Friday, November 28, 2008

மழை அறிவிப்பு...


வெகு நாட்களாக
உன்னிடம் சொல்ல நினைத்து
உன்னைக் கண்டதும்
சொல் மறந்து
சொல்ல மறந்ததை
இன்றேனும் சொல்ல
நினைக்கிறேன்
மாலையில் மறக்காமல்
வந்துவிடு என்று
என் நட்பைத்
தன் கற்பைப் போல்
பாதுகாப்பவளிடம்
சொல்லி விட்டேன்
மாலையும் வந்தது
வரும் வழியில்
தொப்பளாய் நனைந்துவிட்டேன்
திடீர் மழையில்
எனக்காக காத்திருந்தாள்
அவளும் நனைந்திருந்தாள்
என்னைப் போலவே
ஆனால்,
அவள் கைகளில்
இரண்டு குடை
எனக்காக ஒன்று
புரிந்து கொண்டேன்
பிறகெப்படி நனைந்திருக்கிறாள்
குடையின்றி நனைந்து வரும்
எனைக் கண்டு அவளும்
குடை தவிர்த்திருக்கிறாள்
முன்னறிவிப்பின்றி வந்த மழை
அறிவிப்பு செய்தது
இது தான் காதல் என்று
இது வரை மண்ணில் பெய்த மழை
இப்பொழுது மனதிற்குள் பெய்கிறது
உலகின் முதல் காதல் தொடங்கி
பார்த்து வரும் மழையிடம்
கேட்டு விட்டேன்...
நட்ப்பில் இது எப்படி சாத்தியம்...?
அது மின்னலாய்ப் புன்னகைத்து
இடியெனச் சிரித்து சொன்னது
நட்புக்குத் தெரியாது
குடையிருந்தும்
மழை நனையும்
இது போன்ற கிறுக்குத்தனம்...............................!

Wednesday, November 26, 2008

இன்னும் ஒலிக்கிறது...


தெருவெங்கும்
வாகன இரைச்சல்
பக்கத்து வீட்டுக்
குழந்தையின்
வீரிட்ட அழுகை
எதிர் வீட்டுச்
சிறுவர்களின்
விளையாட்டுச்
சிரிப்பொலி
சுழற்றி அடிக்கும்
காற்றில் ஜன்னலின்
க்ரீச் சத்தம்
வானொலியில் சுதாரகுநாதன்
இவையெல்லாம் தாண்டி
இன்னும் ஒலிக்கிறது
என் செவிகளில்
என்றோ ஒரு நாள்
என் மனதில் நடந்தவளின்
கால் கொலுசோசை....இந்த கவிதையை யூத்ஃபுல் விகடனில் படிக்க இங்கு செல்லலாம்...

Tuesday, November 25, 2008

ஐன்ஸ்டைனின் காதல் சார்பியல் விதி...


நியூட்டனின் காதல் விதிகளை இங்க போய் படிங்க

நியூட்டனின் விதிகளை தனக்குப் புரியும் படி தன் கல்லூரிக் காதலனிடம்
விளக்கம் கேட்டுச் சென்ற காதலி மீண்டும் தன் காதலனிடம் வருகிறாள்.
அவங்க பேசிறதை கொஞ்சம் கவனிப்போமா...

”வாங்க மேடம் நியூட்டனோட மூன்றாவது விதியக் கேட்டு பயந்து ஓடின ஆள  இப்பத்தான் பார்க்க முடியுது. என்ன பயத்தில காய்ச்சல் எதுவும்  வந்திருச்சா... இப்ப மட்டும் எப்படி தைரியம் வந்துச்சி என் கிட்ட வர்றதுக்கு.”

”பயமா ? யாருக்கு நாங்கள்லாம் யாரு தெரியும்ல பின்லேடன் பிளாக்லயே  பின்னூட்டம் போட்ட ஆளுங்க தெரியுமா ?”

”ஓ...நீங்க தானா அது அவ்ளோ தைரியமா அந்த அனானிமஸ் கமெண்ட் போட்டது,  உன்னோட ஐபி அட்ரஸ தான் தேடிக்கிட்டு இருகிறதா செய்தி வந்துச்சு, கண்டு  பிடிச்சா அஞ்சு கிலோ ஆர்டிஎக்ஸ் பார்சல்ல வரும். வாங்கி பத்திரமா வச்சுக்க  நம்ம கல்யாணத்தில பட்டாசுக்கு பதிலா ஆர்டிஎக்ஸ வெடிச்சுக்கலாம்.”

”யேய்...சும்மா இருப்பா நீ வேற...நான் கேக்க வந்ததையே மறந்துடுவேன் போல  இருக்கு. நீ தான் நல்ல பையனாச்சே நீ வரம்பு மீற மாட்டேன்னு தான் எனக்குத்  தெரியுமே. அதனால தானே உன்ன எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.”

”அம்மா தாயே ஐஸ் வச்சது போதும் ஏற்கனவே குளிர் தாங்க முடியல மொதல்ல  நீ வந்த விசயத்தச் சொல்லு.”

”அது ஒன்னு மில்ல கண்ணா இந்த ஐன்ஸ்டைனோட சார்பியல் கோட்பாட்ட  எனக்கு புரியுற மாதிரி அந்நிக்கு நியூட்டன் விதிகள சொன்ன மாதிரி கொஞ்சம்  சொல்லித்தயேன்.”

”கொஞ்சவா இல்ல சொல்லவா ?”

”விளையாடாதப்பா எக்ஸாம் நெருங்க நெருங்க பயமா இருக்கு.
 யார் யாரோ எதை எதையோ கண்டு பிடுச்சிட்டு போயிடுராங்க அதயெல்லாம்  நாம படிக்க வேண்டியிருக்கு ...ம்ம்ம்...”

”சரி சரி உன்னோட புலம்பல நிறுத்திட்டு விசயத்துக்கு வா.”

”அதான் சொன்னேன்ல ஐன்ஸ்டைனோட சார்பியல் கோட்பாட்ட எனக்குப் புரியுற  மாதிரி சொல்லித்தன்னு.”

”சரி.. இப்படி என் பக்கத்துல வந்து உட்காரு.”

”நோ...நோ...ஐயாவ பாத்தா ரொமான்ஸ் மூடுல இருக்குற மாதிரி தெரியுது.
 எதுக்கும் நான் கொஞ்சம் இடம் விட்டே இருக்குறேன். நீங்க பாடத்த ஆரம்பிங்க  சார்.”

”சரி கேட்டுக்க

 E = MC2 என்ற சமன்பாட்டில் (Theory of Relativity) மிகச் சிறிய துகள்களில் இருந்து  கூட பெரும் சக்தியைப் பெறலாம், அதேபோல மிகப் பெரிய சக்தியை சிறிய  துகள்களில் அடைக்கவும் முடியும். என்பதை E = MC2 என்ற சமன்பாட்டின் மூலம்  ஐன்ஸ்டின் விளங்கப்படுத்தினார்.

 இப்ப உனக்குப் புரியுற மாதிரி சொல்றேன்.

 உள்ளங்கை அளவுள்ள சிறிய இதயத்திலிருந்து தான் அளவிடமுடியாத  அளவுள்ள காதல் பிறக்குது. இதுவரை இது தான்னு யாரும் அளவு காண முடியாத  இந்தப் பிரபஞ்சம் முழுதும் பரந்து விரிந்துள்ள காதலை ஒரு சின்ன  மென்மையான மனசுக்குள்ள அடைச்சிட்றோமே. இதை உதாரணமாச்  சொல்லலாம்.”

”வாவ்...எப்படிப்பா உன்னால அறிவியலக்கூட காதலோட ஒப்பிட்டு சொல்ல  முடியுது.”

”ஏன் சொல்ல மாட்டே...பக்கத்துல வர்றதுக்கே யோசிக்கிற உன்ன மாதிரி  பொண்ணக் காதலிச்சா காதலயும் அறிவியல் மாதிரி புத்தகத்துல படிச்சு தான்  தெரிஞ்சுக்க வேண்டி இருக்கு. ஆனா, இந்த அறிவியல் இருக்கே காதலக் கூட  எதிர் பாலின ஈர்ப்பினால் ஏற்படும் ஒரு உணர்வுகளின் ரசாயன மாற்றம்னு தான்  சொல்லுது. சரி விசயத்துக்கு வர்றேன் கவனி.

 ஒளியின் வேகத்தில் பயணிக்கும் ஒருவரின் கடிகாரம் சாதாரணமாக இருக்கும்  ஒருவரின் கடிகாரத்தை விட மெதுவாகச் செல்லும் என்று தெரிவிக்கின்றன.  இதன் காரணமாக தூரமும் பாதிக்கப்படும் . ஒளியின் வேகத்துக்கு ஈடு  கொடுக்கும்  வகையில் ஒரு காரை ஒருவர் ஒட்டிச் சென்றால், அவர் செல்லும்  தூரம்  குறைவாக இருப்பதாக சாதாரணமாக இருப்பவருக்குப் படும். ஆனால் கார்  ஒட்டிச் செல்பவர் தூரம் அதிகமாக இருப்பதாகவே உணருவார். முரண்பாடுகள்  போல தோன்றினாலும் இதுதான் உண்மை.

 காதலன் தன் காதலிக்காவோ அல்லது காதலி தன் காதலனுக்காகவோ
 காத்திருக்கும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு யுகமாகத் தெரியும்.
 அவர்கள் சேர்ந்திருக்கும் நேரம் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் அது  அவர்களுக்குப் போதாது அவையெல்லாம் காதலர்க்கு நொடிப் பொழுதாகவே  தோன்றும். இந்த விநோதமான காலத் தோற்றத்தை தான் ஐன்ஸ்டைன்  தன்னுடைய சார்பியால் தத்துவத்தில சொன்னாரு.

 ”காத்திருந்தால் நிமிஷங்கள் வருஷமென்பாய்…
  வந்துவிட்டால் வருஷங்கள் நிமிஷமென்பாய்…”


 அப்படின்னு நம்ம கவிஞர் வைரமுத்து இத தன்னோட கவிதைல அழகாச்  சொல்லியிருக்கிறாரு.”

”கவிஞர் வைரமுத்துவும் ஐன்ஸ்டைனோட சார்பியல் கோட்பாட்ட  படிச்சிருப்பாரோ ?”

”அத அவர் கிட்ட தான் கேக்கனும்...பாடத்த கவனி.

 மேலும்,

 E = MC2 என்ற சமன்பாடுதான் அழிவை ஏற்படுத்தும் அணு ஆயுதங்கள்  உருவாக்கப்படுவதற்கும் அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.

 எப்படின்னா

 இவ்வளவு பெரிய சக்தி வாய்ந்த காதலை தன்னுள் அடக்கி வச்சிருக்கிற மனசு  அந்தக் காதல் சூழ்நிலையின் சூழ்ச்சியால தோல்வியடைய நேர்ந்ததுன்னா  காதலர்கள் தங்களை அழிச்சிக்கவும் தயங்க மாட்டாங்க. லேசான வெட்டுக்க  காயாத்துக்கு கூட பயப்படுற வங்க காதல்ல தோல்வின்னதும் அவங்களுக்குள்ள  ஏற்படுகிற வெறுமை தற்கொலை செஞ்சுக்கிற அளவுக்கு அவங்களுக்கு  உத்வேகத்தக் கொடுக்கிறத உதாரணமாச் சொல்லலாம்.”

”என்னப்பா இப்படில்லாம் சொல்லி பயமுறுத்துறே ?”

”ஹேய்.... என்ன ஃபீல் பண்ணுறியா ?...ச்சும்மா ஒரு உதாரணத்துக்குத் தானே  சொன்னேன்.

 கடைசியா ஐன்ஸ்டைன் தன்னோட சார்பியல் தத்துவத்துல என்ன  சொல்றார்ன்னா

 சார்பியில் தத்துவம் காரணமாக மிக மிக மோசமான ஒரு ஆயுதம்  உருவாக்கப்பட்ட போதிலும், அத்தத்துவும் தான் நவீன இயற்பியலின்  துவக்கத்துக்கு அடித்தளமாக உள்ளது. அதுதான் நமது நவீன சமூதாய வாழ்வை  சாத்தியமடையச் செய்துள்ளது.

 அப்படின்னு சொன்னார்.

 என்ன தான் காதலர்கள் பலர் தங்கள் காதல் நிறை வேறாமல் உடல் அழித்து  உயிர் சேர்வோம் என்று உயிரை மாய்த்துக் கொண்டிருந்த போதிலும் இப்போதும்  காதலர்கள் காதலித்துக் கொண்டு தான் இருக்கிறாங்க. இன்றைக்கும் காதல் தான்  உலகத்த வாழவைத்துக் கொண்டிருக்கிறது அப்படின்னு கூட சொல்லலாம்.

 ஏன் நம்மாளோட காதலயும் கூட இதுல சேத்துக்கலாம்.

 என்ன புரிஞ்சுதா ஐன்ஸ்டைனின் காதல் சார்பியல்.”

”ம்ம்ம்.நல்லாவே புரிஞ்சுது”

”சரி........இப்போ எனக்கு குருதட்சணையா நீ என்ன தரப்போறே ?”

”குரு......தட்சணையா என்ன எதிர் பார்ப்பாருன்னு எங்களுக்குத் தெரியும்
 அதல்லாம் கொடுக்க வேண்டிய நேரத்துல தானா கொடுக்கப் படும் இப்ப நான்  கெளம்பறேன்... வர்ட்டா....கண்ணா.”

”வந்த வேளை முடிஞ்ச ஒடனே எஸ்க்கேப்பாய்டிவிங்களே...ம்ம்ம்...நமக்கு  இப்போதைக்கு கொடுத்துவச்சது அவ்வளவு தான் என்ன பண்றது...ம்ம்ம்.......”


“கணினியுகக் காதலியே

 உனது அழகிய விரல்களால்

 எனது கம்ப்யூட்டர் கீபோர்டை

 கொஞ்சம் கொஞ்சி விட்டுச் செல்  
 
 பாவம்,

 உன் விரல்களிட்ட

 முத்தத்தையாவது

 என் இதழ்கள் சந்திக்கட்டும்....”
( விதிகள் தொடரும் )

(விஞ்ஞான விதிகளை எளிய தமிழில் கதை வடிவில் சொல்ல ஒரு சிறிய
முயற்சியே தவிர வேறொன்றும் இல்லை பிழையிருப்பின் பொறுத்தருள்க)Friday, November 21, 2008

கெஞ்சுகின்றது...
உன் வெட்க விழிகளோ
கெஞ்சுகின்றது
வேண்டாம் என்று
உன் பிஞ்சு இதழ்களோ
கொஞ்சுகின்றது
வேண்டும் என்று
யார் சொல்லைத் தான்
கேட்பது இப்போது...?நான் தூங்கும் போது
மட்டும் தான்
நீயாக உன் வெட்கம்
விட்டு வந்து
முத்தம் தருகிறாய்...!
இன்னும்
எத்தனை இரவுகள் தான்
நான் தூங்குவது போல் நடிப்பது ...?நான் எத்தனை
முத்தம் தந்தேன்
நீ ஒரே ஒரு முத்தம் தான்
தருகிறாய் என்றால்
நீ கொடுத்த தெல்லாம்
சில்லரை முத்தம்
நான் கொடுத்தது
மொத்த முத்தம்
என்று சிரிக்கிறாய்...


இருந்தாலும்
இவ்வளவு அழுத்தமாக வெல்லாம்
முத்தமிட்டிருக்கக் கூடாது
பிறகென்னா,
உனது அடுத்த முத்தத்தையும்
இதே அழுத்தத்தோடு அல்லவா
எதிர் பார்க்கின்றன
என் இதழ்கள்….


நீ முத்தமிட
ஆரம்பித்ததும் தான்
நம்  இமைகள் நான்கும்
தாமாக மூடிக் கொள்கின்றனவே
பிறகு ஏனடி
விளக்கை வேறு
அணைக்கச் சொல்கிறாய்....?


Wednesday, November 19, 2008

இன்றும் மறக்க முடியவில்லை….நம் நெருக்கம்
இன்னும் இன்னும் சுருக்கமான
அந்த வேளையில்
உடலின் ஒவ்வொரு அணுவிலும்
நியூட்ரான்கள் நடுநிலை வகிக்க
எலக்ட்ரானும் புரோட்டானும்
பிணைக்கப் பட்ட போது
மின்னூட்டம் பெறப்பட்ட
நரம்புகளின் வழியே
ஒளியூட்டப் பட்ட
விழிகளின் வெளிச்சத்தில்
இமைகள் இமைக்க
மறந்த நிலையில்
உன் வெட்கங்கள்
வேடிக்கை பார்க்க
அந்தத் தனிமையான நேரத்தில்
நம் முகம் வியர்க்க
உடல் நடுங்கியது
இதயம் வழக்கத்திற்கு
வேகமாய் துடித்தது
உன் நாணமும்
என் ஆசையும் போட்டி போட
உன் வளைக்கரம்
வலு விழந்து
மூச்சுக் காற்று
முகவரி தேடிய பொழுதில்
சுகமாய் நடந்தேறியது
இன்றும் மறக்க முடியவில்லை
அன்று நம்மையும் அறியாது
சத்த மில்லாமல்
நம் இதழ்கள்
பிரசவித்த முதல் முத்தம்...........


Saturday, November 15, 2008

என்று தணியும் உனக்கு…


சொந்த தேசம் விட்டு
இடம் பெயர்ந்து வரும்
என் தாய்த் தமிழினமே
நம்மைப் பெற்ற தாய்
வெவ்வேறு தான்,
ஆனால்
தமிழ்த் தாய் ஒருத்தி தானே
நீ என் தமிழ்த் தாயின்
தொப்புள் கொடி உறவல்லவா
நீயும் நானும் குடித்து வளர்ந்தது
தமிழ்ப் பால் தானே
உற்றாரையும் உறவினரையும்
சொந்த வீட்டையும்
பிறந்த நாட்டையும் விட்டு
எங்கெங்கோ செல்கின்றாய்
உயிரை மட்டும்
உடமையாகக் கொண்டு
உனக்கு ஏனிந்த அவல நிலை
தமிழினத்தில் பிறந்த
ஒரே காரணத்திற்காகவா ?
உண்ண உணவு உடுத்த உடை
இருக்க இடம்
உயிருக்குப் பாதுகாப்பு என்ற
அடிப்படைத் தேவைகளைக் கூட
கொடுக்க முடியாத நாடானது
கொடிய சிறைச் சாலையினும் கேடானது
சொந்த தேசத்திலேயே
அகதிகளைப் போல் வாழ்கிறாய்
உன் நாடே உனக்கு
சிறைச் சாலை யாகவல்லவா
இருக்கிறது
எத்தனை எத்தனை இன்னல்களை
அனுபவித்துக் கொண்டிருக்கிறாய்
ஏவுகணைத் தாக்கி
சிதறிய உடல்களும்
கண்ணி வெடியில்
சிக்கிச் சிதைந்த உறுப்புகளும்
பெண்கள் முதியவர்கள் குழந்தைகள்
என்று பச்சாதாபமில்லாமல்
உயிர் வாங்கும்
துப்பாக்கித் தோட்டாக்கள்
அவைகளுக்குத் தெரியுமா
உயிரின் மதிப்பு ?
இதைக் கேட்பதற்கே
எங்கள் உதிரம் உறைகிறது
நீ எப்படித் தான் உண்டு உறங்கி
உயிர் வாழ்கிறாயோ
உயிர் பயத்திலேயே
உறங்கிப் பழகிவிட்டாய் போலும்
காற்றையும் நெருப்பையும் வானையும்
ஆட்சி செய்ய முடியாத மனிதன்
தான் தொட முடிந்ததால்
நீரையும் நிலத்தையும்
பங்கு போட்டுக் கொள்கிறான்
ஜாதி மதம் இனம்
நிறம் மொழி நாடு என்று
பிரித்தறியும் மனித சமுதாயமே
நாம் அனைவருக்கும்
உயிர் ஒன்று தான் என்பதை
எப்போது தான்
உணர்ந்து கொள்வாயோ ?
ஆதி மனிதனைப்
பெற்றெடுத்த தேசமே
பாதித் தமிழனையாவது
உயிருடன் விட்டு வைப்பாயா ?
இல்லை,
மீதியின்றி வேரறுத்து விடுவாயா....?
என்று தணியும் உனக்கு
இந்தத் தமிழின
இரத்த தாகம்................


Friday, November 14, 2008

என்ன பதில் சொல்ல....?சமைக்கத் தெரியும் என்கிறாய்
துவைக்கத் தெரியும் என்கிறாய்
வீட்டை அழகு படுத்தத் தெரியும்
என்கிறாய்.
ஆனால்,
முத்தமிடத் தெரியாது என்கிறாய் எப்படி ?
நான் இதற்கு முன் சமைத்திருக்கிறேன்
துவைத்திருக்கிறேன் 
வீட்டை அழகு படுத்தியிருக்கிறேன்
அதனால் தெரியும்
ஆனால்,  
இது வரை யாரையும்
முத்தமிட்டதில்லை
அதனால் தெரியாது என்கிறாய் !
மேலும் உனக்கு முத்தமிடத்தெரியுமா ?
என்று என்னை வேறு கேட்கிறாய்
இதற்கு நான் என்ன பதில் சொல்ல....?

Thursday, November 13, 2008

எவ்வளவு வித்தியாசம்


என் பாட்டி எப்போதும்
சூடான உணவை சாப்பிட்டு
நான் பார்த்ததில்லை
கேட்டேன் ஏன் பாட்டி
உன் வாழ் நாளில் ?
நீ இது வரை சூடாக
எதையுமே சாப்பிட்டதில்லையா
சாப்பிட்டு இருக்கிறேன்
என் கல்யாணத்துக்கு முன்னாடி
பிறகு ஏன்
இப்ப சாப்பிடுவதில்லை ?
என் மனசுக்குள்ள தான்
உங்க தாத்தா இருக்குறாக
நான் சூடா சாப்பிட்டா
அவங்களுக்கு சுட்டுடுமேன்னு தான்
சொல்லும் போது பாட்டி
முகத்துல அப்படியொரு வெட்கம்
இதை கேட்டதும் எனக்கு
சிரிப்பு தான் வந்தது...
வெட்கத்திற்கு ஏது வயது
எந்த வயசுலயும் வெட்கம்
அழகாய்த்தான் இருக்கும்
இப்போது
உன்னுடன் பழகிய பிறகு
என்னை அறியாமலேயே
நான் சூடான
உணவுகளைத் தவிர்க்கிறேன்
இப்போதும் எனக்கு
சிரிப்பு தான் வருகிறது
என் மனதுக்குள்
ஆனால்,
அந்த சிரிப்பிற்கும்
இந்த சிரிப்பிற்கும் தான்
எவ்வளவு வித்தியாசம்
பாட்டி சொல்லும் போது
வேடிக்கையாய்த் தெரிந்தது
எனக்கென்று வரும் போது மட்டும்
எவ்வளவு பவித்ரமானதாய்த் தெரிகிறது....!?

Wednesday, November 12, 2008

தழுவும் இமையாக...
நீ கண் சிமிட்டும் போதெல்லாம்
ஒரு இரவு
ஒரு பகல்
என்னைக் கடந்து செல்கிறது தெரியுமா ?
சொர்க்கம்
நரகம்
எல்லாம்
கற்பனை
என்று தான்
எண்ணியிருந்தேன்
உன் இதழின் ஈரத்தில்
சொர்க்கத்தையும்
உன் விழியின் ஈரத்தில்
நரகத்தையும்
காணும் வரை...
இலக்கணம் மீறி
எழுதப்படும்
கவிதைகள் கூட
சில நேரம்
அழகாகத்தான்
இருக்கின்றன
பெற்றோர் சொல் மீறும்
சில காதலைப் போல....!நித்தம் நித்தம்
உன் விழிகளைத்
தழுவிச் செல்லும்
இமைகளைப் போல
உன் இதழ்களைத்
தழுவும் இமையாக
என்னை எப்படியாவது
பொருத்திக் கொள்ளேனடி ...!


Tuesday, November 11, 2008

ஆசையாய்த் தான் இருக்கிறது


அழகாய்த் தான் இருக்கிறாய்
ஆசையாய்த் தான் இருக்கிறது
கையில் காசும் இருக்கிறது
உயரத்திற்கும் சரியாய்த் தானிருப்பாய்
நிறமும் பொருத்தமாய்த் தானிருக்கிறது
இந்த குளிர்கால இரவுக்குக்
கதகதப்பாய்த் தானிருப்பாய்
என் காதலிக்குப்
பிடிக்குமா ? என்று
தெரிய வில்லையே
இந்த அழகிய ”இரவு உடை (Nightie)”

Monday, November 10, 2008

பேசியிருக்கலாம்...


கல்லூரியில் ஒரு சந்தர்ப்பத்தில் 
எப்போதோ சந்தித்தோம் 
புன்னகையில் அறிமுகமாகி 
நாட்கணக்கில் நாட்டு நடப்பு பேசி 
நட்பாகி இருந்தோம்  

மணிக்கொரு தடவை ஒரு Sorry யோ அல்லது 
ஒரு Thanks ஸோ சொல்லிக் கொள்வோம் 
ஏன் சொல்கிறோம் என்று தெரியமலேயே
சில நிமிடத்திற்கொரு முறை ஒரு சிரிப்போ 
அல்லது ஒரு பொய்க் கோபமோ 
நம்மில் சாதாரணமாக வந்து செல்லும்

காரணம் ஏதுமின்றி சில நேரம் 
கண்ணீர் கசியும் 
நம் தணிமையில் சில வேளை 
பிரிந்திருக்க மனது சொல்லும் 
முயற்சி செய்வோம் முடியாமல் 
மனது தோற்கும் 
முகம் பார்க்கவும் குரல் கேட்கவும் 
தவியாய் தவிக்கும் மனது...

எத்தனையோ ஏகந்த வேளையில் 
தனிமையில் இருந்திருக்கிறோம் 
தவிப்பை உணர்ந்ததில்லை 
நிரந்தரமாய் பிரியப்போகிறோம்  
என்ற போதுதான் 
இரும்புக் கரம் கொண்டு 
இதயம் பிழியப்பட்ட ரண வேதனை

முன்னமே பேசியிருக்கலாம் 
பேச வேண்டிய வார்த்தைகளை 
தொண்டைக் குழி வரை வந்து 
சொல்ல முடியாமல் போராடியிருக்கிறோம்...

முன்னைக்காட்டிலும் 
முனைப்பாய் இருக்கிறேன் 
உன்னைப் பார்ப்பதற்கு...
அப்போது மட்டும் ஏன் சொல்ல முடியாமல் போனது ? 
இப்போது கூட முடியுமோ என்னவோ ...!

Saturday, November 8, 2008

நியூட்டனின் காதல் விதிகள்

ஒரு கல்லூரிக் காதலர்கள். காதலிக்கு அறிவியல் பாடத்தில் சில சந்தேகங்கள். தன் காதலனிடம் தெளிவு படுத்துமாறு கேட்கிறாள்.
இதோ அந்த உரையாடல்,

உனக்கு எந்த பாடத்துல என்ன சந்தேகம்னு சொல்லு உனக்கு புரியிற மாதிரி சொல்ல முயற்சி செய்யிறேன்.

எனக்கு டார்வின் பரிணாமக் கோட்பாடும் நியூட்டன் விதிகளும் எத்தன தடவ படிச்சாலும் புரிய மாட்டேன்குது. நீ கிண்டல் பண்ணாம ஒழுங்கா சொல்லிக் கொடுக்கிறதுன்னா சொல்லிககொடு இல்லனா ஆள விடு. இன்னும் நாலு தடவ படிச்சி பாக்குறேன்.

இல்ல இல்ல நான் ஒழுங்கா சொல்லித் தர்றேன் இப்படி பக்கத்துல வா.

ம்ம்.. சரி சொல்லு.

”இவ்வுலகின் தொடக்க காலத்தில்
என்றோ பெய்த மழையில்
நீர்த்துளியின் கருவில் உருவான
ஒரு செல் உயிரியிலிருந்து
யுகயுகமாகப் படிப்படியாக
இடத்திற்கும் சூழ்நிலைக்கும்
ஏற்றபடி உருமாறி
குரங்கிற்கு அடுத்த படியாய்
உருவானவன் தான் மனிதன்...
இதுவே டார்வின் பரிணாம விதி”

புரிஞ்சுதா ??

ஏதோ கொஞ்சம் புரிஞ்ச மாதிரி இருக்கு. ம் சரி நியூட்டன் விதிகள்.

நல்லா கேட்டுக்க

”Every object in a state of uniform motion tends to remain in that state of motion unless an external force is applied to it.”

"வெளிவிசையொன்று செயல்பட்டு மாற்றும் வரை எந்த ஒரு பொருளும் தனது ஓய்வு நிலையையோ அல்லது நேர்க்கோட்டில் அமைந்த சீரான இயக்க நிலையையோ மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து அதே நிலையில் இருக்கும்."

இது தான் நியூட்டனின் முதல் விதி

இதத்தான் புக்லயும் போட்டிருக்காங்க இதக்கொஞ்சம் ஈஸியாப் புரியிற மாதிரி சொல்ல முடியுமா ?

ம்.. முடியும் ஆனா நீ கோபப் படக்கூடாது சரியா ?

சரி சொல்லு

நீயும் நானும் சந்திக்கிறதுக்கு முன்னாடி நீ நீயாத்தான் இருந்தே நான் நானாத்தன் இருந்தேன் தெளிவாத்தான் இருந்தோம்,    நாம ரெண்டு பேரும் சந்திச்சு நமக்குள்ள காதல் வந்த பிறகு தான் இப்பிடி என்னன்னமோ பேசிக்கிட்டு இருக்கிறோம். இதத்தான் இந்த மாற்றத்தத் தான் நியூட்டன் அவர் பாஷைல முதல் விதின்னாரு.

ம்ம்... பாத்தியா கிண்டல் பண்ண ஆரம்பிச்சிட்ட. ஆனா, ஏதோ புரியிற மாதிரி இருக்கு,
சரி நியூட்டனின் இரண்டவது விதி,

சொல்றேன் கேட்டுக்க

”The relationship between an object's mass m, its acceleration a, and the applied force F is F = ma. Acceleration and force are in this law the direction of the force vector is the same as the direction of the acceleration vector.”

”ஒரு பொருளின் மீது செயல்படும் விசைகள் சமன் செய்யப்படாத பொழுது பொருளின் மீது ஏற்படும் விளைவை நியூட்டனின் இரண்டாவது இயக்க விதி விளக்குகிறது. இவ்விதியின்படி, பொருளின் உந்தம் மாறுபடும் வீதம் அதன்மீது செயல்படும் விசைக்கு நேர்த்தகவில் இருக்கும். உந்தம் மாறுபடும் திசை, விசையின் திசையை ஒத்ததாக இருக்கும்”

இது தான் நியூட்டனின் இரண்டவது விதி.

ம்.. இதயும் முதல் விதிய சொன்ன மாதிரி கொஞ்சம் புரியுற மாதிரி ஈஸியா சொல்லித்தாயேன்.

சரி கேட்டுக்க

நீ என் மேல வச்சிருக்கிற அன்பும் சரி நான் உன் மேல வச்சிருக்கிற அன்பும் சரி சில நேரம் பார்க்கிறதுக்கு கூடக் குறைச்சலா இருக்கிற மாதிரி வெளிப் பார்வைக்கு தெரியும். அதாவது நாம தனிமையான இடத்துல இருக்கிறப்ப இடைவெளி குறைச்சலா உட்கார்ந்து இருப்போம். பொதுவான இடத்துல இருக்கிறப்ப கொஞ்சம் இடைவெளி விட்டு உட்கார்ந்து இருப்போம். இடைவெளி கூடுறதுனாலயோ குறையுறதுனாலயோ நம்ம காதல்ல எந்த ஒரு மாற்றமும் இருக்காது.

இந்த மாறாத தன்மையத் தான் நியூட்டன் இரண்டாவது விதின்னாரு. என்ன புடிஞ்சுதா ?

ம்ம்... புரியுது புரியுது. சரி மூன்றாம் விதியையும் இதே மாதிரி சொல்லு

ம்ம்ம்... சொல்றேன் சொல்றேன்

”For every action there is an equal and opposite reaction”

”ஒரு பொருளின் மீது செயல்படும் ஒவ்வொரு புறவிசைக்கும் அவ்விசைக்கு சமமானதும், எதிர் திசையிலும் அமைந்த எதிர் விசையை அப்பொருள் தருகிறது”

இது தான் நியூட்டனின் மூன்றாம் விதி.

இப்ப உனக்குப் புரியுற மாதிரி சொல்றேன் கேட்டுக்க

நான் உனக்கு அழுத்தமா ஒரு முத்தம் கொடுக்குறேன்னு வச்சிக்க
உடனே அதே வேகத்துல திரும்ப நீ எனக்கு அந்த முத்தத்தக் கொடுக்கிறதத் தான் நியூட்டன் தன்னோட மூன்றாம் விதியில சொல்லி இருக்கிறாரு.

என்ன புரிஞ்சுதா ?

ஆங்ங்... இத்தான் ச்சான்ஸுன்னு உன் ஆசைய நைசா சொல்லிடுவிய

ஹேய்... நீதானே உனக்கு புரியுற மாதிரி சொல்லச் சொன்ன அதான் சொன்னேன்

ம்ம்ம்... நான் சொல்லச் சொன்னது நியூட்டன் விதிய உன்னோட ஆசைய இல்ல

சரி சரி ஏதோ ஒன்னு உனக்குப் புரிஞ்சதா இல்லாயா ? இந்த முத்த விதி.

ஐயா சாமி ஆள விடுப்பா மொதல்ல, எக்ஸாமுக்குப் படிக்க வேண்டியது நெறைய இருக்கு....


( விதிகள் தொடரும் )

(விஞ்ஞான விதிகளை எளிய தமிழில் கதை வடிவில் சொல்ல ஒரு சிறிய
முயற்சியே தவிர வேறொன்றும் இல்லை பிழையிருப்பின் பொறுத்தருள்க)
Friday, November 7, 2008

உனையன்றி யாரறிவார் ?


எத்தனை இரவுகள் நனைந்திருப்பாய்
எத்தனை பகல்களில் உலர்ந்திருப்பாய்
உலர்ந்து போன உன்னில்
உறைந்து போயிருக்கும்
என்னின் சோகங்களை
சோகங்களின் ஈரங்களை
ஈரங்களால் கரைந்து போயிருக்கும்
என் வாழ்வின் வசந்தங்களை
எப்படிப் புரியவைப்பேன் அவளுக்கு

என்னை சந்தேகித்திருந்தால்
ஒரு வேளை சகித்திருப்பேன்
என் அன்பையல்லவா சந்தேகித்துவிட்டால்
பொறுக்க முடியவில்லை என்னால்
ஆண்கள் அழுவது அவமானம்
என்று சொல்லும் நானே அழுதிருக்கிறேன்
அழும் என் கண்களே
கரைந்து போகும் அளவிற்கு

நான் அழுததற்குக் கூட சாட்சி கேட்டால்
என்ன செய்வேன் ?
நான் அழுத கண்ணீரை
’தலைணையே’
உனையன்றி யாரறிவார்....!

Thursday, November 6, 2008

என்ன பேசிக்கொள்ளும்...
ஊரெல்லாம் காதல் மழை பெய்யும் போது
என்ன தான் நீ குடை பிடித்துச் சென்றாலும்
மழைச் சாரல் உன்னைத் தொடாமல் விடாது...


மழை வரும் போலிருக்கிறது
மறக்காமல் குடை எடுத்துப்போ
பிறகு,
நீ நனையும் அழகைப் பார்த்து
மழைக்குக் காய்ச்சல் 
வந்துவிடப் போகிறது...எதையும் தாங்கும் இதயம் வேண்டும்
இறைவனிடம் வேண்டுகிறேன்
என் காதலைத் தாங்கும்
இதயத்தை என்னவளுக்குக் கொடு...பேசியே கொல்கின்றன
உன் விழிகள்
பேசாமல் கொல்கின்றன
உன் இதழ்கள்...உன் மௌனமும்
என் மௌனமும்
சந்தித்துக் கொள்ளும்போது
என்ன பேசிக்கொள்ளும்...!

Wednesday, November 5, 2008

முதல் ஸ்பரிசம்நம் முதல் ஸ்பரிசம்
என் விரலில் காயம் பட்ட போது
உன் இதழால் என் விரல் தொட்டாயே
அப்போது,
என் மனம் எனக்குள் உறக்கக் கத்தியது
ஆஹா.. ஒரு வீணை
என் விரலை மீட்டுகிறது...