Thursday, June 18, 2009

பதிலைத் தேடிய கேள்விகள்...




ஏழு நண்பர்கள் என்னை இந்த தொடர் பதிவிற்கு அன்போடு அழைத்திருக்கிறார்கள்,
எட்டாவதாக ஒருவர் என்னை அழைக்க விரும்பி இருந்தார், முதலில் இந்த எட்டு
பேருக்கும் எனது நன்றிகள்...


1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது…? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா…?

எங்கள் ஊரில் திருவிழாக்கள் கொண்டாடும் வழக்கமில்லை திருமணம் மற்றும் பெயர்சூட்டு விழா போன்றவற்றைத் தான் ஒவ்வொரு வீட்டிலும் திருவிழாவாக கொண்டாடுகிறார்கள். அப்படியொரு சிறு விழாவில் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் பெரியோர்களால் சூட்டப் பட்டது எனது பெயர். எனவே, என் பெயர் எனக்கு மிகவும் பிடிக்கும்.

எனக்கு பெயர் சூட்டும் போது இரண்டு வயது இருக்கும்...



அப்போது நான் இப்படித்தான் இருந்தேன்...

புதியவன்” என்பது பள்ளி, கல்லூரி நாட்களில் கவிதைகள் எழுதிய போது எனக்கு நானே வைத்துக் கொண்ட புனைப் பெயர். பதிவுலகிற்கு வந்த போது அந்த பெயரிலேயே எழுத ஆரம்பித்து விட்டேன்...இந்தப் பெயரும் எனக்கு மிகவும் பிடிக்கும்...

2. கடைசியாக அழுதது எப்பொழுது…?

நெகிழ்வான நிகழ்வுகள் மனதை நெருடும் போது கண்களில் நீர் துளிர்க்கும்...கடைசியாக எப்பொழுதென்று நினைவில் இல்லை...

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா…?

என்னுடைய கையெழுத்து அழகாக இருக்காது என்றாலும்...பிடிக்கும்...

4. பிடித்த மதிய உணவு என்ன…?

தேனும் திணை மாவும் எனக்குப் பிடிக்கும் என்று சொன்னால் எந்த நூற்றாண்டில் வாழ்கிறீர்கள் என இன்னொரு கேள்வி கேட்க்கப் படலாம், வீட்டை விட்டு வெகு தொலைவில் இருப்பதால் மதிய உணவில் பெரிதாக கவனம் செலுத்துவதில்லை...

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா…?

என் வானத்தில் நட்பு நட்சத்திரங்கள் மிக அதிகம் அவர்களுக்கான
எனது முதலீடு ஒரு சிறு புன்னகை மட்டுமே...
புன்னகைப்பதற்கு நான் அதிக நேரம் எடுத்துக் கொள்வதில்லை...

6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா…?

அருவியில்...

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்…?

விழிகள் பேசுவதை மொழி பெயர்த்தால் மனதில் உள்ளதை
புரிந்து கொள்ள முடியும் என்பதால், முதலில் விழிகள்...

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன…?

பிடித்த விசயம் : பிறர் மனம் புண் படாமல் பேசுவது
பிடிக்காதது : அதீத பொறுமை என்னும் கூட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும் அதீத கோபம்...

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது…?

சரி பாதின்னா...ஓ...கவிதையை பற்றிய கேள்வியா...?

என் கவிதை
கொஞ்சும் போதும்
கெஞ்சும் போதும்
எப்போதும் அழகு
சிணுங்கும் போதோ மிக அழகு
இவையெல்லாம்
எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று
பிடிக்காததென்று எதுவும் இல்லை
பிழையில்லாக் கவிதையில்
குறை காண முயல்வது
முதல் குற்றம்
கவிதையின்றி
கவிஞன்
தனித்து செயல் பட
நினைப்பதும் குற்றமே...

10. யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்…?

தூரங்களெல்லாம் வெறும் இடைவெளிகள் மட்டுமே அவற்றையும் அவர்களின் நினைவுகள் கொண்டே நிரப்பி வைத்திருக்கிறேன்...
எல்லோரும் எப்போதும் என் மனதின் பக்கத்தில் இருப்பதால் வருந்துவதில்லை...

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்…?

கிரீம் கலர் பேண்ட் கருப்பு நிற ஷர்ட்...

12. என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க…?

சுதா ரகுநாதனின் மயக்கும் குரலில் ”அனல் மேலே பனித்துளி”...

13. வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை…?

என்னவள் விழியின் வண்ணம்...அட...கருப்பு தாங்க...

14. பிடித்த மணம்…?

மண் வாசனையும்
மழலை வாசனையும் பிடிக்கும்
அவள் கூந்தலில் இருக்கும் போது மட்டும்
மல்லிகை வாசனை பிடிக்கும்,
அவள் வாசனை
பிடிக்காது என்று சொன்னால்
காதல் கவிதை எழுதுவதற்கு
நான்
தகுதியற்றவனாகிவிடுவேன்...

15. நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார்…? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன…?

எனக்குத் தெரிந்த அனைவரும் எழுதி விட்டதால் யாரை அழைப்பதென்று தெரியவில்லை...

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு…?

1. இரவீ
2. வழிப்போக்கன்
3. ஜீவன் அண்ணா
4. ரோஸ்
5. மயில்
6. குடந்தை அன்புமணி
7. ஸ்ரீமதி
8. தமிழரசி

தனித்தனியே பிரித்து சொல்ல முடியவில்லை, எனவே இவர்களின் அனைத்து பதிவுகளும் பிடிக்கும் என்று சொல்லலாம்...

17. பிடித்த விளையாட்டு…?

பள்ளியில் படிக்கும் போது கிரிக்கெட்
கல்லூரியில் டென்னிஸ்
எப்போதும் செஸ்
இப்போதும் அதுவே...

18. கண்ணாடி அணிபவரா…?

இந்த பதிவு எழுதும் போது கண்ணாடி அணிந்திருக்கவில்லை...

19. எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்…?

மென்மையான காதல் சொல்லும் படங்கள் மற்றும்
வன்முறையில்லாத நகைச்சுவை படங்கள்...

20. கடைசியாகப் பார்த்த படம்…?

Angels and Demons...

21. பிடித்த பருவ காலம் எது…?

இலையில் வழியும்
ஒரு துளியில்
விரல் நனைக்க
மனம் நனையும்
பனி படர்ந்த
அந்த அழகிய
மார்கழி மாதம்...

நான் பிறந்ததும் அந்த மாதத்தில் தான்...

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்…?

மாலனின் ”வழி தவறிய வண்ணத்துப் பூச்சிகள்”...

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்…?

மாற்றுவதில்லை...

24. உங்களுக்கு பிடித்த சத்தம்…? பிடிக்காத சத்தம்…?

மூங்கில் துளைத்து வெளி வரும் சுவரங்கள் அனைத்தும் பிடிக்கும்

அபசுவரங்கள் பிடிக்காது...

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு…?

எங்க வீட்டில் இருந்து ஏறக்குறைய 3,145,000 மீட்டர்...
(சிங்கப்பூர்)

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா..?

இந்த கேள்விகளுக்கு பதில் எழுதுவதற்கே பெரிய திறமை
வேண்டும் போலிருக்கே...

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்…?

நம்பிக்கை துரோகம்...

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்…?

சாத்தான்களெல்லாம் காதல் கற்றுக் கொண்டதில் சமத்தா ஆகிடுச்சுங்க...

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்…?

இயற்கை எழில் கொஞ்சும் எந்த தலமும் எனக்குப் பிடிக்கும்...

30. எப்படி இருக்கணும்னு ஆசை…?

தீயோர்க்கும் நல்லவனாக...

31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்…?
(இதையே நான் இப்படி எடுத்துக் கொள்கிறேனே...)
கவிதை இல்லாம செய்ய விரும்பும் காரியம்…?

கேள்வி (9) திற்கான பதிலில் கடைசி நான்கு வரிகளை மட்டும் படித்துக் கொள்ளுங்கள்...

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

இறைவன் எழுதிய கவிதை
மனிதன் வாழும் வாழ்க்கை,
வாழ்வின் இலக்கணங்களை மட்டுமே
அவன் எழுதியனுப்புகிறான்
இலக்குகளை
நாம் தான்
தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம்

நாம் தேர்ந்தெடுக்கும் இலக்கு
இனிப்பு சுவை சொட்டும்
தேனாக இருக்கட்டும்
வலிக்கக் கொட்டித்
துடிக்கச் செய்யும்
தேளாக இருக்க வேண்டாமே...



ஒரு அறிவிப்பு நண்பர்களே...


நெடுநாட்களாக
நான்
நேசித்து எழுதிய
காதலொன்று
நான் வாசிப்பதற்காக
காத்திருக்கிறது...


எனவே,

விடுமுறையில் ஊர் செல்கிறேன் நண்பர்களே, இதுவரை என் எழுத்துக்களை வாசித்து கருத்தூட்டமிட்டு உற்சாகமளித்த அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள்...இறைவன் நாடினால் வலையின் வழியே சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சந்திப்போம் என்று கூறி உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்...


நிகரில்லா நட்புடன்,

- புதியவன்.




Thursday, June 4, 2009

காதல் கடிதங்களென...


பகலின் மேலுதட்டில்
இரவு முத்தமிட
கீழ்வானம்
வெட்கத்தில் சிவந்தது

அந்தியில்
நீ
சந்திக்க வருவதாய்
சொன்னதிலிருந்து
சிந்திக்க ஏதுமின்றி
நேரத்தை
நிந்திக்கத் தொடங்கினேன்

கையில்
நீ
அனுப்பிய
கடிதத்துடன்
உன் வருகைக்காக
காத்திருக்கும்
எல்லா நேரங்களிலும்
எப்படியாவது வந்து
ஒட்டிக் கொள்கிறது
மாலை நேரமும்
ஒரு அழகு நிலாவும்

உன் எச்சில் தொட்டு
ஒட்டியனுப்பாத
கடிதங்களை
காதல் கடிதங்களென
என்னால்
ஏற்றுக்கொள்ள முடியாது
அவை
வெறும் வெற்றுக்
காகிதங்கள் மட்டுமே...

அல்லிக் குளத்தில்
வளர்ந்திருந்த
மல்லிச் செடிகளெல்லாம்
உன் வரவுக்காக
ஒற்றைக் காலில்
தவமிருக்கின்றன

சற்று தாமதமாய்
வந்த நீ
தாமதிக்காமல்
ஒரு புன்னகைப் பூவை
பறித்து வைக்கிறாய்
மலர்களெல்லாம்
மலர்வதற்கு
கற்றுக் கொள்கின்றன...

ஒரு மலரை கொய்து
பரிசளிக்கிறேன்
என் மனதைக்
கொய்து போய்விடுகிறாய்
எனக்குத் தெரியும்
இது மலர்களுக்குள்
தீட்டப் படும்
பழிவாங்கும் திட்டமென...

காதல் சாலையெங்கும்
வெட்கம் விதைத்துச்
செல்கிறாய் நீ
முத்தம் விளைவதற்காய்
காத்திருக்கிறேன் நான்...

என் கை விரல் பட்டு
அறுந்து விழுந்த
உன் கால் கொலுசின்
தெறித்துச் சிதறிய
மணிகளின் ஒலியில்
என்
மனவெளியெங்கும்
சிதறிக் கிடந்தன
சில
கவிதைகள்................