Friday, February 27, 2009

என்னை கவர்ந்தவர்...எல்லோரையும் கவர்ந்தவர்...!?


என்னை கவர்ந்தவர் என்ற தொடர் பதிவில் என்னை இணைத்த ஜீவன் அண்ணா அவர்களுக்கு என் நன்றிகள்...பிடித்தவர் என்றால் எல்லோரையும் தான் பிடிக்கும். ஆனால், அனைவரையும் பட்டியலிட முடியாதே...அதனால் என்னை மிகவும் கவர்ந்தவர் என்று சொல்வதைவிட நான் பார்த்து அதிசயித்தவர் பலர். அதில் மிக முக்கியமான ஒருவர்...இயற்பெயர் “எக்னஸ் கோஞ்செ பொயாஜியூ”

இவரைப் பற்றி சில வரிகள்....

யூகொஸ்லாவியா நாட்டிலிருந்து
புறப்பட்டது ஓர் வெள்ளைப் புறா
கருவில் உயிரை சுமந்ததில்லை எனினும்
தன் அதீத அன்பில்
உலகின் உயிரையெல்லாம்
தன் கருணை இல்லத்தில் சுமந்தவர்
தேசம் தாண்டி உலகுக்கெல்லாம்
அன்பென்ற ஒரே தேசியகீதம் பாடியவர்
பார்வையால் தொடுவதைக் கூட
நம்மில் பலர் அருவருக்கும்
தொழு நோயாளிகளை
தொட்டுத் தூக்கித் துடைத்தெடுத்து
அன்பும் ஆதரவும் காட்டியவர்
1979ம் ஆண்டு வரை சாதனையாளர்களை
பெருமைப் படுத்திக் கொண்டிருந்த
நோபல் பரிசு
இவருக்கு வழங்கப்பட்டதால்
தானும் பெருமைப்பட்டுக் கொண்டது
இவரிடம் ஒரு ஆயுதம் இருந்தது
மிதமிஞ்சிய சகிப்புத்தன்மை என்னும் ஆயுதம்
நிதி கேட்டு நீட்டிய கையில்
எச்சில் உமிழ்ந்தவனிடம்
“நீங்கள் அன்போடு அளித்ததை
நான் எனக்காக வைத்துக் கொள்கிறேன்
இந்த ஆதரவற்றவர்களுக்காக உதவுங்கள்” என்று
மறு கையை மீண்டும் நீட்டியவர்
இவரைப் பிடிக்காது என்று
யாரும் சொல்லிடுவர்
என்று நான் நம்பவில்லை
அன்னையைப் பிடிக்காதவர்
அகிலத்தில் உண்டோ......?
அப்படியெனில்,
அன்னை தெரசாவைப் பிடிக்காதவரும்.........


இந்த தொடர் பதிவின் விதிமுறைப்படி யாராவது இரண்டு பேரை இணைக்க வேண்டுமாம்...எனவே நான் அழைக்க விரும்புவது...

சாரல் – பூர்ணிமா சரண்
என் உயிரே - அபுஅஃப்ஸர்


Saturday, February 21, 2009

எல்லாம் சரியாகத்தான் செய்கிறாய்...


அன்று வீட்டை விட்டு
புறப்படும் போதே
வானொலியில்
வானிலை அறிக்கை
காற்றின் ஈரப்பதத்தில்
காதல் கலந்து விட்டதால்
இன்று சுழற்றி அடிக்கும்
தென்றல் காற்றில்
உங்கள் மனம்
கொள்ளையடிக்கப் படலாம்...

நாம் முதன் முதலில்
சந்தித்துக் கொண்ட பூங்காவில்
எழுதி வைக்கப்பட்டிருந்தது
பூக்களைப் பறிக்காதீர்கள்
மீறினால்...
நீங்கள் எதிர் பாராமல்
சந்திக்கும் பூவினால்
வலுக்கட்டாயமாக
உங்கள் இதயம்
பறிக்கப்படக் கூடும்...

இந்த இரண்டு
எச்சரிக்கைகளையும் மீறியதில்
இதோ என் பக்கத்தில்
இப்போது என்ன நடக்கிறது...?

சொல்ல வந்ததை
சொல்ல முடியாமல்
நகம் கடித்து
தவறாக சொல்லிவிட்டதாய்
நினைத்து
உதடு கடித்து
உன் வெட்கத்தைக்
கால் வழியே கோலமாக்கி
எல்லாம் சரியாகத்தான்
செய்கிறாய்...
ஆனாலும்
உனக்கெதற்கு இவ்வளவு சிரமம்
அந்த இரண்டாவது
விசயத்தையாவது
நான் பார்த்துக்கொள்கிறேனே........


Saturday, February 14, 2009

இனி உன்னோடு தான்...உனக்கு நினைவிருக்கிறதா...?
நம் முதல் சந்திப்பு
அந்த செவ்வரளி மரத்தின் நிழல்
அதுவரை நுகர்ந்திராத
ஏதோ ஒரு மலரின் வாசம்
வாசனைக்கு வசப்பட்ட
வண்டு ஒன்று
அந்த பட்டப் பகலில்
மலர்களை
வட்டமடித்துத் திரிந்தது

அங்கே
நம் பார்வைகள்
பயிரிடப்பட்டதில்
அமோகமாய்
விளைந்திருந்தது காதல்
உன் காதலின் கவன ஈர்ப்புத்
தீர்மானத்தில் கைது செய்யப்பட்டன
என் கனவுகள்
உன் வீட்டிற்குத் தெரியாமல்
எனக்காக நீ மறைத்து
எடுத்து வந்திருந்த
வாழ்த்து அட்டை

காதலர்கள் பரிமாறிக் கொண்ட
முதல் பரிசுப் பொருள்
மலர்களாகத் தான்
இருக்க வேண்டும்
என்ற நம்பிக்கையில்
சற்று தள்ளியதொரு கடையில்
உனக்காக
நான் வாங்கிய
வேற்று தேசத்தில்
பூத்த பூவொன்று
விற்றுக் கொண்டிருந்த
சிவப்பு ரோஜாக்கள்

நான் கவனித்தேன்
காதலர்கள்
தன்னைத்தான் அதிகமாக
பரிமாறிக் கொள்கிறார்கள் என்ற
கர்வத்தில் அந்த ரோஜாவுக்கு
ஒரு முள் முளைத்திருந்தது

எப்படி காதலை சொல்லிக்கொள்வது
என்று தெரியாமல் அங்கு
அடர்ந்திருந்த மௌனங்கள்
அந்த இரண்டு நிமிட மௌனதில்
தொலைந்து போயிருந்தது
என் இரண்டு வருட ஆயுள்...

கடைசியில் எப்படித்தான்
சொல்லிக் கொண்டோம்
நம் காதலை...?
வார்த்தையில் சொல்லியிருந்தால்
எழுதிக்காட்டிவிடலாம்
மௌனத்தை எப்படி எழுத முடியும்...?

முத்தங்கள் என்ற பெயரில்
வெறும் சத்தங்களை மட்டுமே
பரிசளிக்க முடிந்த
சென்ற வருடம் போல்
இந்த வருடமும் முடியவில்லை
காதலர் தினத்தில்
உன்னை சேர்வதற்கு
ஆதலால்,
பதிவுத் தபாலில் பாசம்
பார்சலில் வந்திருக்கிறது
நம் வாழ்த்து அட்டைகளைத் தான்
சொன்னேன்

இப்போதைக்கு எனக்கு இருக்கும்
ஒரே ஆறுதல்
எத்தனை முறை படித்தாலும்
புதிதாகத் தோன்றும்
உன் முதல் கடிதத்தின்
கடைசி வரிகள் தான்

நீ அலைபேசியில் அனுப்பிய
இரண்டு குறுஞ்செய்திகள்
வாசித்துப் பார்த்தேன்
எனக்குத் தெரியும்
அவை காதலினால் வந்த
உன் கவிதையின் முயற்சி

உனது முதல் கவிதை

*“உன் மனதில்
நான் குடியிருக்கிறேன்
என்னைப் பார்க்க
ஆசையாய் இருந்தால்
உன்
இதயத்தில்
கை வைத்துப் பார்
உன் அன்புக்காக
நான் துடிப்பது தெரியும்...”

படித்ததும் நெகிழ்ந்தேன்...

உனது அடுத்த கவிதை

*“முதல் முறையாக
என்னை நினைத்து
நீ
கண்ணீர் விடுவாய்
எழுந்து உன் கண்ணீரைத்
துடைக்க முயற்சி செய்வேன்
நான்
இறந்துவிட்டேன்
என்பதையும் அறியாது...”

படித்ததும் அழுதேன்...

அதுவரை கொட்டிய மழை சட்டென நின்றது...மெல்லத் தெளிந்திருந்தது வானம்...என் மனதும் தான்...

இதோ புறப்பட்டுவிட்டேன் இந்தக் காதலர் தினம் மட்டுமல்ல வரும் எந்தக் காதலர் தினமும் இனி உன்னோடு தான்...நான் காதலிக்கிறேன் என்பதினாலல்ல உன்னால் இந்த அளவு காதலிக்கப் படுகிறேன் என்பதில் தான் பெருமிதம்கொள்கிறது நம் காதல்...(பி.கு.
* குறிப்பிட்ட இரண்டு கவிதைகளும் மேலே சொன்னது போல் எனக்குக் குறுஞ்செய்தியில் வந்தவையே..........)இனிய காதலர் தின வாழ்த்துக்கள்...Tuesday, February 10, 2009

ஐந்து நிமிட ஆசையும்…வாழ்விழந்த வார்த்தைகளும்...ஐந்து வருடங்கள்
காதல் பேசியிருக்கிறோம்
இன்னும் சில மாதத்தில்
மணநாளும் வந்து விடும்
விரல்கள் தொட்டுக் கொள்வதைக் கூட
விதிவிலக்காக்கியவள் நீ
என் ஆசையை சொன்னால்
என்ன நினைப்பாயோ...?
இந்த ஐந்து நிமிட ஆசைக்காக
ஐந்து வருடக் காதலை ஏதும்
தவறாக நினைத்திடுவாயோ...?
திருமணத்திற்குப் பின்
நமக்குள் தினம் நடக்கப் போகும்
ஒரு அழகிய நிகழ்வு தானென்றாலும்
இப்போது இதற்கு சம்மதிப்பாயா...?
இது ஒன்றும் தவிர்க்க வேண்டிய
ஆசையில்லை என்றாலும்
தவிர்க்க முடியாததால் தவிக்கிறேன்
நெடுநாட்களாக அடங்காத ஆசையின்
அதீத வலியில் பெற்றெடுக்கப்பட்டது
இந்தப் பேராசை...
ஐந்தே நிமிடங்கள்
நான் கண் மூடி தலைசாய
உன் மடி கொஞ்சம் தருவாயா.......?வாழ்விழந்த வார்த்தைகள்...

வழக்கொழிந்த தமிழ் சொற்கள் தொடர் பதிவில சாரல் பூர்ணிமா சரண் என்னை டேக் பண்ணி இருந்தாங்க ஏதோ என்னால் முடிந்த சில வார்த்தைகளை எழுதியிருக்கிறேன்...

க்குரோணி – 21870 தேர், 21870 யானை, 65610 குதிரை, 109350 காலாள் கொண்ட சேனை
தபத்திரம் – குடை
ம்மி - பத்து இலட்சத்து எழுபத்தையாயிரத்து இரு நூற்றில் ஒரு பங்கு
சானம் – வடகீழ்த்திசை
ள்ளி – வெங்காயம்
ர்ணநாபி – சிலந்தி
ரிமலர் – செந்தாமரை
காலி – சலவைத் தொழிலாளி
வண்ணம் – மருதாணி
கரம் – மயில்
தவனம் – கடல்
சித்தியம் – தகுதி

இந்த வார்த்தைகளை எல்லாம் நான் எங்கே இருந்து எடுத்தேன்...அப்படின்னு நீங்க சுலபமாக கண்டு பிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்......................


Monday, February 2, 2009

இன்றும் தொடர்கிறது…


நமக்கான தனிமையின் எல்லைகள்
வரையறுக்கப் பட்டிருக்கவில்லை
என்ற போதிலும்
எனக்கான அவளைப் பற்றியும்
உனக்கான அவனைப் பற்றியும்
இரண்டங்குல இடைவெளியில்
பேசிக் கொண்ட ரகசியங்கள்
நமக்கான உறவில்
எந்த ஒரு மாற்றத்தையும்
ஏற்படுத்தி இருக்கவில்லை
இவன் தான் உனக்கான அவன் என்று
நீ அவனுடைய புகைப்படம் காட்டி
உனக்கு பிடித்திருக்கிறதா...?
என்று கேட்க்கும் வரை
அதன் பிறகு
நமக்கான இடைவெளி அகண்டது
அந்த அகண்ட வெளி முழுதும்
அர்த்த மற்ற எண்ணங்கள்
ஆக்கிரமித்துக் கொண்டன
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
சொல்ல வந்து சிதறுண்டன சொற்கள்
கால தாமதமாக எழுதப் பட்ட காதலால்
இலக்கணப் பிழையோடு
இன்றும் தொடர்கிறது
நமது நட்பு...................