கடந்த ஒரு வார காலமாக பத்திரிக்கைகளிலும், சமூக வலைத்தளங்களிலும், இன்னும் பல ஊடகங்களிலும் அந்தத் தங்கையின் முகத்தை பார்க்கும் போதெல்லாம் சில நொடிகள் விழிகள் விலக மறுக்கிறது, சட்டென கடந்து செல்ல இயலவில்லை இந்த உயிரிழப்பை.
அதிகார வர்க்கத்தின்
சர்வாதிகாரத்தால் இந்த இளம் தளிர் மருத்துவக் கனவுகளோடு கருகிவிட்டது. பொருளாதார வசதியில்
பின் தங்கிய நிலையிலிருந்தும் உச்சநீதிமன்றம் வரை சென்று போராடியிருக்கிறாள் என்றால், அவளுடைய இலட்சியத்தின் வீரியத்தை, கனவின் கனத்தை புரிந்து கொள்ள முடிகிறது.
பன்னிரு
வருடம் பாடு பட்டு படித்துப் பெற்ற மதிப்பெண்களுக்கு மதிப்பில்லாமல் போனதை பொறுத்துக் கொள்ள
முடியாமல் இந்த முடிவை எடுத்திருக்கிறாள். உயிர் துறக்க முடிவெடுத்த அந்த தருணத்தில் அவளுடைய மனதின்
வேதனையை நினைக்கும் போது என் இதயம் வேகமாக துடிப்பதை என்னால் உணர முடிகிறது, அவளுடைய
இதயம் எவ்வளவு வேகமாய் துடித்து அடங்கியிருக்கும்.
எல்லாம் வல்ல இறைவன்
இந்த தூய ஆத்மா
அமைதி பெற
அருள் புரி்யட்டும்…
என் மனதின் மத்தியில் ஒர் குற்ற உணர்வு, நம்மால் ஏதும் செய்ய இயலவில்லையே என்ற ஆற்றாமை. தவிர்க்க முடியாத ஒரு வலி வந்து போவதை என்னால் தவிர்க்க முடியவில்லை.
மறதி என்பது இயற்கை மனிதனுக்கு கொடுத்த மிகப் பெரும் மருந்து
இல்லையேல் ஒவ்வொரு மரணத்தையும் நினைத்து நினைத்து
இங்கு பல மரணங்கள் சம்பவித்திருக்கும்.
என் விருப்ப மெல்லாம்
ஒன்றே ஒன்று தான்
வாக்களிக்கும் நாள் வரையிலாவது
இந்தத் தங்கையின் மரணம்
மறக்கப் படாமலிருக்கட்டும்…
1 comment:
இயற்கையின் மாற்றங்களுக்கு ஈடு கொடுக்க முடியாத உயிரினங்கள் அழிந்து போகும் என்று டார்வின் சொன்னதை நினைவு கூறுங்கள். அந்தப் பெண் வேறு துறைகளில் தன் திறமையை வெளிக்கொணர்ந்திருக்கலாமே.
Post a Comment