Wednesday, January 28, 2009

உன் காதலினால்...சில நினைவுகள்...


வேலை நிமித்தமாக ஒரு மாத காலம் வெளியூர் செல்கிறேன். நம் திருமணத்திற்குப் பின் நாம் சந்திக்கும் முதல் பிரிவு அது. நான் புறப்படும் போது கட்டி அணைத்து நீ கொடுத்த முத்தத்தின் ஈரம் பயணக்களைப்பில் முகம் கழுவிய போதும் கலையாமல் இன்னும் அப்படியே இருக்கிறது. இதற்கு முன் எத்தனையோ நாட்கள் தனிமையில் இருந்திருக்கிறேன் உணர்ந்ததில்லை. இப்போது தான் தனிமை என்னைத் தத்தெடுத்துக் கொண்டதாய் ஒரு தவிப்பு. உன் காதலின் கட்டுப்பாட்டில் கடந்து சென்ற அந்த அழகான நாட்களின் நினைவுகள் கண்ணாடியில் தோன்றும் பிம்பங்களாய் என் மனக் கண்ணாடியில் பிரதி பலிக்கின்றன.

மணமான முதல் நாள் நான் உன் விரல் தொட்ட போது ஏற்பட்ட திடீர் ஸ்பரிசத்தில் உன் உடல் நடுங்கிய அந்த அழகிய நிமிடங்கள். முதல் முத்தத்தின் போது விழிகளுக்கும் இதழ்களுக்கும் இடையே நடந்த அந்த வெட்கப் போராட்டம். இப்படி நினைத்து நினைத்து ஆனந்தப்பட ஆயிரம் நினைவுகள் என் மனதில்.

கணினி நுட்ப்பங்களையும் ஜாவா போன்ற கணினி மொழிகளையும் சுலபமாகக் கற்றுத் தெரிந்து கொண்ட எனக்கு நம் மணமான புதிதில் உன் வெட்க மொழி புரியாமல் தடுமாறி இருக்கிறேன் பல முறை. வேண்டுமென்றால் வேண்டுமென்றும் வேண்டாமென்றாலும் வேண்டுமென்றும் அர்த்தமாமே உன் வெட்க மொழியில். எந்த ஒரு அகராதியிலும் படித்ததாய் நினைவில் இல்லை இது போன்ற அழகிய அர்த்தங்களை.

அந்த மழைக்கால மாலைப் பொழுதில் மயில்தோகை நிறத்தில் புடவை அணிந்து நீ நடந்து வந்த அழகைப் பார்த்திருந்தால் மயில்கள் மயங்கித்தான் போயிருக்கும். சூடான தேனீர் கோப்பையுடன் இனிப்பான பலகாரத்தட்டுகளுமாய் என் அருகில் அமர்ந்து ஆசையாய் ஊட்டி விட்டுப் பின் கடைசியாய் நீ கொடுத்த முத்தம் அந்த மழை நேரக் குளிருக்கு சூடான தேனீரை விட சூடாகத்தான் இருந்தது. அதன் பிறகு உன் முத்தத்தின் தித்திப்பில் இனிப்பான பலகாரம் இனிப்பின்றிப் போனது ஒன்றும் ஆச்சர்யமில்லை.

நினைவலைகள் நீண்டு கொண்டே போகின்றன நிலவொளியின் எதிர்த் திசையில் நிழல்கள் நீள்வது போல்.

கைகளில் பட்டுத் தெரிக்கும் மழைத் துளியின் சிதறல்களை ரசிக்கும் குழந்தையைப் போல் உன் கன்னத்தில் பட்டு தெரிக்கும் உன் வெட்கச் சிதறல்களை ரசிப்பதற்காக வேணும்...இது போன்ற இனியொரு பிரிவுப் பயணத்தை தவிர்த்திட வேண்டும். முன்னைக் காட்டிலும் ஆவலாய் இருக்கிறேன் உன்னைப் பார்ப்பதற்கு...எனக்குத் தெரியும் நீ என்னைக் காட்டிலும் ஆவலாய் இருப்பாயென்று............................


Friday, January 23, 2009

மீண்டும்...மீண்டும்...காதலோடு...


அது உலகத்தின் இறுதி நாள்
கலகத்தால் உலகம் அழிந்து விடுகிறது
கடைசி மனிதனின்
கடைசி மூச்சுக் காற்றில் கலந்து
எல்லாமுமாய் இருந்தது
எதுவுமில்லாமல் போய்விட்டது
சூன்யம் சூழ்ந்து கொள்கிறது
எங்கெங்கு காணினும் வெறுமை
காலங்கள் கணக்கின்றி கடக்கின்றன
வெறுமையில் வெறுப்படைந்த
இந்தப் பிரபஞ்ச நாயகன்
மீண்டும் தன் படைப்புத்
தொழிலைத் தொடங்க எண்ணி
தன் உயிர்க் காற்றை ஊதுகிறான்
உயிரினங்கள் உயிர்ப்பித்து
இரண்டிரண்டாய் பல்கிப் பரவுகின்றன
முதல் மனிதன் மட்டும் இறுதியாக
தனியாகப் படைக்கப்படுகிறான்
அவனுக்கு முன் இளமை மாறாத
அழகிய தேவதைகள் அணிவகுக்கப் பட்டு
இவர்களில் யாரை வேண்டுமானாலும்
நீ துணையாக்கிக் கொள்ளலாம்
என்று சொல்லப் படுகிறது
ஒருவர் பின் ஒருவராக
அனைவருடைய விழிகளையும்
மனதையும் பார்த்து விட்டு
”காதல் இல்லாத இவர்களுக்கு
என் கனவில் கூட இடமில்லை” என்று
மூலப்பொருளிடம் முதல் மனிதன் கூறுகிறான்
ஆச்சர்யமடைந்த ஆதிசக்தி
தனக்குள் நினைத்துக் கொள்கிறது
”மனிதா இவ்வளவு நல்லவனா நீ...?”
வேறு வழியின்றி அவனிடமிருந்தே
அவனுக்கான துணையை படைத்து
காதல் காற்றை இருவர் இதயத்திலும்
நிரப்பி பூமிக்கு அனுப்பிவிட்டு...
இனியொரு முறை இவ்வுலகத்தை
அழிக்கவேண்டியிருக்காது என்று
காலத்தைப் படைத்தவன்
காலப் புத்தகத்தில் தீர்ப்பெழுதி
கையெழுத்திடுகிறான் காதலோடு.........


Monday, January 19, 2009

ஒரு மழைத்துளியின் போராட்டம்…


சூல் கொள்ளப் பட்ட
மேகக் கருவறையின் வழியே
கோடிப் புள்ளிகளாய் கொட்டுகிறது மழை
மண்புழுவின் உபயத்தில் வெளியேறிய
மண்வாசம் சுவாசம் நிரப்புகிறது
மழைத்துளி ஒவ்வொன்றும்
மரம் மீதும் மலை மீதும் கடல் மீதும்
இன்னுமுள்ள எல்லாவற்றின் மீதும்
பட்டுத் தெறித்து பரவசப் படுத்துகிறது
மலர்களெல்லாம் மழை கண்ட மகிழ்ச்சியில்
மகரந்தச் சேர்க்கைக்கு மடல் அனுப்பி
ஒத்திகை பார்த்துக் கொண்டாடுகிறது
எல்லா மலர்களோடல்லாமல்
நீ மட்டும் தனி மலராய்
இவையனைத்தையும் வேடிக்கை
பார்த்துக் கொண்டிருக்கிறாய்
இந்த மழைத்துளியின் ஒரு துளி
உன் மேல் காதல் கொண்டு
சுழற்றி அடிக்கும் காற்றின்
உதவியோடு உன்னை நனைக்கிறது
தன் ஈரத்தால் குளிர்விக்கிறது
எப்படியாவது உன் காதலை பெற்றிட
தன்னாலான அனைத்தையும் செய்கிறது
ம்ம்ம்ஹூம்ம்ம்...
ஒன்றும் நடக்கவில்லை
உன்னில் எந்த ஒரு மாற்றமோ
காதல் துடிப்போ ஏற்படுவதாயில்லை
பாவம்...இந்த மழைத்துளி
அதற்கெப்படித் தெரியும்
நீ சுவாசத்தின் சுயமறியாதவள் என...
கடைசியாக நீயாவது சொல்லிவிடேன்
காகிதப்
பூக்கள்
காதல்
கொள்வதில்லை என்று...................இந்த கவிதையை யூத்ஃபுல் விகடனில் படிக்க இங்கு செல்லலாம்...
 

Friday, January 16, 2009

இன்னும் சில முத்தங்கள்...கண்களில் தொடங்கி
கன்னத்தில் வழிந்து
இதழ்களில் தேங்கும்
உன் வெட்கத் திருவிழாவில்
நான் தொலைந்து போய்விட்டேனடி...
எப்படியாவது என்னைக் கொஞ்சம்
தேடி எடுத்துக் கொஞ்சேன்...


இறுக்கி இறுக்கி
அணைத்துக் கொள்கிறாய்
என்னை உன் நினைவுகளில்
நேரில் வந்தால் மட்டும்
அதே இறுக்கத்தோடு
அணிந்து கொள்கிறாய்
உன் வெட்கத்தை...
இன்று மட்டுமாவது
உன் வெட்கத்தை அவிழ்த்துவிட்டு
என் முத்தத்தை அணிந்து கொள்வாயா நீ...முத்தச் சத்தத்திலேயே உறங்கி
உன் இதழின் ஈரத்திலேயே
விழித்துப் பழகி விட்டேன்
இப்படி ஊடல் என்ற பெயரால்
எனக்கு உறக்கமும் விழிப்பும்
இல்லாமல் செய்து விட்டாயடி...சங்கொலி கேட்டுத் தொடங்கும்
போர் போல
உன் சிணுங்கல் ஒலியில் தானே
தினமும் தொடங்குகிறது
நமது முத்தப் போர்
உன் வெட்கத்தை வெல்லாமல்
என்றும் முடியப்போவதில்லை
இந்தக் காதல் போர்...


ஒவ்வொரு முறையும்
பாடத்தில் தவறு செய்யும் போது
நான் உனக்கு
ஒரு முத்தம் தருவேன்
அதே போல் பாடத்தை
சரியாகச் செய்யும் போது
நீ எனக்கு
ஒரு முத்தம் தரவேண்டும்
என்று சொன்னதற்காக
இப்போதெல்லாம்
தவறுகளை மட்டுமே
சரியாகச் செய்கிறாயடி...உன்னைப் பார்ப்பதற்காக
இரண்டாயிரம் மைல்கள்
கடந்து வந்திருக்கிறேன்
நீ என்னவென்றால்
கன்னத்தில் கொடுக்கிறாயடி
உன் முத்தத்தை...
கன்னத்திற்கும் உதட்டுக்கும் என்ன
இருபது மைல் தூரமா இருக்கிறது...?
இன்னும் கொஞ்சம் முயன்றுதான் பாரேன்
முடியாமலா போய்விடும் உன் இதழ்களால்............?


Tuesday, January 13, 2009

தலைவன்…தலைவி...பிரிவு...இரு கடிதம்...


பிரிந்திருக்கும் காவியக் காதலர்களின் கடிதப் பரிமாற்றம் எப்படி இருந்திருக்கும்...?...ஒரு வேளை இப்படி இருந்திருக்குமோ...?


தலைவியின் கடிதம் :


பொருள் தேடிப் புலம் பெயர்ந்த
என் மன்னவனே
மூன்று திங்கள் முழுதாய் முடிந்துவிட்டது
பாதித் திங்கள் பழுதின்றிப் போய்விட்டது
ஐந்து திங்களானால் அனலாய்ப் போய்விடுவேன்
பகல் பொழுதினில் பாதகமில்லை
இரவு வந்துவிட்டால்
இணைந்திருந்த நினைவெல்லாம்
இன்னல் பல காட்டுகிறது
நாம் சேர்ந்திருந்த சோலையெல்லாம்
என் சேலை பார்த்து சிரிக்கின்றது
மன்னவனே உன் சுவாசமின்றி
இங்கு மலர்களிலும் வாசமில்லை
உடல் மெலிந்தேன்
முகம் பொலிவிழந்தேன்
உறங்கும் உணர்விழந்தேன்
உள்ளத்தின் பிரிவுப் பிணி
உடல் முழுதும் படர்ந்திட்டது
பிணி போக்க மருந்தாக
நீ
வரும்
காலம்
எப்போது............?


தலைவனின் பதில் கடிதம் :

கண் இமைக்குள் வாழ்பவளே
என் இதயத்தை ஆள்பவளே
காலக்கோள் காட்டிய திசையில்
கடல் கடந்து வந்து விட்டேன்
இன்னும் சில காலம்
இருக்கலாமென எண்ணியிருந்தேன்
உன் பிரிவின் பிணி போக்க
வரும் திங்கள் வந்திடுவேன்
பொலிவிழந்த உன் முகத்தில்
முழுமதியைக் காட்டிடுவேன்
நம் பிரிவு சேரும் அப்பொழுதில்
என் வலக்கரம்
உன் வளைக்கரம் பற்றும் போது
உதறிய போர்வைக்குள் இருந்து
சிதறி மறையும் கனவுகளைப் போல
என் சுவாசச் சூட்டின் அலாவலில்
கரைந்து
மறையும்
உன்
பசலை.................(பி.கு. ச்சும்மா...மரபு எழுத்துக்களைக் கலந்து எழுதிப் பார்க்கலாமே
என்ற ஒரு சிறிய ஆசை...பிழையிருப்பின் எப்போதும் போல்
இப்போதும் பொறுத்தருள்க.............)

இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்...

Friday, January 9, 2009

காதலாய்…என் டைரியின் சில பக்கங்கள்...அவள் பெயர் மீரா. இதுவரை எந்தக் கண்ணனுக்காகவும் காத்திருந்ததாய் அவளில்லை. சில பெண்களைப் பார்த்தால் மீண்டும் ஒரு முறை பார்க்கத் தோன்றும் வேறு சில பெண்களிடம் பார்த்த உடனே பேசத் தோன்றும் வெகு சில பெண்களை மட்டுமே பக்கத்தில் பார்த்தாலும் எதுவுமே தோன்றாது, ஆனால் நம்மை விட்டு விலகிச் செல்லும் போது இதயம் துடிப்பது போல் இமைகளும் படபடக்கும். இதில் மீரா மூன்றாம் வகையைச் சார்ந்தவள். அவள் வயதென்ன...?...பெண்களிடம் கேட்கக் கூடாத கேள்வி அதானால் வேண்டாம். அவள் எப்படி இருப்பாள்...?...தாஜ்மஹாலுக்கு சுடிதார் போட்டு யாராவது பார்த்திருக்கிறீர்களா...?...அவள் சுடிதார் அணிந்து வந்தால் அப்படித்தான் இருக்கும்.

எங்கள் தெருவில் இருக்கும் நடனப் பள்ளியின் மாணவியவள். எப்படி இங்கு வந்து சேர்ந்திருப்பாள்...?... ஒரு வேளை யாராவது இங்கு மயில்களுக்கு நடனம் கற்றுக் கொடுப்பதாய் அவளிடம் தவறாகச் சொல்லி இருப்பார்களோ...?. கால்களில் சலங்கை கட்டி கைகளில் முத்திரை காட்டி விரல்களில் அபிநயம் பிடித்து இதழ்களில் ஜதி சொல்லி விழிகளில் விசித்திரம் படைக்கும் அதிசய தேவதையவள். முதன் முதலாய் அவளைப் பார்த்தது இன்னும் நினைவில் இருக்கிறது. அப்போது நினைத்துக் கொண்டேன் இவளைப் படைப்பதற்கு மட்டும் இறைவன் சற்றுக் கூடுதலாக நேரம் எடுத்துக் கொண்டிருப்பான் போலும்.

சலங்கை ஒலியோடு சிரிப்பொலியும் சேர்ந்து ஸ்வரங்கள் தாண்டிய ஒரு இசை அவள் நடந்து செல்லும் போதெல்லாம் ரசிக்கத் தவறியதில்லை. அன்று தான் அதுவரை வெற்றுக் காகிதங்களாய் இருந்த என் டைரியின் பக்கத்தில் முதல் முத்திரையாக அவள் பெயரை பதித்தது என் பேனா.

பின் வரும் நாட்களில் எங்களுக்குள் பார்வைகள் பேச்சுக்களாயின நட்பு நடை பயின்றது. எனக்கு இன்னது பிடிக்கும் உனக்கு என்ன பிடிக்கும் என்று பிடித்தவை பிடிக்காதவை என்று தொடங்கி அரசியலில் ஆரம்பித்து ஆன்மீகம் வரை பேசினோம். காதல் பற்றியும் பேசினோம்...ஆமாம், எங்கள் காதல் தவிர மற்ற அனைவருடைய காதல்களைப் பற்றியும் பேசினோம். நாட்களில் தொடந்த நட்பு மாதங்களைக் கடந்து ஆண்டுகளை அடைந்து கொண்டிருந்தது.

அன்று காலை மீராவிடம் இருந்து போன் வந்தது அரசுத்துறையில் பணிபுரியும் தன் அப்பாவிற்கு பதவி உயர்வோடு இடமாற்றமும் கிடைத்திருப்பதாகவும் அவர்கள் நாளைக்கே வடநாட்டுப் பக்கம் உள்ள ஒரு நகரத்திற்கு செல்ல விருப்பதாகவும். மாலையில் என்னை கட்டாயம் சந்திக்க வேண்டுமென்று என்னை அவள் வீட்டுற்கு வரச் சொல்லியிருந்தால். நானும் இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது இன்று எப்படியாவது என் காதலை மீராவிடம் சொல்லிவிட வேண்டும் என்று நினைத்து.  இவ்வளவு நாள் மனதிற்குள் மறைத்ததை இன்று கடிதத்தில் எழுதி என் கைகளுக்குள் மறைத்து வைத்துக் கொண்டு மாலையில் அவள் வீட்டிற்கு செல்கிறேன்.

என்னைக் கண்டதும் வாசலுக்கு ஓடி வந்து...”உனக்காகத்தாம்பா காத்துக்கிட்டு இருக்கிறேன். அப்பாவும் அம்மாவும் இப்பத்தான் வெளியில போறாங்க நாளைக்குக் காலையில அப்பாக்கு வேளை மாற்றலான ஊருக்குப் போகப் போறோம்ல...அதான் தெரிஞ்சவங்க கிட்ட சொல்லிட்டு வரப் போயிருக்காங்க.. நானும் எல்லார் கிட்டயும் போன்லயே சொல்லிட்டேன் ஆனா உன்ன மட்டும் நேர்ல பார்க்கனும் போல இருந்தது அதான் உன்ன வீட்டுக்கு வரச்சொன்னேன்.” என்று பட படவென்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தால்.

அப்போது நான்ஏன் மீரா இந்த ஊரவிட்டு எங்களயெல்லாம் விட்டுட்டுப் போக உனக்கு வருத்தமா இல்லையா...?” அதற்கு அவள் வருத்தமாத்தாம்பா இருக்கு மத்தவங்களவிடு உன்ன விட்டுப் போறோமேன்னுதான் ரொம்ப வருத்தமா இருக்கு என்ன செய்ய ...?...ஆனா,  உன்ன மட்டும் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஏன் தெரியுமா...?...பழகின மூனாவது நாளே லவ் லட்டரோட வந்து நிக்கிற பசங்களுக்கு மத்தியில இவ்வளவு நாள் பழகியும், ஒரு நல்ல நண்பனா தூய்மையான தோழனா என்கிட்ட பழகின விதம் என்னால என்னைக்குமே மறக்க முடியாது...”அப்போது நான் அவளிடம் சொல்ல வந்த வார்த்தைகள் அனைத்தும் என் நாவின் நுனிவரை வந்து உமிழ்நீருக்குள் அமிழ்ந்து போயின.

அதன் பிறகு அவள் சொன்ன வார்தைகள் எதுவும் என் செவிகளில் விழவில்லை. அவளிடம் எப்படி விடை பெற்று வீடு வந்து சேர்ந்தேன் என்று இதுவரை எனக்குத் தெரியவில்லை. காதலில் உருகி உருகி எழுதிய என் விரல்களே முதலும் கடைசியுமான என் காதல் கடிதத்தைக் கிழித்தெறிந்தன இதயத்தில் வலியோடு.

அதுவரை என் டைரியின் பக்கங்களில் மூன்று புள்ளி வைத்து அடுத்த பக்கத்தை அடுத்த நாள் தொடருவதை வழக்கமாக்கியிருந்தேன். இப்போதும் மூன்று புள்ளி வைக்கிறேன் அவள் நினைவுகளையாவது தொடர வேண்டுமென்று ...முடிவில் என்னையும் அறியாமல் ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறது என் கண்ணீர்த் துளி...

என் டைரியின் பக்கங்கள் மீண்டும் வெற்றுக் காகிதங்களாகவே இன்றும்...

இது போல் இன்னும் எத்தனை வீடுகளில் டைரியின் பக்கங்கள் எழுதப் படாமல் வெற்றுக் காகிதங்களாய் இருக்கின்றனவோ...?...ஆசை ஆசையாய் எழுதப்பட்ட எத்தனை காதல் கடிதங்கள் கொடுக்கப் படாமல் இப்படிக் கிழிக்கப் பட்டிருக்கின்றனவோ...?

உடைக்கப் படாத உண்டியலில் ஆசையாய் சேர்த்து வைத்த சில்லரைக் காசுகளைப் போல் ஒவ்வொருவர் மனதிலும் திறக்கப் படாத நினைவுகள் சில மறக்கப் படாமல் இருக்கத்தான் செய்கின்றன. பழைய நினைவுகளில்  மனநீராடி நிகழ்வுலகிற்கு வருகிறேன். இங்கே இப்போது அன்பாய் அழகாய் என் மனைவி.
தத்தித்தாவி என் மடியில் கட்டிப்புரண்டு தன் வெள்ளைச் சிரிப்பில் என்னை சிறை வைக்கும் குட்டி தேவதையாய் என் செல்ல மகள். இப்போது இவர்கள் தான் என்னுலகம்.
இதோ சமையலறையில் இருக்கும் என் மனைவி விளையாடிக் கொண்டிருக்கும் என் மகளை அழைத்து ஏதோ சொல்லுகிறாள்...என்னவென்று கேட்போமா...

”மீரா.............!... அப்பா எழுந்துட்டாங்களான்னு பாரும்மா...எழுந்த உடனே காஃபி கேட்டாங்க...”

இந்த குட்டி மீரா போன்ற குழந்தைகளின் பெயர்களுக்குப் பின்னால் சொல்லப் படாத காதல்கள் எத்தனை எத்தனையோ.................................?(பி.கு. இது 99.99% கற்பனை மட்டுமே...நமக்கு டைரி எழுதுர பழக்கமெல்லாம் கிடையாது. அப்படியே எழுதினாலும் கவிதைன்ற பேரால எதையாவது கிறுக்கி வைப்போமே தவிர சொந்தக் கதை சோகக் கதையெல்லாம் எழுத மாட்டோம்...பிற்காலத்தில இந்த மாதிரி டைரிங்க தான் டைம் பார்க்காம டைம்-பாமா வெடிக்கும்னு நாங்களும் கேள்விப் பட்டிருக்கிறோம்ல........)

Monday, January 5, 2009

இன்று எப்படியாவது தொட்டுவிட வேண்டும்…


அது ஒரு அதிகாலை
அதோ அந்த வெட்ட வெளியில்
கொட்டிக் கிடக்கிறது
கைப்பிடியளவு சாம்பல்
சிறிது நேரத்தில்
அதிலிருந்து உயிர்த்தெழுகிறேன்
பிறகு மேலெழுந்து
பறக்கத் தொடங்குகிறேன்
இதோ இன்னும் கொஞ்சம் தூரம் தான்
என்ற நம்பிக்கையில்
எப்படியேனும் தொட்டுவிட வேண்டும்
இந்தச் சூரியனை...
மேலே செல்லச் செல்ல
உடல் முழுதும் சூடாகிறது
இறகுகள் பற்றி எரியத் தொடங்குகின்றன
பறந்து கொண்டே இருக்கிறேன்
முழுதும் எரிந்ததும் சாம்பலாய் விழுகிறேன்
அந்த வெட்ட வெளியில்...
பகல் பறவை தன் தேடல் முடிந்து
அதன் கூடு திரும்புகிறது
இரவின் சிறகு விரியத் தொடங்கி
அதன் இரவுத் தேடல் ஆரம்பமாகிறது
அந்த இரவின் இருளோடு கைகோர்த்து
என் சாம்பலுக்குள் ஏதோ
ரசவாதம் நடக்கிறது
அடுத்த காலை
இதோ மீண்டும் சூரியன் வெளி வருகிறது
அதன் புறஊதாக் கதிர்கள்
ஓஸோன் மண்டலத்தால் புறம் தள்ளப் பட்டு
கண்ணுக்குத் தெரியாத அகச்சிவப்புக் கதிர்கள்
எட்டு நிமிடத்தில் என்னை எட்டி விடுகின்றன
ஒளி என் மேல் பட்ட உடன்
நானொரு ஃபீனிக்ஸ் பறவையாய்
உயிர்த்தெழுகிறேன்
என் சாம்பலில் இருந்து...
பறக்கத் தொடங்குகிறேன்
சூரியனை இன்று எப்படியாவது
தொட்டுவிட வேண்டுமென்று
இது நெடு நாள் நடக்கும் போராட்டம்
மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறேன்...
?
தீர்மானமாய்
நீ
எனக்குக்
கிடைக்க
மாட்டாய்
என்று தெரிந்த பின்னும்..................(பி.கு. ஃபீனிக்ஸ் பறவை - ஒரு கற்பனை என்பது எவ்வளவு உண்மையோ அது போல் இந்தக் கவிதை(...?)யும் ஒரு கற்பனை மட்டுமே.......)