
வேலை நிமித்தமாக ஒரு மாத காலம் வெளியூர் செல்கிறேன். நம் திருமணத்திற்குப் பின் நாம் சந்திக்கும் முதல் பிரிவு அது. நான் புறப்படும் போது கட்டி அணைத்து நீ கொடுத்த முத்தத்தின் ஈரம் பயணக்களைப்பில் முகம் கழுவிய போதும் கலையாமல் இன்னும் அப்படியே இருக்கிறது. இதற்கு முன் எத்தனையோ நாட்கள் தனிமையில் இருந்திருக்கிறேன் உணர்ந்ததில்லை. இப்போது தான் தனிமை என்னைத் தத்தெடுத்துக் கொண்டதாய் ஒரு தவிப்பு. உன் காதலின் கட்டுப்பாட்டில் கடந்து சென்ற அந்த அழகான நாட்களின் நினைவுகள் கண்ணாடியில் தோன்றும் பிம்பங்களாய் என் மனக் கண்ணாடியில் பிரதி பலிக்கின்றன.
மணமான முதல் நாள் நான் உன் விரல் தொட்ட போது ஏற்பட்ட திடீர் ஸ்பரிசத்தில் உன் உடல் நடுங்கிய அந்த அழகிய நிமிடங்கள். முதல் முத்தத்தின் போது விழிகளுக்கும் இதழ்களுக்கும் இடையே நடந்த அந்த வெட்கப் போராட்டம். இப்படி நினைத்து நினைத்து ஆனந்தப்பட ஆயிரம் நினைவுகள் என் மனதில்.
கணினி நுட்ப்பங்களையும் ஜாவா போன்ற கணினி மொழிகளையும் சுலபமாகக் கற்றுத் தெரிந்து கொண்ட எனக்கு நம் மணமான புதிதில் உன் வெட்க மொழி புரியாமல் தடுமாறி இருக்கிறேன் பல முறை. வேண்டுமென்றால் வேண்டுமென்றும் வேண்டாமென்றாலும் வேண்டுமென்றும் அர்த்தமாமே உன் வெட்க மொழியில். எந்த ஒரு அகராதியிலும் படித்ததாய் நினைவில் இல்லை இது போன்ற அழகிய அர்த்தங்களை.
அந்த மழைக்கால மாலைப் பொழுதில் மயில்தோகை நிறத்தில் புடவை அணிந்து நீ நடந்து வந்த அழகைப் பார்த்திருந்தால் மயில்கள் மயங்கித்தான் போயிருக்கும். சூடான தேனீர் கோப்பையுடன் இனிப்பான பலகாரத்தட்டுகளுமாய் என் அருகில் அமர்ந்து ஆசையாய் ஊட்டி விட்டுப் பின் கடைசியாய் நீ கொடுத்த முத்தம் அந்த மழை நேரக் குளிருக்கு சூடான தேனீரை விட சூடாகத்தான் இருந்தது. அதன் பிறகு உன் முத்தத்தின் தித்திப்பில் இனிப்பான பலகாரம் இனிப்பின்றிப் போனது ஒன்றும் ஆச்சர்யமில்லை.
நினைவலைகள் நீண்டு கொண்டே போகின்றன நிலவொளியின் எதிர்த் திசையில் நிழல்கள் நீள்வது போல்.
கைகளில் பட்டுத் தெரிக்கும் மழைத் துளியின் சிதறல்களை ரசிக்கும் குழந்தையைப் போல் உன் கன்னத்தில் பட்டு தெரிக்கும் உன் வெட்கச் சிதறல்களை ரசிப்பதற்காக வேணும்...இது போன்ற இனியொரு பிரிவுப் பயணத்தை தவிர்த்திட வேண்டும். முன்னைக் காட்டிலும் ஆவலாய் இருக்கிறேன் உன்னைப் பார்ப்பதற்கு...எனக்குத் தெரியும் நீ என்னைக் காட்டிலும் ஆவலாய் இருப்பாயென்று............................