Tuesday, February 10, 2009

ஐந்து நிமிட ஆசையும்…வாழ்விழந்த வார்த்தைகளும்...



ஐந்து வருடங்கள்
காதல் பேசியிருக்கிறோம்
இன்னும் சில மாதத்தில்
மணநாளும் வந்து விடும்
விரல்கள் தொட்டுக் கொள்வதைக் கூட
விதிவிலக்காக்கியவள் நீ
என் ஆசையை சொன்னால்
என்ன நினைப்பாயோ...?
இந்த ஐந்து நிமிட ஆசைக்காக
ஐந்து வருடக் காதலை ஏதும்
தவறாக நினைத்திடுவாயோ...?
திருமணத்திற்குப் பின்
நமக்குள் தினம் நடக்கப் போகும்
ஒரு அழகிய நிகழ்வு தானென்றாலும்
இப்போது இதற்கு சம்மதிப்பாயா...?
இது ஒன்றும் தவிர்க்க வேண்டிய
ஆசையில்லை என்றாலும்
தவிர்க்க முடியாததால் தவிக்கிறேன்
நெடுநாட்களாக அடங்காத ஆசையின்
அதீத வலியில் பெற்றெடுக்கப்பட்டது
இந்தப் பேராசை...
ஐந்தே நிமிடங்கள்
நான் கண் மூடி தலைசாய
உன் மடி கொஞ்சம் தருவாயா.......?



வாழ்விழந்த வார்த்தைகள்...

வழக்கொழிந்த தமிழ் சொற்கள் தொடர் பதிவில சாரல் பூர்ணிமா சரண் என்னை டேக் பண்ணி இருந்தாங்க ஏதோ என்னால் முடிந்த சில வார்த்தைகளை எழுதியிருக்கிறேன்...

அக்குரோணி – 21870 தேர், 21870 யானை, 65610 குதிரை, 109350 காலாள் கொண்ட சேனை
ஆதபத்திரம் – குடை
இம்மி - பத்து இலட்சத்து எழுபத்தையாயிரத்து இரு நூற்றில் ஒரு பங்கு
ஈசானம் – வடகீழ்த்திசை
உள்ளி – வெங்காயம்
ஊர்ணநாபி – சிலந்தி
எரிமலர் – செந்தாமரை
ஏகாலி – சலவைத் தொழிலாளி
ஐவண்ணம் – மருதாணி
ஒகரம் – மயில்
ஓதவனம் – கடல்
ஔசித்தியம் – தகுதி

இந்த வார்த்தைகளை எல்லாம் நான் எங்கே இருந்து எடுத்தேன்...அப்படின்னு நீங்க சுலபமாக கண்டு பிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்......................