Friday, March 27, 2009

காதலுக்கு கொள்(கை)ளை அழகு...


தொடு வானம் தொட முடியாத தூரத்தில்
தொட்டுக் கொண்டிருக்கிறது
நீயோ
தொடக் கூடிய தூரத்திலிருந்தும்
இன்னும் தொடாமலே இருக்கிறாய்

துடுப்பில்லாத படகில் ஏறி
வெறும் கைகளினால்
ஒதுக்கித் தள்ளப்பட்ட
மேக அலைகளின் ஊடே
காற்றில்லாத கிரகத்தில் அமர்ந்து
கடும் தவம் இருப்பது சுலபம்
உணர்ந்த காதலை
உணர்த்தியவளிடம் சொல்லி விட்டு
இப்படி அவள் பதிலுக்காக
காத்திருப்பதை விட...

காதலை ஏற்றுக் கொண்ட
நீ
காலம் வரும் வரை
நம் காதலுக்கென்று
சில விதி முறைகளை
விதித்துக் கொள்கிறாய்
தொட்டுக்கொள்வதில்லை
கட்டிக்கொள்வதுமில்லை
’முத்தம்’....ம்ஹூம்...
அந்தப் பேச்சுக்கே இடமில்லை

நம் காதலில்
எனக்கிருந்த சில எதிர் பார்ப்புகளை
எதிர்கால ஆசைகளின்
சேமிப்பு வங்கியில்
பாதுகாத்து வைத்துவிட்டேன்
என்ன செய்வது....?
இதயத்திற்கு எட்டியது
இன்னும்
இதழ்களுக்கு எட்டவில்லையே...

அதுவரை சுடிதார் மட்டுமே
அணிந்து வந்த நீ
இப்போதெல்லாம் வெட்கத்தையும்
சேர்த்தே அணிந்து வருகிறாய்
காதல் என்றதும்
பெண்களின் நிழலுக்கு கூட
வெட்கம் வந்து விடுகிறது

எத்தனையோ முறை
உன் கண்களைப் பார்த்திருக்கிறேன்
அப்போதெல்லாம்
மின்மினிப் பூச்சிகளின்
மெல்லிய வெளிச்சத்தைப்
பார்ப்பது போல் பழகிய உன் விழிகள்
இந்தக் காதல் வந்த உடன்
மின்னலின் வெளிச்சத்தை போல்
சட்டென ஒளி பெற்று விடுகிறதே

காலம் காதலில் கரைந்து
இடைவெளி கொஞ்சமாய் குறைந்து
விதி முறைகள் மெல்லத் தளர்ந்ததில்

இப்போது...
நம் மூச்சுக் காற்றில்
முட்டி மோதிய உயிர்க் காற்று
மீண்டும் மீண்டும் முயன்று
முடியாமல் தோல்வியுற்று
அருகிலிருந்த மரத்தின்
இலைகளில் அமர்ந்து
களைத்துப் போய்
இளைப்பாறத் தொடங்கியது

இங்கே...
இடைவெளி தொலைத்த
இதழ்களின் தழுவலில்
முகவரி தெரியாத
மோட்சத்தின் வழிகளைத் தேடி
முந்திச் செல்கின்றன
நம் முத்தங்கள்...

விதி முறைகள் மீறப் படாமல்
இருப்பது தான் கொள்கைக்கு அழகு
ஆனால்,
கொஞ்சமாவது மீறப் படுவது தானே
காதலுக்கு கொள்ளை அழகு.............


Friday, March 20, 2009

நீ இல்லாத பொழுதுகளில்...அங்கு உன் இமைகளை நீ மூடுகிறாய்
இங்கு என்னை இருள் சூழ்ந்து கொள்கிறது
இனி எனக்கான வெளிச்சம்
உன் விழிகளிலிருந்து
மட்டுமே பெறக் கூடும்

என்னைக் கவர்வதற்காக
நீ
எந்த ஒரு முயற்சியும்
செய்திருக்கவில்லை
என்பதொன்றே
என்னக் கவர்ந்திருந்தது

அன்று தான்
உறவுகளால் அங்கீகரிக்கப்பட்ட
மனம் சேர்ந்த
நம் காதலின் நிச்சயதார்த்தம்

உன் கூந்தல் சூடியிருந்த
மலர்களின் வாசம்
உன் கைகளில் கரைந்திருந்த
மருதாணி வாசம்
இவையெல்லம் தாண்டி
வீடு முழுதும் வசப்பட்டிருந்தது
உன் செல்லச் சிரிப்பின் வசம்

உறவுகள் சூழ்ந்திருக்க
ஒருவரும் அறியாது
நாம் கைகோர்த்த நிமிடங்கள்
முத்தமிட்டுக் கொண்ட
நம் விரல்களைப்
பார்த்து பொறாமை கொண்டன
நம் இதழ்கள்

நீ அணிந்திருந்த
மிஞ்சியின் சத்தத்தில்
கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்த
நம் கால் விரல்கள்
என் கைகளுக்குள் சிக்காமல்
நீ காப்பாற்றி வைத்த
உன் கண்ணாடி வளையல்

உன் இமைகள் இமைக்கும்
ஓசை கேட்டு
இமைக்க மறந்திருந்த நிமிடங்கள்
என் விரல்கள்
உன் கூந்தல் கலைந்த போதெல்லாம்
உன் விழிகள்
என் மனதைக் கலைந்த
அந்த அழகிய தருணங்கள்

இவையெல்லாம்
நினைவுபடுத்துகின்றன
நீ இல்லாத பொழுதுகளில்
என்னிலும் அதிகமாய்
என்னில்
நீ
நிரப்பி வைத்திருக்கும்
உன் காதலை................


Friday, March 13, 2009

மெல்லிய பூக்களிலெல்லாம்...


உன் வெட்கத்தைக் கொஞ்சம்
கடன் வாங்கி மெல்லச் சிவந்தது
அந்தி வானம்
உன் ஒரு துளி வியர்வை பட்டு
அணையத் தொடங்கியது
மாலை சூரியன்

கடற்கரை மணற்பரப்பில்
உனக்காக நெடுநேரம் காத்திருக்கிறேன்
கோடானகோடி ஆண்டுகளாய்
உன் வரவுக்காக
அங்கு கடலும் காத்திருந்தது

முதன் முதலாய்
உன்னைப் பார்த்த மகிழ்ச்சியில்
அன்று கடல் அலையின் வேகம்
சற்று கூடித்தான் போயிருந்தது

அதுவரை கரை தாண்டிடாத கடலலைகள்
உன் பாதத்தையாவது
தொட்டு விட முயன்று கொண்டிருந்தன
நீயும் முயன்று கொண்டிருந்தாய்
என் கண்களுக்குள் சிக்கியிருந்த
உன் அழகைக் காப்பாற்றுவதற்காக

உன் கூந்தலில் சூடிக்கொள்வதற்காக
கிள்ளியெடுக்கப் பட்ட
மெல்லிய பூக்களிலெல்லாம்
அள்ளித் தெளிக்கப் பட்டிருந்தது
என் தொடுதலின் போது
உன் முகத்தில் பூத்திருக்கும்
வெட்கத்தின் வண்ணம்

ஊடலென்பதே கூடாதென்றிருந்தேன்
காதலில் நாம் மட்டும் விதிவிலக்கா என்ன...?
ஒன்றுமில்லாத ஒன்றிற்காக
நமக்குள் ஒரு சிறு ஊடல்
நீ என்னிடம் கோபமாயிருக்கிறாய்
தொட்டாலே பார்வையால் சுட்டுவிடுகிறாய்
என்ன செய்வது...?

அதுவரை முத்தம் கொடுத்த
குழந்தை சட்டென
கன்னத்தைக் கடித்துவிட்டால்
கோபமா வரும்...?
அள்ளியெடுத்துக் கொஞ்சத்தானே தோன்றும்
எனக்கும் அப்படித்தான் தோன்றியது...
முடிவில் யார் தான் வென்றது...?
வென்றது காதல்...
எப்படி...?
மனதில் தோன்றியதை
அப்படியே கடைபிடித்ததில்
ஊடல் தோற்றுவிட்டது.............


இந்த கவிதையை யூத்ஃபுல் விகடனில் படிக்க இங்கு செல்லலாம்...

 

Friday, March 6, 2009

எனக்கானதொரு தேவதை...


ஒளியின் வேகத்தை விஞ்சியிருந்தது
அந்த இரவின் இருள்
நம் பால்வெளி தாண்டி
பக்கத்து நட்சத்திரத்தில்
காத்திருந்தது எனக்கானதொரு
தேவதை...

வெளிச்ச இறகுகள் கொண்டு
வேயப்பட்டிருந்தது
அந்த தேவதையின் சிறகுகள்
நிலவின் ஈர்ப்பு விசைக்குக் கட்டுப்பட்ட
கடல் அலை போல அவள் பார்வையில்
என் எண்ண அலைகளும் கட்டப்பட்டிருந்தது…

தொலைந்து போவதற்கென்றே
தேடப்பட்ட என் மனது
மீண்டும் அவளிடமே
தொலைந்து போயிருந்த வேளையில்
விழிகள் நாணேற்றியதில்
அவளின் வெட்கம்
ஒடி ந்து...உ டை ந் த து...

சரியா..? தவறா...?
என்று சிந்திக்கும் முன்பே
ஆர்வமிகுதியில்
முடிந்தும் முடியாமல் போன
முத்தங்களின் மிச்சம்
அவள் இதழ்களின் நெருக்கத்தில்
நொறுங்கி விழுந்தது

உதடுகள் உரசிக் கொண்டதில்
உதிரத்தொடங்கி இருந்தது
அவளின் தேவதைக் காண
அடையாளச் சிறகுகள்
காதலிப்பதற்கு எதற்கு சிறகுகள் என்று
நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே
என் பின்னங் கழுத்துப் பகுதியில்
தண்டுவடத்தின் தொடர்ச்சியாக
சிறகுகள் வளர்வதாய்
ஓர் உள்ளுணர்வு...
உணர்வுகள் உண்மையாயின்
நாளை முதல் வேலையாகப்
பறப்பதற்குப் பழகிக்கொள்ள வேண்டும்
இல்லையெனில்...பாதகமில்லை
மீண்டும் இன்னொரு நாள்
இது போன்றதொரு
தேவதைக் கனவு
வராமலா போய்விடும்........?