உன் முகத்தில் பூத்திருக்கும்
வெட்கத்தின் வண்ணம்

ஊடலென்பதே கூடாதென்றிருந்தேன்
காதலில் நாம் மட்டும் விதிவிலக்கா என்ன...?
ஒன்றுமில்லாத ஒன்றிற்காக
நமக்குள் ஒரு சிறு ஊடல்
நீ என்னிடம் கோபமாயிருக்கிறாய்
தொட்டாலே பார்வையால் சுட்டுவிடுகிறாய்
என்ன செய்வது...?

அதுவரை முத்தம் கொடுத்த
குழந்தை சட்டென
கன்னத்தைக் கடித்துவிட்டால்
கோபமா வரும்...?
அள்ளியெடுத்துக் கொஞ்சத்தானே தோன்றும்
எனக்கும் அப்படித்தான் தோன்றியது...
முடிவில் யார் தான் வென்றது...?
வென்றது காதல்...
எப்படி...?
மனதில் தோன்றியதை
அப்படியே கடைபிடித்ததில்
ஊடல் தோற்றுவிட்டது.............


இந்த கவிதையை யூத்ஃபுல் விகடனில் படிக்க இங்கு செல்லலாம்...

 

Friday, March 6, 2009

எனக்கானதொரு தேவதை...


ஒளியின் வேகத்தை விஞ்சியிருந்தது
அந்த இரவின் இருள்
நம் பால்வெளி தாண்டி
பக்கத்து நட்சத்திரத்தில்
காத்திருந்தது எனக்கானதொரு
தேவதை...

வெளிச்ச இறகுகள் கொண்டு
வேயப்பட்டிருந்தது
அந்த தேவதையின் சிறகுகள்
நிலவின் ஈர்ப்பு விசைக்குக் கட்டுப்பட்ட
கடல் அலை போல அவள் பார்வையில்
என் எண்ண அலைகளும் கட்டப்பட்டிருந்தது…

தொலைந்து போவதற்கென்றே
தேடப்பட்ட என் மனது
மீண்டும் அவளிடமே
தொலைந்து போயிருந்த வேளையில்
விழிகள் நாணேற்றியதில்
அவளின் வெட்கம்
ஒடி ந்து...உ டை ந் த து...

சரியா..? தவறா...?
என்று சிந்திக்கும் முன்பே
ஆர்வமிகுதியில்
முடிந்தும் முடியாமல் போன
முத்தங்களின் மிச்சம்
அவள் இதழ்களின் நெருக்கத்தில்
நொறுங்கி விழுந்தது

உதடுகள் உரசிக் கொண்டதில்
உதிரத்தொடங்கி இருந்தது
அவளின் தேவதைக் காண
அடையாளச் சிறகுகள்
காதலிப்பதற்கு எதற்கு சிறகுகள் என்று
நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே
என் பின்னங் கழுத்துப் பகுதியில்
தண்டுவடத்தின் தொடர்ச்சியாக
சிறகுகள் வளர்வதாய்
ஓர் உள்ளுணர்வு...
உணர்வுகள் உண்மையாயின்
நாளை முதல் வேலையாகப்
பறப்பதற்குப் பழகிக்கொள்ள வேண்டும்
இல்லையெனில்...பாதகமில்லை
மீண்டும் இன்னொரு நாள்
இது போன்றதொரு
தேவதைக் கனவு
வராமலா போய்விடும்........?


Friday, February 27, 2009

என்னை கவர்ந்தவர்...எல்லோரையும் கவர்ந்தவர்...!?


என்னை கவர்ந்தவர் என்ற தொடர் பதிவில் என்னை இணைத்த ஜீவன் அண்ணா அவர்களுக்கு என் நன்றிகள்...பிடித்தவர் என்றால் எல்லோரையும் தான் பிடிக்கும். ஆனால், அனைவரையும் பட்டியலிட முடியாதே...அதனால் என்னை மிகவும் கவர்ந்தவர் என்று சொல்வதைவிட நான் பார்த்து அதிசயித்தவர் பலர். அதில் மிக முக்கியமான ஒருவர்...இயற்பெயர் “எக்னஸ் கோஞ்செ பொயாஜியூ”

இவரைப் பற்றி சில வரிகள்....

யூகொஸ்லாவியா நாட்டிலிருந்து
புறப்பட்டது ஓர் வெள்ளைப் புறா
கருவில் உயிரை சுமந்ததில்லை எனினும்
தன் அதீத அன்பில்
உலகின் உயிரையெல்லாம்
தன் கருணை இல்லத்தில் சுமந்தவர்
தேசம் தாண்டி உலகுக்கெல்லாம்
அன்பென்ற ஒரே தேசியகீதம் பாடியவர்
பார்வையால் தொடுவதைக் கூட
நம்மில் பலர் அருவருக்கும்
தொழு நோயாளிகளை
தொட்டுத் தூக்கித் துடைத்தெடுத்து
அன்பும் ஆதரவும் காட்டியவர்
1979ம் ஆண்டு வரை சாதனையாளர்களை
பெருமைப் படுத்திக் கொண்டிருந்த
நோபல் பரிசு
இவருக்கு வழங்கப்பட்டதால்
தானும் பெருமைப்பட்டுக் கொண்டது
இவரிடம் ஒரு ஆயுதம் இருந்தது
மிதமிஞ்சிய சகிப்புத்தன்மை என்னும் ஆயுதம்
நிதி கேட்டு நீட்டிய கையில்
எச்சில் உமிழ்ந்தவனிடம்
“நீங்கள் அன்போடு அளித்ததை
நான் எனக்காக வைத்துக் கொள்கிறேன்
இந்த ஆதரவற்றவர்களுக்காக உதவுங்கள்” என்று
மறு கையை மீண்டும் நீட்டியவர்
இவரைப் பிடிக்காது என்று
யாரும் சொல்லிடுவர்
என்று நான் நம்பவில்லை
அன்னையைப் பிடிக்காதவர்
அகிலத்தில் உண்டோ......?
அப்படியெனில்,
அன்னை தெரசாவைப் பிடிக்காதவரும்.........


இந்த தொடர் பதிவின் விதிமுறைப்படி யாராவது இரண்டு பேரை இணைக்க வேண்டுமாம்...எனவே நான் அழைக்க விரும்புவது...

சாரல் – பூர்ணிமா சரண்
என் உயிரே - அபுஅஃப்ஸர்


Saturday, February 21, 2009

எல்லாம் சரியாகத்தான் செய்கிறாய்...


அன்று வீட்டை விட்டு
புறப்படும் போதே
வானொலியில்
வானிலை அறிக்கை
காற்றின் ஈரப்பதத்தில்
காதல் கலந்து விட்டதால்
இன்று சுழற்றி அடிக்கும்
தென்றல் காற்றில்
உங்கள் மனம்
கொள்ளையடிக்கப் படலாம்...

நாம் முதன் முதலில்
சந்தித்துக் கொண்ட பூங்காவில்
எழுதி வைக்கப்பட்டிருந்தது
பூக்களைப் பறிக்காதீர்கள்
மீறினால்...
நீங்கள் எதிர் பாராமல்
சந்திக்கும் பூவினால்
வலுக்கட்டாயமாக
உங்கள் இதயம்
பறிக்கப்படக் கூடும்...

இந்த இரண்டு
எச்சரிக்கைகளையும் மீறியதில்
இதோ என் பக்கத்தில்
இப்போது என்ன நடக்கிறது...?

சொல்ல வந்ததை
சொல்ல முடியாமல்
நகம் கடித்து
தவறாக சொல்லிவிட்டதாய்
நினைத்து
உதடு கடித்து
உன் வெட்கத்தைக்
கால் வழியே கோலமாக்கி
எல்லாம் சரியாகத்தான்
செய்கிறாய்...
ஆனாலும்
உனக்கெதற்கு இவ்வளவு சிரமம்
அந்த இரண்டாவது
விசயத்தையாவது
நான் பார்த்துக்கொள்கிறேனே........


Saturday, February 14, 2009

இனி உன்னோடு தான்...



உனக்கு நினைவிருக்கிறதா...?
நம் முதல் சந்திப்பு
அந்த செவ்வரளி மரத்தின் நிழல்
அதுவரை நுகர்ந்திராத
ஏதோ ஒரு மலரின் வாசம்
வாசனைக்கு வசப்பட்ட
வண்டு ஒன்று
அந்த பட்டப் பகலில்
மலர்களை
வட்டமடித்துத் திரிந்தது

அங்கே
நம் பார்வைகள்
பயிரிடப்பட்டதில்
அமோகமாய்
விளைந்திருந்தது காதல்
உன் காதலின் கவன ஈர்ப்புத்
தீர்மானத்தில் கைது செய்யப்பட்டன
என் கனவுகள்
உன் வீட்டிற்குத் தெரியாமல்
எனக்காக நீ மறைத்து
எடுத்து வந்திருந்த
வாழ்த்து அட்டை

காதலர்கள் பரிமாறிக் கொண்ட
முதல் பரிசுப் பொருள்
மலர்களாகத் தான்
இருக்க வேண்டும்
என்ற நம்பிக்கையில்
சற்று தள்ளியதொரு கடையில்
உனக்காக
நான் வாங்கிய
வேற்று தேசத்தில்
பூத்த பூவொன்று
விற்றுக் கொண்டிருந்த
சிவப்பு ரோஜாக்கள்

நான் கவனித்தேன்
காதலர்கள்
தன்னைத்தான் அதிகமாக
பரிமாறிக் கொள்கிறார்கள் என்ற
கர்வத்தில் அந்த ரோஜாவுக்கு
ஒரு முள் முளைத்திருந்தது

எப்படி காதலை சொல்லிக்கொள்வது
என்று தெரியாமல் அங்கு
அடர்ந்திருந்த மௌனங்கள்
அந்த இரண்டு நிமிட மௌனதில்
தொலைந்து போயிருந்தது
என் இரண்டு வருட ஆயுள்...

கடைசியில் எப்படித்தான்
சொல்லிக் கொண்டோம்
நம் காதலை...?
வார்த்தையில் சொல்லியிருந்தால்
எழுதிக்காட்டிவிடலாம்
மௌனத்தை எப்படி எழுத முடியும்...?

முத்தங்கள் என்ற பெயரில்
வெறும் சத்தங்களை மட்டுமே
பரிசளிக்க முடிந்த
சென்ற வருடம் போல்
இந்த வருடமும் முடியவில்லை
காதலர் தினத்தில்
உன்னை சேர்வதற்கு
ஆதலால்,
பதிவுத் தபாலில் பாசம்
பார்சலில் வந்திருக்கிறது
நம் வாழ்த்து அட்டைகளைத் தான்
சொன்னேன்

இப்போதைக்கு எனக்கு இருக்கும்
ஒரே ஆறுதல்
எத்தனை முறை படித்தாலும்
புதிதாகத் தோன்றும்
உன் முதல் கடிதத்தின்
கடைசி வரிகள் தான்

நீ அலைபேசியில் அனுப்பிய
இரண்டு குறுஞ்செய்திகள்
வாசித்துப் பார்த்தேன்
எனக்குத் தெரியும்
அவை காதலினால் வந்த
உன் கவிதையின் முயற்சி

உனது முதல் கவிதை

*“உன் மனதில்
நான் குடியிருக்கிறேன்
என்னைப் பார்க்க
ஆசையாய் இருந்தால்
உன்
இதயத்தில்
கை வைத்துப் பார்
உன் அன்புக்காக
நான் துடிப்பது தெரியும்...”

படித்ததும் நெகிழ்ந்தேன்...

உனது அடுத்த கவிதை

*“முதல் முறையாக
என்னை நினைத்து
நீ
கண்ணீர் விடுவாய்
எழுந்து உன் கண்ணீரைத்
துடைக்க முயற்சி செய்வேன்
நான்
இறந்துவிட்டேன்
என்பதையும் அறியாது...”

படித்ததும் அழுதேன்...

அதுவரை கொட்டிய மழை சட்டென நின்றது...மெல்லத் தெளிந்திருந்தது வானம்...என் மனதும் தான்...

இதோ புறப்பட்டுவிட்டேன் இந்தக் காதலர் தினம் மட்டுமல்ல வரும் எந்தக் காதலர் தினமும் இனி உன்னோடு தான்...நான் காதலிக்கிறேன் என்பதினாலல்ல உன்னால் இந்த அளவு காதலிக்கப் படுகிறேன் என்பதில் தான் பெருமிதம்கொள்கிறது நம் காதல்...



(பி.கு.
* குறிப்பிட்ட இரண்டு கவிதைகளும் மேலே சொன்னது போல் எனக்குக் குறுஞ்செய்தியில் வந்தவையே..........)



இனிய காதலர் தின வாழ்த்துக்கள்...