
தொடு வானம் தொட முடியாத தூரத்தில்
தொட்டுக் கொண்டிருக்கிறது
நீயோ
தொடக் கூடிய தூரத்திலிருந்தும்
இன்னும் தொடாமலே இருக்கிறாய்
துடுப்பில்லாத படகில் ஏறி
வெறும் கைகளினால்
ஒதுக்கித் தள்ளப்பட்ட
மேக அலைகளின் ஊடே
காற்றில்லாத கிரகத்தில் அமர்ந்து
கடும் தவம் இருப்பது சுலபம்
உணர்ந்த காதலை
உணர்த்தியவளிடம் சொல்லி விட்டு
இப்படி அவள் பதிலுக்காக
காத்திருப்பதை விட...
காதலை ஏற்றுக் கொண்ட
நீ
காலம் வரும் வரை
நம் காதலுக்கென்று
சில விதி முறைகளை
விதித்துக் கொள்கிறாய்
தொட்டுக்கொள்வதில்லை
கட்டிக்கொள்வதுமில்லை
’முத்தம்’....ம்ஹூம்...
அந்தப் பேச்சுக்கே இடமில்லை
நம் காதலில்
எனக்கிருந்த சில எதிர் பார்ப்புகளை
எதிர்கால ஆசைகளின்
சேமிப்பு வங்கியில்
பாதுகாத்து வைத்துவிட்டேன்
என்ன செய்வது....?
இதயத்திற்கு எட்டியது
இன்னும்
இதழ்களுக்கு எட்டவில்லையே...
அதுவரை சுடிதார் மட்டுமே
அணிந்து வந்த நீ
இப்போதெல்லாம் வெட்கத்தையும்
சேர்த்தே அணிந்து வருகிறாய்
காதல் என்றதும்
பெண்களின் நிழலுக்கு கூட
வெட்கம் வந்து விடுகிறது
எத்தனையோ முறை
உன் கண்களைப் பார்த்திருக்கிறேன்
அப்போதெல்லாம்
மின்மினிப் பூச்சிகளின்
மெல்லிய வெளிச்சத்தைப்
பார்ப்பது போல் பழகிய உன் விழிகள்
இந்தக் காதல் வந்த உடன்
மின்னலின் வெளிச்சத்தை போல்
சட்டென ஒளி பெற்று விடுகிறதே
காலம் காதலில் கரைந்து
இடைவெளி கொஞ்சமாய் குறைந்து
விதி முறைகள் மெல்லத் தளர்ந்ததில்
இப்போது...
நம் மூச்சுக் காற்றில்
முட்டி மோதிய உயிர்க் காற்று
மீண்டும் மீண்டும் முயன்று
முடியாமல் தோல்வியுற்று
அருகிலிருந்த மரத்தின்
இலைகளில் அமர்ந்து
களைத்துப் போய்
இளைப்பாறத் தொடங்கியது
இங்கே...
இடைவெளி தொலைத்த
இதழ்களின் தழுவலில்
முகவரி தெரியாத
மோட்சத்தின் வழிகளைத் தேடி
முந்திச் செல்கின்றன
நம் முத்தங்கள்...
விதி முறைகள் மீறப் படாமல்
இருப்பது தான் கொள்கைக்கு அழகு
ஆனால்,
கொஞ்சமாவது மீறப் படுவது தானே
காதலுக்கு கொள்ளை அழகு.............