
மூன்றெழுத்தில் ஒரு பிரபஞ்சம்
முதுமையில்லா ஒரு முழுமை
தன்னலமில்லாத் திருஉளம்
பத்துத் திங்கள் பத்தியமிருந்து
பிரசவம் என்னும் மறுபிறப்பெடுத்து
ஈன்ற உந்தன் புன்னகை கண்டு
தான் பெற்ற இன்னல்
உன் கண்ணில் மறக்கும்
உன்னத உறவே தாய்மை !
உதிரத்தை உணவாக்கி
மனமகிழ உனக்களித்து
உன் மழலைச் சொல் கேட்டு
தன் துயரம் தான் மறந்து

நீ உறங்கும் வேளையிலே
தாலாட்டித் தொட்டிலிட்டு
தன் உறக்கம் தான் மறக்கும்
தியாகத் திரு உருவே தாய்மை !!
உலகமெலம் ஒன்றாகி
உன்னைக் குற்றம் சாட்டினாலும்
குற்றத்தின் தண்டனையாய்
தூக்கு மேடை ஏற்றினாலும்
ஒரு உள்ளம் வாதடும்
உனக்காகப் போராடும்
அது தாய்மை என்னும்
திரு உள்ளம் !!!

பார் முழுதும் பாவங்கள்
பெருகிய பின்னாலும்
பூமி பிழைத்திருக்கும்
காரணம் என்னவென்றால்
தாய்மை இருப்பதினால்
தரணி இன்னும் அழியவில்லை !?
தாய்மை எனும் தூய்மையின் மேல்
இறைவனுக்கும் இரக்கம் உண்டு,
தாய்மை உள்ள வரை
தரணி பிழைத்திருக்கும்
தரணி உள்ள வரை
தாய்மையும் நிலைத்திருக்கும்....